கடும் வரட்சிக்குப் பின் இடிமுழக்கத்துடன் புயல் மழை எதிர்பார்ப்பு! நாடு முழுவதும் எச்சரிக்கை

Kumarathasan Karthigesu

நாட்டில் பல வாரங்கள் நீடித்த அனல் வெப்பக்(canicule) காலநிலையைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மோசமான புயல் மழை பொழியக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரு நிலப்பரப்பு முழுவதும் மஞ்சள் முன்னெச்சரிக்கை (vigilance jaune) விடுக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய்க்கிழமை இரவும் புதன் கிழமையும் நாட்டின் தென் பகுதிகளில் கடுமையான புயல் மழை அல்லது சடுதியான ஆலங்கட்டி(hail) மழை, சுழல் சூறாவளி (tornadoes) என்பன தோன்றலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஆறு மாவட்டங்களில் செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இந்த முறை கோடை காலம் வரலாறு காணாத வெப்பத்தையும் அதன் விளைவான கடும் வரட்சியையும் உருவாக்கியுள்ளது. மத்தியதரைக் கடல் பகுதியில் ஏற்பட்ட வெப்ப அமுக்கம் காரணமாகவே பிரான்ஸ் உட்பட பல நாடுகளை அனல் காற்று வறட்டி எடுத்துள்ளது. நதிகள், நீர் நிலைகள் வற்றி வருகின்றன.

ஜூலை 17 ஆம் திகதி முதல் நாட்டின் தரைப் பகுதிகள் நீர்த்தன்மை இழந்து வரலாறுகாணாத அளவுக்கு வரட்சியடைந்துள்ளன என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரட்சிக்குப் பின்னர் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்ற இடிமுழக்க மழை குளிர்ச்சியை ஏற்படுத்திவிடப் போவதில்லை என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இடிமுழக்கத்துடன் பெய்கின்ற தற்போதைய மழை குறைந்த நேரத்தில் கொட்டித் தீர்க்கும் தீவிரத் தன்மை கொண்டது. அதனால் மழை நீர் சீராகத் தரைப்பகுதிகளால் உறிஞ்சப்படுவதற்கு வாய்ப்பில்லை

அதற்குள் நீர் ஆவியாக மாறிவிடும்  என்பதால் வரட்சி நிலை தொடர்ந்து நீடிக்கவே வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வரண்டு காய்ந்த நிலம் திடீரெனக் கொட்டும் மழை நீரை உள்வாங்கத் தாமதம் ஏற்படும் என்பதால் வெள்ள நிலைமை உருவாகலாம். அதேசமயம் வழமைக்கு மாறாக இடி மின்னல் அதிகரித்துள்ளதால் மின்னல் தாக்கும் சம்பவங்கள் இடம் பெறலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.