கழுத்தில் நஞ்சைக் கொடுப்பதிலும், களத்தில் வெஞ் சமரைத் தொடுப்பதிலும் மூர்க்கம் கொண்ட ஒரு போராட்ட தலைவனிடம் தன் தேச வளங்களைக் கொண்டாடும் இத்துணை மார்க்கம் இருக்க முடியுமா?
வாழும் காலத்தின் சாட்சியம் - 2 - சாம் பிரதீபன் -
எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை அந்த ஆச்சரியம் நிகழப்போகிறதென்று. எதிர்பாராத தருணம் ஒன்றில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அது நிகழ்ந்து முடிந்திருந்தது. எது என் வாழ்வில் நிகழ்ந்தால் அது ஒரு பேறு என நினைத்தேனோ அந்தப் பேறு இவ்வளவு விரைவாக இத்துணை நெருக்கமாக நிகழும் என சத்தியமாய் நான் நினைத்திருக்கவில்லை.
எந்தவொரு விடயத்தை செய்ய முற்பட்டாலும் அந்த விடயத்தை மிக வேகமாக கற்றுக்கொண்டு அதில் ஆழ ஊடுருவி செய்து முடித்தல் சிறு வயது முதல் எனது இயல்பாக இருந்து வந்ததை நான் அறிவேன். என் நண்பரும் அதை அறிவர். அந்த இயல்பில் நான் இருந்தது கூட இந்த ஆச்சரியம் இத்தனை விரைவாக எனக்கு நிகழ்வதற்கு ஒரு காரணமாய் இருக்கலாம் போலும்.
அப்போது 1993 என நினைக்கிறேன். வேலையில் இணைந்து ஆறு மாதங்கள் தான் இருக்கும். மூன்று வாரங்களாய் இரவு பகலாக வரவிருக்கும் மே தின பேரணிக்காக பம்பரமாய் சுழன்றபடி இருக்கிறேன். தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஊடகப் பிரிவு சார்பான பிரமாண்ட ஊர்திக்கான அலங்கரிப்புகள், பதாதைகள், வாசகங்கள், கோஷங்கள், கவிதைகள் என ஒரு சில குருவிகளின் தலைகளில் மாத்திரம் அப்போது பனம்பழம் வைக்கப்பட்டிருந்தது. நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. மே 1 அதிகாலை 3.00 மணியிருக்கும் கவிதைத் துணுக்குகள் எழுதிய குறையில் எனக்கே தெரியாமல் எனது அலுவலக மேசையில் சரிந்து உறங்கிப் போயிருந்தேன் என்பது அந்தக் கைகள் எனது தோளைத் தட்டி எழுப்பும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை. தட்டி எழுப்பிய கைக்குரியவர் நிறுவனத்தின் பணிப்பாளர் றூட் ரவி அண்ணா. அருகே சுடச் சுட தேநீரும் கடலை வடை இரண்டும் எனக்காய் வைக்கப்பட்டிருந்தது. என்னைப் பற்றி என்ன நினைத்தாரோ தெரியவில்லை இரண்டு நாட்களின் பின்னர் அலுவலகத்திற்கு வந்த நிர்வாகக் கிளையின் கடிதத்தில் நான் செய்தி வெளியீட்டுக் கிளையின் உதவிச் செயலாளராக பணி உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு செயலாளராக இருந்தவர் தான் இணுவையூர்
சிதம்பர திருச்செந்திநாதன் அண்ணா. அப்படி ஒரு நாளில் இப்படி ஒரு பணி உயர்வு கிடைத்திருக்காது விடின் பின்னர் நிகழ்ந்த அந்த ஆச்சரியம் எனக்கு இப்போது வரை நிகழ்ந்திருக்காது என்றுதான் நம்புகிறேன்.
ஒரு நாள் மதியப் பொழுது தாவடியில் தரித்து நின்ற ஒரு பழைய CTB பஸ்ஸில் நான் ஏற்றப்படுகின்றேன். என்னோடு சேர்த்து இன்னும் பத்துப் பேர் ஏற்றப்படுகின்றார்கள். ஏற்றப்படுவதற்கு முதல் எனது காற்சட்டை Belt மற்றும் Purse போன்றவற்றை கையளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தேன். எனக்கு எதுவும் அப்போது புரியவில்லை. பஸ்ஸின் யன்னல் கண்ணாடிகள் எல்லாம் பழைய உதயன் பேப்பரால் மறைத்து ஒட்டப்பட்டிருந்தது. உள்ளே என்னுடன் கூட இருந்தவர்கள் பேயறைந்தது போல இருந்தமை, அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. சிதம்பர திருச்செந்திநாதன் அண்ணாவும் சிதம்பர சக்கரத்தை பேய் பார்த்தது போல இருந்தார்.
மாலை நான்கு மணிவரை அங்கேயே எம்முடன் தரித்து நின்ற பஸ் இப்போது இன்னும் நால்வரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. முதலில் ஏற்றப்பட்ட பத்துப் பேரும் நிறுவன பணியாளர்கள் என்பதால் எனக்கு முதலே அறிமுகமானவர்கள் ஆனால் இப்போது ஏற்றப்பட்டிருந்த நால்வரையும் இன்று வரை எனக்கு யார் எனத் தெரியாது.
ஒருவகையான கலவரமும் பதட்டமும் எல்லோர் மனங்களிலும் இருந்ததை அவரவர் முகங்கள் அடையாளம் காட்டத் தவறவில்லை. பஸ்ஸினுள் ஒருவித அமைதி அப்பிக் கிடந்தது. அந்தப் பதட்டத்தின் நடுவேயும் யன்னல்கள் மறைத்து ஒட்டப்பட்டிருந்த உதயன் பேப்பர்களின் இடைவெளிகள் ஊடாக வாகனம் செல்லும் தெருக்களை விடுப்புப் பார்ப்பதில் நான் மிகக் கவனமாக இருந்தேன். யாழ் நகரப்பகுதிக்கு வந்த வாகனம் முற்றவெளி, கோட்டை, பண்ணைப் பாலம், கே.கே.எஸ் வீதி, தட்டாதெருச் சந்தி, ஐஞ்சு முச்சந்தி, மீண்டும் கே.கே.எஸ் வீதி, கோட்டை என ஒரு பத்து பதினைந்து தடவைகள் சுற்றியபடியே இருந்தது. இடையில் ஒரு தடவை ஆரியகுளம் சந்திக்குப் போய் பின்னர் ஆஸ்பத்திரி வீதி வழியாக மீண்டும் கே.கே.எஸ் வீதிக்கு வந்து பழைய சுத்தை மீண்டும் சுத்தத் தொடங்கியிருந்தது.
செல்லும் இடத்தை யாரும் தெரிந்துவிடக்கூடாது என்பதில் வாகனம் மிக கவனமாக இருப்பதாக எனக்குப் பட்டது.
வாகனங்களில் ஏறினால் அதிக நேரம் விழித்திருக்க முடியாமல் விரைவில் தூங்கிவிடுவது எனது பலவீனங்களில் ஒன்று. எவ்வளவு நேரம் தூங்கினேன் எனத் தெரியவில்லை முழித்துப் பார்த்தபோது பஸ் பிரதான வீதி வழியாக சென்று பற்றிக்ஸ் வீதியால் திரும்பி நான் படித்த பத்திரிசியார் கல்லூரி தாண்டி பாங்ஷால் வீதி வழியாக சென்று ஆசனக் கோவிலின் புறத்தே உள்ள குறுசோல் வீதியால் நகர்கின்ற அச்சொட்டான பாதை வரைபை மற்றவர்கள் அறிந்தார்களோ இல்லையோ நான் அவதானிக்கத் தவறவில்லை.
வாகனத்தில் இருந்து எல்லோரும் இறக்கப்பட்டோம். அது யாழ்ப்பாணம் PALM HOTEL இன் பின்புற வாசல் வழி. மண்டபத்தினுள் சென்று ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமரும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை நடைபெறப் போவது
“வேளாண் மன்னர்” விருது வழங்கும் வைபவம் என்று.
சுய தொழில் முயற்சியில் நாங்கள் காணும் முன்னேற்றமே எம்மைச் சூழவுள்ள பொருளாதாரத் தடையில் இருந்து எம்மை விடுவிக்கும் என்பதை உறுதியாக நம்பியிருந்தார் தலைவர் பிரபாகரன் அவர்கள். அந்த நம்பிக்கையில் அவரிடமிருந்து உதித்த திட்டம் தான் “வெள்ளாமைப் புரட்சி”. விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்குவிக்க முயன்ற அவரது திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட செயல் வடிவம் தான் தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் “வேளாண் மன்னர்” விருதுக்கான போட்டி. ஊடகப் பிரிவின் உதவிச் செயலாளர் என்ற அடிப்படையில் அதற்கு முந்திய ஒரு வருடமாக இப்போட்டி தொடர்பான சகல ஏற்பாடுகளிலும் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் தான் அன்றைய விருது வழங்கும் விழாவுக்கும் நான் அழைக்கப்படிருந்தேன். இல்லையென்றால் அப்படி ஒரு அதிசயம் எனக்கு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
திடீரென நாங்கள் இருந்த மண்டபத்தில் மிகப் பெரும் அமைதி நிலவியது. கதிரைகளில் இருந்த எல்லோரும் எழுந்து நின்றார்கள். எதற்கென்று தெரியாமலே நானும் எழுந்து கொண்டேன். வீடியோ கமராவுடன் அருகே நின்ற நிதர்சனப் பிரிவு ஜவான் அண்ணா தான்
“விருது குடுக்க அண்ணை தான் வாறார்” என்ற விடயத்தை என் காதுக்குள் சொல்லிமுடித்தார். சற்று நேரத்துக்குள், உலகம் முழுவதையுமே எம் இனத்தை திரும்பிப் பார்க்க வைத்த அந்த தலைவன் எந்தவித ஆடம்பரமுமற்று மிகச் சாதாரண மனிதனாய் மண்டபத்தினுள் நுழைந்தார். வேளாண் மன்னர்களாக தெரிவு செய்யப்பட்ட அந்த மூன்று விவசாயிகளின் இரு கரங்களையும் ஒவ்வொன்றாக இறுகப் பிடித்துப் பிடித்து தன் கன்னங்களோடு அழுத்திப் பிடித்து அவர்களுக்கு முதல் வணக்கம் செலுத்தினார்.
கழுத்தில் நஞ்சைக் கொடுப்பதிலும், களத்தில் வெஞ் சமரைத் தொடுப்பதிலும் மூர்க்கம் கொண்ட ஒரு போராட்ட தலைவனிடம் தன் தேச வளங்களைக் கொண்டாடும் இத்துணை மார்க்கம் இருக்க முடியுமா? என அப்போது என்னால் அதிசயிக்க மட்டுமே முடிந்திருந்தது.
சாட்சியங்கள் தொடரும் ……
– சாம் பிரதீபன் –