ஏழு மணிக்கு முன் வீடுகளுக்குத் திரும்பிவிடுங்கள்!

பாரிஸ் வாழ் மக்களுக்கு பொலீஸார் ஆலோசனை

Kumarathasan Karthigesu-பாரிஸ்

போக்குவரத்து நெருக்கடிகளைக் கவனத்தில் கொண்டு இயலுமானவரை மாலை ஏழு மணிக்கு முன்னராக இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடுங்கள். -இவ்வாறு பாரிஸ் பிராந்திய மக்களுக்குக் – குறிப்பாகப் பிரதான வீதிகளைப் பயன்படுத்துவோருக்குப்- பொலீஸ் தலைமையகம் ஆலோசனை வழங்கியிருக்கிறது.

 

பாரிஸ் நகரை உள்ளடக்கிய இல்-து-பிரான்ஸ் பிராந்தியத்தில் இன்று புதன் கிழமை இரவும் நாளை வியாழக் கிழமையும் கடும் பனிப் பொழிவும் உறை பனித் தூறலும் ஏற்படலாம் என்று எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. இதனால் நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகச் சில பிரதான வீதிகள் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது.

 

மழையுடன் கூடிய உறைபனி வீதிகளில் போக்குவரத்து நெருக்கடிகளை ஏற்படுத்தலாம். அதனால் வாகன நெரிசல்களில் நீண்ட நேரம் சிக்குண்டு தரித்து நிற்கவேண்டிய நிலை காணப்படுகிறது. எனவே பெருந் தெருக்கள் வழியே வீடுகளுக்குப் பயணிப்போர் நேரகாலத்துடன்-ஏழு மணிக்கு முன்பாக – இருப்பிடங்களுக்குச் சென்றுவிடுவதன் மூலம் வீண் சிரமங்களைத் தவிர்க்கலாம் – என்று அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

 

பாரிஸ் பிராந்தியத்தின் வடமேற்குப் பகுதிகளில் மழையுடன் கூடிய பனிப் பொழிவு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. அது தென் கிழக்குப் பகுதிகளுக்கும் விரிவடையவுள்ளது. பாரிஸின் Seine-et-Marne, Yvelines, Essonne, Hauts-de-Seine, Seine-Saint-Denis, Val-de-Marne, Val-d’Oise ஆகிய பகுதிகளில் ஏற்கனவே செம்மஞ்சள் காலநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.