நோர்வே மக்களை கவர்ந்த ஆபத்தான ஆழ் கடல் விலங்கு.. கருணைக் கொலை! சரியான முடிவு என்று அதை நியாயப்படுத்துகிறார் பிரதமர்.

Kumarathasan Karthigesu

நோர்வே நாட்டின் கரைகளில் கடந்த சில வாரங்களாகத் தோன்றி மக்களைக் கவர்ந்த ஃப்ரேயா (Freya) என்ற வால்ரஸ் ஆழ்கடல் விலங்கு  ஆழ் மயக்கத்துக்கு உட்படுத்தி உயிரிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது.

மனிதப் பாதுகாப்புக்கு ஏற்படக் கூடிய அனைத்துவகையான ஆபத்துக்களையும் கவனத்தில் கொண்டு – உலகளாவிய மனிதப் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளின் அடிப்படையில்- அதனைக் கருணைக் கொலை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்று நோர்வேயின் கடற்றொழில் இயக்குநரகம் தெரிவித்திருக்கிறது.

ஃப்ரேயாவைக் கருணைக் கொலை செய்ய எடுத்த முடிவு “சரியானதே” என்று நோர்வே பிரதமர் ஜோனாஸ் ஹர் ஸ்டோர்(Jonas Gahr Støre) சர்வதேச அளவில் அதிகரித்துவரும் கண்டனங்களுக்கு மத்தியில் நியாயப்படுத்தியுள்ளார்.

வால்ரஸ் (walrus) என்பது முகத்தில் இரண்டு தந்தங்களையுடைய பாரிய கடல் வாழ் விலங்கு. குழப்பமுற்றால் மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்த வல்லது. ஆர்ட்டிக் ஆழ் கடலில் வசிக்கின்ற இந்த வகை விலங்குகளில் ஆணுக்கு முகத்தில்

நீண்ட தந்தங்களும் பெண்ணுக்கு சிறிய பற்கள் போன்ற இரு தந்தங்களும் காணப்படும். மிகப் பெரிய கடல்வாழ் பாலூட்டி விலங்கினங்களில் ஒன்றாகிய அது சுமார் இரண்டாயிரம் கிலோ வரை எடையுடையது.

சுமார் அறுநூறு கிலோ எடையுடைய சிறிய வால்ரஸ் பெண் விலங்கு ஒன்று சமீப காலங்களில் ஆர்டிக் கடலில் இருந்து விலகி இங்கிலாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவீடன் கடற்பரப்புகளில் தென்பட்டது.

கடந்த ஜூலை 17 ஆம் திகதி முதல் அது நோர்வே தலைநகர் ஒஸ்லோ கரையில் தென்படத் தொடங்கியது.

ஒஸ்லோ fjord கடலில் சூரிய ஒளியில் அது குளித்து மகிழ்ந்த காட்சி காணத் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதியது. காண்போரை வியப்பில் ஆழ்த்திக் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த அந்த இளம் பெண் விலங்குக்கு உள்ளூர்வாசிகள் அழகு மற்றும் அன்பின் தெய்வத்தைக் குறிக்கின்ற ஃப்ரேயா (Freya) என்ற பெயரைச் சூட்டி அழைத்தனர்.

சில சமயங்களில் நீய்ச்சல் அடிக்க திரண்டவர்கள் அதிகாரிகளது எச்சரிக்கையை மீறிக் கூட்டமாக  அதனை நெருங்க முற்படவே அது கலவரமடைந்தது. மீன் பிடிப் படகுகளில் பாய்ந்து ஏறிக் கவிழ்த்து  ஆபத்து விளைவிக்கலாயிற்று. எவரும் கடலுக்கு நீந்தச் செல்வது  தடுக்கப்பட்டது. நீண்ட நேரம் தூங்கும் இயல்புடைய அது ஆட்கள் விடாமல் அதனை நெருங்கிப் படம் எடுப்பதால் தூக்கத்தை இழந்து காணப்பட்டது. அது படகுகள் மீது ஏறித் தூங்கும் காட்சிகள் சமூக ஊடகங்களை நிறைத்தன. அதனைப் பார்க்கத் திரண்ட உல்லாசப் பயணிகள் அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி அதன் அருகில் நெருங்கிப் படங்களை எடுத்துப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

விலங்குகளைப் பாதுகாக்கின்ற அமைப்புகள் ஃப்ரேயாவைக் கொல்ல எடுத்த தீர்மானத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளன.அதனை வேறு ஒரு பகுதிக்கு இடம் நகர்த்த ஏன் முழு முயற்சி எடுக்கப்படவில்லை என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

விலங்கை ஆழ் கடல் பகுதிக்கு நகர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் நோர்வே கடல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.  இருப்பினும், அது மிகவும் சிக்கலானதாகக் கருதப்பட்டது-என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருங்க வேண்டாம் என்ற எச்சரிக்கையை மீறுவோரைத் தண்டிப்பதை விடுத்து மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் விலங்கைக் கொல்ல எடுத்த தீர்மானத்தை ஏற்க முடியாது. அரசு இது தொடர்பாகப் பூரண விளக்கம்  அளிக்கவேண்டும் – என்று விலங்கு உரிமை பேணும் அமைப்புகள் சார்பில் கோரப்பட்டுள்ளது.

ஒரு காட்சிப் பிரபலம் மிக்க விருந்தாளியாக மாறிய ஃப்ரேயா அதன் பார்வையாளர்களாலேயே கொல்லப்பட்டு விட்டது. அதைப் பார்க்கத் திரண்டவர்களே அதன் கொலைக்குப் பொறுப்பாளிகள் என்று நோர்வேயின் பிரபலங்கள் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஃப்ரேயாவுக்கு அதே கடற் கரையில் சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பும் அளவுக்கு அதன் மரணம் நோர்வே மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்திவிட்டது.

ஆர்ட்டிக் கடல் பகுதியில் வசிக்கும் அரியவகை உயிரினமாகிய பெலுகா வெண்ணிறத் திமிங்கிலம் ஒன்று அண்மையில் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரான்ஸின் செய்ன் நதிக்குள் வந்து சிக்குண்டதும் சவாலான மீட்புப் பணி ஒன்றின் பின்னர் அதன் உடல் நிலை மோசமடைந்த காரணத்தால் அது கருணைக் கொலை செய்யப்பட்டமையும் தெரிந்ததே.