போலி கிரிப்டோகரன்சி மோசடியில் சிக்கிய இலங்கையர்கள்! மில்லியன் கணக்கில் இழப்பு என்கிறது அல்ஜெசீரா ஊடகம்
Kumarathasan Karthigesu
போலியான கிரிப்டோ கரன்சி (cryptocurrency) முதலீட்டுத் திட்டத்தின் பேரில் பெரும் மோசடி நடந்துள்ளது என்றும் அதனால் நூற்றுக்கணக்கான இலங்கை முதலீட்டாளர்கள் மில்லியன் கணக்கான ரூபாய்களை இழந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கிரிப்டோகரன்சி டிஜிட்டல் நாணய முதலீட்டுத் திட்டம் சர்வதேச அளவில் பிரபலமடைந்து வருகிறது அதேசமயம் அதில் போலியான முதலீட்டு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.
அத்தகைய ஒரு மோசடியில் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பான பல தகவல்களை அல்ஜெசீரா செய்தி ஊடகம் பாதிக்கப்பட்டவர்களது செவ்விகளோடு வெளியிட்டுள்ளது.
மருத்துவர்கள் முதல் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தோர், நடுத்தர வர்க்கத்துக்கும் குறைந்த வருமானம் பெறுகின்ற கிராமவாசிகள் வரை பல தரப்பட்டவர்களும் பெரும் ஆதாயம் பெறும் நோக்கில் தங்கள் சொத்துக்களை விற்று அந்தப் பணத்தை கிரிப்டோகரன்சியில்
முதலிட்டுள்ளனர். தென் கொரியா, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் தொழில் புரிகின்ற இலங்கையர்களே அதிக அளவில் இந்த மோசடி முதலீட்டுத் திட்டத்தில் பணத்தை இழந்துள்ளனர் என்பதை அல்ஜெசீரா வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையில் பெரும் பொருளாதார நிதி நெருக்கடி நிலை தோன்றியதால் வங்கிகள் வங்குரோத்தாகும் கட்டம் வரலாம் என்று அஞ்சிய பலரும் வங்கிகளில் சேமித்து வைத்திருந்த பணத்தை மீளப் பெற்று அதனை கிரிப்டோகரன்சியில் முதலீட்டுப் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.
2020 இல் “ஸ்போர்ட்ஸ் செயின்” “(Sports Chain”) என்ற பெயரில் கிரிப்டோகரன்சி என்று கூறித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்திய இலங்கை மற்றும் சீனா பிரஜைகள் இருவர் தங்களைச் சீன முதலீட்டாளர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டு நாட்டில் இயங்க அனுமதிக்கப்பட்டனர் என்பதை இலங்கை அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.ஆனால் கிரிப்டோகரன்சி சொத்துக்களைக் கண்காணிக்கின்ற CoinMarketCap என்ற இணையத் தளம், “ஸ்போர்ட்ஸ் செயின்”(Sports Chain”)என்ற பெயரில் கிறிப்டோகரன்சி எதுவும் பதிவு செய்யப்படவோ அல்லது வர்த்தகத்தில் ஈடுபடவோ இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
-இத்தகவல்களை அல்ஜெசீரா வெளியிட்டுள்ளது.