ஒரே கதையில், ஒரு கண்ணில் சிரிக்கும் கண்ணீரையும், மறு கண்ணில் உடைந்து அழும் கண்ணீரையும் வரவழைத்த மெய்வெளி சாம் பிரதீபனின் நாடகம்!

- தேவிகா அனுரா -

06 /01 /24 அன்று லண்டன் நகைச்சுவை மன்றத்தினரால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பொன்மாலைப் பொழுது 2024 என்ற தமிழர் கலாச்சார நிகழ்வு ஒன்றில் நாம் கலந்திருந்த தருணம் …
அங்கே பல்சுவை நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருந்த அரங்கில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களைக் கொண்ட மண்டபம் ஒன்றை சமீப கால இடைவெளிக்குப் பின் அங்கே பார்க்கக் கூடியதாக இருந்தது .

நிகழ்ச்சிகள் தேர்ந்த கலைஞர்களால் மேடையேறிக் கொண்டிருந்த நேரத்தில்
“எங்கட சனங்கள் ” என்ற ஓர் ஆள் அரங்க நிகழ்வு ஒன்று நாடக உலகின் புகழ் பூத்த முன்னனிக் கலைஞனாகத் திகழும் மதிப்புக்குரிய சாம் பிரதீபன் அவர்களால் அவரது தயாரிப்பில் அவரது நடிப்பில் அரங்கேறியது .

அவர் அரங்கில் உள் நுழைந்த அக்கணமே அவரின் தோற்றம் ஏதோ ஒரு கனதியான கதையாக இருக்குமோ என்று எமக்கெல்லாம் எண்ணத் தோன்றியது உண்மையே .ஆம் அந்த கணத்திலிருந்து 45 நிமிடம் வரை நாம் அந்த மண்டபத்தில் இருப்பதையே மறக்கடித்து நாம் தொலைத்த முகங்களை எங்களைக் கொண்டே தேட வைத்து விட்டார் அந்த மாபெரும் கலைஞன் .

எத்தனையோ உறவு உருவங்களை தனி ஒருவராக 45 நிமிடத்தில் வாழ்ந்து காட்டி விட் டுப் போன அவர் அம்மாவாக , அப்பாவாக , குழந்தையாக , இளைஞனாக , யுவதியாக , நண்பனாக , மச்சாளாக , இராணுவமாக அடடா ! இத்தனை உருவங்களையும் ஒரு ஓட்டைச் சைக்கிளையும் , ஒரு குழந்தையின் pushchair ம் வைத்து வாழ்ந்து காட்டிய அந்த நடிப்பு , அவர் குரலில் ஓடிய இழை அங்கிருந்த ஒவ்வொருவர் இதயத்தையும் அம்பாக துளைத்து அவரவர் முகங்களை எங்களைக் கொண்டே தேட விட்ட அசாத்தியத் திறமை … என்னவென்பது சொல்லிக் கொண்டே போகலாம் .

ஒரு கதையில் ஒரு கண்ணில் சிரிக்கும் கண்ணீரையும் , மறு கண்ணில் உடைந்து அழும் கண்ணீரையும் வரவழைத்த பெருமை அந்த ஒப்பற்ற கலைஞனின் தனி உழைப்பாலும் , திறமையாலும் மட்டுமே சாத்தியமான ஒன்று .

பொதுவாக ஒரு நாடகத்தின் வெற்றிக்கு , அல்லது பாராட்டிற்கு , அல்லது மற்றவர்களால் கொண்டாடப் படுவதற்கு ஏகப்பட்ட விடயங்கள் பின்னணியில் இருக்கும் . பின்னணி இசை , அலங்காரம் , உபகரணங்கள் , உடை என்று பலவிதமாக அவை தெரியும் .

45 நிமிட ஓராள் அரங்க நிகழ்வில் தேவைப்படும் இடத்தில் மட்டும் மெல்லிய இசை , குழந்தை ஒன்றின் அழுகுரல் , ஓட்டை சைக்கிள் , ஒரு pushchair இவற்றை மட்டும் தனக்கு உதவியாக வைத்து புலம்பெயர் வாழ்வியலை வாழ்ந்து காட்டி விட்டு சென்ற அந்தக் கலைஞன் நிச்சயம் ஒரு பிறவிக் கலைஞனாகத்தான் இருக்க முடியும் .
“அப்புச்சி உனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல . நீ British born. அப்பனுக்குத் தான் எல்லாப் பிரச்சனையம் “என்ற அவரின் அந்த உச்சம் தொட்ட வரிகள் எப்போதும் எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கப் போகின்றது என்பதை மண்டபம் நிறைந்த அன்றைய கரகோஷம் கோடிட்டுக் காட்டுகிறது .

தமிழ் கூறும் நல்லுலகில் நாடகத் தமிழில் புகழ் பூத்த கலைஞர்கள் இருந்து மறைந்தாலும் , அருகிக் கொண்டே போனாலும் இவரைப் போன்ற கலைஞர்கள் இன்னும் தமிழையும் , தமிழர் தம் வாழ்வியலையும் நாடகத் தமிழ் மூலமும் , இயல் தமிழ் மூலமும் எங்கள் மத்தியில் கட்டி எழுப்பிக் கொண்டிருப்பது தமிழ் கூறும் நல்லுலகிற்கு கிடைத்த வரப்பிரசாதம் , பொக்கிஷம் என்றே கொள்ள வேண்டும் . கலையே நீ வாழி ! கலைஞனே நீ வாழி !

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு