எந்தப் போர் வியூகங்கள் பற்றியோ அல்லது போர் வெற்றிகளைப் பற்றியோ அந்த விழாவில் அந்த தலைவன் பேசவே இல்லை

வாழும் காலத்தின் சாட்சியம் - 3 - சாம் பிரதீபன் -

“ஏறி இறங்க பொறி பொறி பொறி பொறி
இறங்கி ஏற பொறி பொறி பொறி பொறி”
இப்படி ஆரம்பமான பாடல்தான் அன்று அங்கு நின்ற எல்லோர் பார்வைகளையும் எம்மை நோக்கி திருப்பியிருந்தது.
1994 இல் யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் திருவிழாவும் அதன் சுற்றுச் சூழலும் தான் அதற்கான சரியான காலமும் களமும் என்று தான் எங்கள் எல்லோராலும் தீர்மானிக்கப்பட்டிருந்தது அப்போது.
நேர்த்தியான நாடகங்களை தயாரித்து அளித்ததோடு மட்டுமல்லாமல் பல அரங்கக் கலைஞர்களை ஈழத்திற்கு உருவாக்கித் தரும் பணிகளில் அப்போது மும்முரமாக இருந்த திருமறைக் கலாமன்றத்தின் “களப் பயிற்சி” பிரிவு மாணவர்களில் இருந்து குறித்த சிலர் அதற்காக தெரிந்தெடுக்கப்பட்டார்கள். அப்போது அம்மன்றத்தின் முக்கிய பணிகளில் நானும் தீவிரமாக ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்வதில் அதிக சிரமம் இருந்திருக்கவில்லை.
இரண்டு வடலிப் பனைகள், இரண்டு முதிர்ந்த பனைகள், இரண்டு ஆளுயரப் பொம்மைகள் என ஆறு பாத்திரங்களுடன் தான் நிகழ்த்தி முடிக்கப்பட்டது அந்த தெருக்கூத்து. அந்த ஆண்டு நல்லூர்த் திருவிழாக் காலத்தின் பெரும்பான்மை நாட்களில் கிட்டத்தட்ட 30 தடவைகள் ஆடப்பட்ட தெருக்கூத்து இது. அதிகமான தடவைகள் ஆலயத்தின் வடக்குப் புறமாக அமைக்கப்பட்டு பெரும் வியாபாரம் நடத்திய லிங்கம் கூல் பார் இற்கு அருகே உள்ள திடலில் தான் நிகழ்த்தியிருந்தோம் இந்தக் கூத்தினை.
இரண்டு மாதகால தொடர்ச்சியான ஒத்திகைகளினூடு பெரும் வெற்றியையும் மக்கள் கவனத்தையும் ஈர்த்த இந்த தெருக்கூத்தின் தொடக்கப் புள்ளி அந்த ஆச்சரியமான சந்திப்பில் தான் இடப்பட்டிருந்தது.
உலகத்திலேயே ஒரே ஒரு மனிதன் தான் இருந்தான் வருடத்தில் ஒரே ஒரு முறை நவம்பர் 27இல் மட்டும் பேசுகின்றவனாய். ஆனால் அந்த ஒரு பேச்சுக்காய் உலகம் முழுவதும் இலங்கையின் வவுனியா எல்லைப் பகுதியில் தம் காதுகளை இறுக ஒட்ட வைத்திருக்கும் அந்த நாட்களில். ஆகக் குறைந்தளவு பேசும் அந்த தலைவன் பிரபாகரன் இரண்டு தடவைகள் பேசியது அந்த ஒரு ஆண்டில் மட்டும் தான்.
வேளாண் மன்னர் விருது வழங்கும் விழாவில் மிகச் சுருக்கமான அவரது உரை முடியும் தருணம் அது. பேசி முடித்து விருதுகளை வழங்கிவிட்டு பாதுகாப்பின் நிமித்தம் மீண்டும் போய்விடுவார் என்பதாகவே நான் நம்பியிருந்தேன். அதிகமாக அங்கு வந்திருந்த எல்லோரும் அப்படித்தான் நம்பியிருப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் உலகத்துக்கு தமிழனின் முகவரியினை எழுதிய அந்த மனிதன் எங்கள் ஒவ்வொருவரின் முகம் பார்த்து கைலாகு கொடுத்தபடி எங்கள் அறிமுகத்துக்காக நகர்ந்து வந்துகொண்டிருந்தார்.
கட்டைக் காற்சட்டையும் நானுமாக எனது பாடசாலை மாணவர்களோடும் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தோடும் முன்னெப்போதோ தீருவில் சதுக்கத்தில் நின்று யாரைப் பார்த்துவிடவேண்டும் என்று அத்தனை சனக்கூட்டத்தில் எம்பித் துள்ளித் துள்ளி பார்க்க முனைந்தேனோ,
மிகத்தொலைவிலே நடந்து சென்ற மிகச் சின்னனாய் தெரிந்த அந்த உருவத்தை தொலைவிருந்தாவது பார்க்க முனைந்து அருகே இருந்த கழிவு வாய்க்காலுக்குள் விழுந்து பாடசாலைச் சீருடை எல்லாம் சேறு பிரட்டிக் கொண்டேனோ,
அந்த மனிதன் இப்போது என்னருகே வந்து என் கைகளைக் குலுக்க, பெரு வியப்புடன் நான் என்னை அறிமுகம் செய்துகொண்டது இப்போதுவரை இனம்புரியாத ஒரு புல்லரிப்பாகவே இருக்கின்றது.
எல்லோரும் ஒன்றாக இரவுணவுக்கு அமர்கின்றோம். கோழிக்கால் பொரியல் ஒன்றினை எடுத்துக் கடித்தபடி சற்றுத் தள்ளி வீடியோ கமராவுடன் நின்றிருந்த ஜவான் அண்ணாவைப் பார்த்து
“ஜவான் இவற்றையும் வீடியோ எடுக்கப் போகின்றாயா?”
எனக் கேட்டபடி அதை உண்ணத் தொடங்கினார். பெரும் சிரிப்பொலிகள் அந்த இடமெங்கும் தோன்றி மறைந்தன. மிக இயல்பாக தன்னையும் அந்தச் சூழலையும் அப்போது மாற்றிய அவர் உணவின் பின்னர் வந்த யோக்கட்டை அருந்தும் போது மட்டும் அந்த சூழலின் இயல்பு நிலையை முழுவதுமாக மாற்றிப் போட்ட அந்த கேள்வியை கேட்டார்.
“நாங்கள் ஏன் பனம்பழ யோக்கட் ஒன்று தயாரிக்கக் கூடாது”
அது தான் அந்த கேள்வி.
எமது பெரு வளமான பனை வளத்தை பயன்படுத்தி உள்ளூர் உற்பத்தி பெருக்கும் பொருளியல் கோட்பாட்டின் சிந்தனைப் பொறி ஒரு போராட்ட தலைவனிடம் வெளிப்பட்டபடி இருந்தது.
எம்மிடம் தற்போது உள்ள பனை வளங்கள், உற்பத்திப் பெருக்கத்துக்கான சாத்தியங்கள், செய்யப்படுகின்ற உற்பத்தி, பனை ஏறும் மனித வளங்களுக்கான தட்டுப்பாடு போன்ற புள்ளி விபரங்களை தலைவருக்கு விரல் நுனியில் அள்ளி வீசிக்கொண்டிருந்தார் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் பனை தென்னை வள அபிவிருத்தி முகாமையாளர்.
பனை ஏறும் மனித வளங்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவேண்டும் என றூட் ரவி அண்ணா சொல்லி முடிக்க முன்னம்,
“பனை ஏறும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடிப்பவர்களுக்கு 10,000 ரூபா பரிசு”
என விளம்பரப்படுத்தி முயன்று பாருங்கள் என்றார் தலைவர்.
நிதர்சனம் என்ற புலிகளின் வீடியோப் பிரிவே இதனை செய்து முடிக்க முடியும் என்பது போல எல்லோரும் அதன் பொறுப்பாளர் ஜவான் அண்ணாவை திரும்பிப்பார்த்தார்கள்.
அந்தப் பார்வைகளை தலைவர் அவதானித்தாரோ என்னவோ
சட்டென்று கூறினார்
“கிராமங்களுக்கு நேரடியாக போய் மக்களிடம் சொல்லுங்கள் எமக்கு இப்படி ஒரு இயந்திரம் வேண்டும் என்று. அவர்களிடம் நிறைந்த அனுபவத்துடன் கூடிய பொறியியல் சிந்தனை உள்ளவர்கள் யாராவது நிச்சயம் இருப்பார்கள்” என்று
அந்த கணத்தில் உருவானது தான் அந்த தெருக்கூத்துக்கான எண்ணம்.
தெருக்கூத்து என்றதும் சிதம்பர திருச்செந்திநாதன் அன்ணா என்னைத் திரும்பிப்பார்த்தார். பார்வையை புரிந்து கொண்டவனாய் நானும் சம்மதம் சொன்னேன்.
எந்தப் போர் வியூகங்கள் பற்றியோ அல்லது போர் வெற்றிகளைப் பற்றியோ அந்த விழாவில் அந்த தலைவன் பேசவே இல்லை. முழுக்க முழுக்க பொருளியல் வியூகங்கள் பற்றியதும் பொருளாதார தன்னிறைவு வெற்றி பற்றியதுமாகவே இருந்தது அவரது அனைத்து உரையாடல்களும்.
யாருடன் எதை எப்போது எங்கு எப்படி பேச வேண்டும் என்பதை புரிந்து வைத்திருப்பவனால் மட்டுமே ஒரு ஆளுமையுள்ள தலைவனாக இருக்க முடியும் என அப்போது எனக்குள் வியக்க மட்டும்தான் முடிந்தது.
ஒரு வாரத்துக்குள்ளேயே
“ஏறி இறங்க பொறி பொறி பொறி பொறி
இறங்கி ஏற பொறி பொறி பொறி பொறி”
என எழுத ஆரம்பித்தேன் அந்த கூத்துக்கான பிரதியினை.