மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்பது மக்களின் கைகளில் ஆயுதங்களை கொடுப்பதோ அல்லது எல்லைக் காவல் அரண்களில் கண்விழிப்பதோ மாத்திரம் அல்ல என்பதை புலிகள் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார்கள்

வாழும் காலத்தின் சாட்சியம் - 4 - சாம் பிரதீபன் -

வவுனியாவுக்கு வெளியே எட்டிப்பார்க்காத வரைக்கும் உலகம் பற்றியதான எண்ணம் விசாலமானதாக இருக்க சாத்தியம் குன்றியே இருந்தது அப்போதிருந்த யாழ்ப்பாண இளைஞர்களுக்கு.
தாம் காணுகின்ற, தாம் கேள்வியுறுகின்ற, தாம் பேசுகின்ற, தாம் சிந்திக்கின்ற,
தாம் கற்றுக்கொள்கின்ற, தாம் அனுபவமுறுகின்ற, தமக்கு நிகழ்கின்ற அன்றன்றைய விடயங்களுக்கு அப்பாலான எவற்றையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு அக்காலத்தில் கிடைத்திராத இளைஞர்களின் நீண்ட வரிசையொன்றில் தான் நானும் அக்காலங்களில் நின்றிருந்தேன்.
மாலை ஆறு மணிக்கு மேல் குப்பி விளக்கைத்தவிர வேறெந்த மின்னொளிக்கும் பழக்கப்படாத ஒரு சந்ததிதான் அந்நாட்களில் அதிகம் வாழ்ந்து வந்தது.
தாமதமாக வந்து கிடைக்கும் தபால்களைத் தவிர்த்து வேறெந்த தொடர்பாடல் முறைகளோடும் இளைஞர்கள் பரீட்சயப்படாத ஒரு இருண்மைக் காலம் அது.
அப்பாவின் டைனமோ சைக்கிளை கவிழ்த்து வைத்து தம்பி சுற்ற சுற்ற இரைச்சல்களோடும் அப்பா கேட்ட பிபிசி யில் அப்பப்போது ஆனந்தி அக்காவின் குரல் வந்து விழும். டைனமோவோடும் ஆனந்தி அக்காவோடும் மட்டுமே உலகத் தொடர்பினை எனது குடும்பமும் அப்போதைய தமிழ் சமுகமும் அந்தக்காலங்களில் பெற்றுக்கொண்டிருந்தது.
அந்தப் பட்டியலில் எனது பெயரும் இருக்கும் என்று அப்போது நான் நம்பியிருக்கவில்லை.
வழமை போலவே தாவடியில் அமைந்திருக்கும் எமது பொருண்மிய மேம்பாட்டு நிறுவன அலுவலகத்திற்குள் அன்று காலை நுழையும் போது
திருச்செந்தி அண்ணாவின் மோட்டார் சைக்கிள் அங்கு தரித்து நின்றது. அவர் சொல்லித்தான் அந்தப் பட்டியலில் என் பெயரும் எழுதப்பட்டிருக்கும் விடயத்தை நான் அறிந்து கொண்டேன். அவருடைய சிபார்சு இல்லாமல் என் பெயர் அந்தப் பட்டியலில் வந்திருக்க சந்தர்ப்பம் இல்லை என்பதாகத்தான் இப்போதுவரை நான் நம்புகின்றேன்.
ஆனால் தான் தான் என்னை அதற்கு சிபார்சு செய்ததாக இப்போது வரை அவராக என்னிடம் கூறிக்கொண்டதாக எனக்கு ஞாபகம் இல்லை.
“ஏர்முனை”, “உழைப்போம் உயர்வோம்” என்ற இந்த இரண்டு நிகழ்ச்சிகள் தான் எனக்கும் “புலிகளின் குரல்” வானொலிக்குமான தொடர்பாக அப்போது இருந்தது.
தமிழீழ பொருண்மியக் கட்டமைப்பு பற்றியும் சுய பொருளாதார எழுச்சி பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தல் என்ற நோக்கில் இந்த நிகழ்ச்சிகளை தயாரிக்க நான் பணிக்கப்பட்டிருந்தேன். வானொலி சார்ந்த அத்தனை வடிவங்களையும் எனக்குத் தெரிந்த வகையில் இந்த நோக்கத்திற்கு நான் பயன்படுத்திக்கொண்டிருந்த பெரும் காலப்பகுதி அது. இவற்றோடு பத்திரிகைகளுக்கான செய்திகளைத் தயாரித்தல், ஆதாரம் சஞ்சிகை ஆக்கங்களுக்கு தோள் கொடுத்தல், வீடியோப் பிரிவோடு இரவு பகலாய் பிரயத்தனப்படுதல் என்பனவும் அன்றைய எனது நாட்களின் தீவிர நகர்வாய் இருந்தது. அந்தப் பணிகளின் நகர்வுகளோடு மட்டுமே நாம் திருப்திப்பட்டுக்கொண்டிருக்க, புலிகளின் தலைமையோ வேறொரு நகர்வுக்காக அவாப்பட்டுக்கொண்டிருந்ததை நான் உட்பட பலரும் அப்போது அறிந்திருக்கவில்லை.
இந்த ஊடகம் சார் நகர்வுக்கப்பால் வேறொரு தளத்திலான ஊடகப் பாய்ச்சலை தலைமை எதிர்பார்த்ததோ என்னவோ, பத்துப்பேரை தமது பல கலைபண்பாட்டு பொருண்மிய ஊடகப் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்து பட்டியல்ப்படுத்தியிருந்தது. அந்தப் பட்டியலில் தான் எனது பெயரும் இடப்படிருந்ததை அன்று தெரிந்து கொண்டேன். என்னை அப்போது மிகவும் ஆச்சரியப்படுத்திய விடயம், அந்தத் தெரிவுப் பட்டியலில் இருந்த அனைவரும் புலிகளின் பல்வேறு பிரிவுகளிலும் வேலை செய்யும் பொதுமக்கள் என்பது.
பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் சார்பாக அப்போது அந்தப் பட்டியலில் இடம் பிடித்துக் கொண்டவன் தான் நான்.
விடயம் மிகச் சாதாரணமானதல்ல! ஆனால் நாம் அப்போது மிகச் சாதாரணமானவர்களாய் இருந்தோம்.
எங்களில் பலரிடம் இப்போதும் இருக்கின்ற மிகச் சாதாரணமான மலினப் பார்வைகளுக்கப்பால் புலிகளின் தலைமையிடம் எப்போதுமே ஒரு அசாதாரணத் தூர நோக்குப் பார்வை தேசம் நோக்கியதாய் இருந்ததை பல தருணங்களில் கண்டு நான் வியந்திருக்கின்றேன்.
அப்படி ஒரு வியப்புத்தான் இந்தப் பட்டியலில் என் பெயர் இருந்தபோதும், அந்தப் பட்டியலில் இருந்தவர்களுக்கு தரப்பட்ட கட்டளையைத் தெரிந்துகொண்டபோதும் எனக்குள் ஏற்பட்டது.
1995இன் நடுப்பகுதி அது.
பட்டியலில் உள்ளவர்களுக்கு விடயம் விளக்கமளிக்கப்பட்ட காலம். தாவடியில் உள்ள பொருண்மிய மேம்பாட்டு நிறுவன தலைமைக்கிளையில் அதன் பொறுப்பாளராக அப்போது இருந்த ரவி அண்ணா தலைமையில் எனக்கும் விளக்கமளிக்கப்பட்டு அது பற்றிய ஒப்பந்தப் படிவத்தில் கையொப்பமும் வாங்கப்படுகிறது.
உலகத்தர ஊடக நுட்பங்களையும் ஊடகங்கள் சார் தொழில்நுட்ப அறிவினையும் கற்றுக் கொள்வதற்காக எம்மை லண்டனுக்கு அனுப்புவதே அந்த திட்டத்தின் மையமாக இருந்தது. மூன்று வருடகால ஊடகப் பயிற்சியினை லண்டன் பல்கலைக்கழகம் ஒன்றுக்கூடாக கற்று மீண்டும் தேசத்துக்கு வந்து குறைந்தது 10 வருட காலம் மண்ணுக்கும் மக்களுக்கும் பணி செய்வதே அந்த ஒப்பந்தத்தின் எழுத்தறிக்கையாக எம்மால் கையெழுத்திடப்பட்டது.
யுத்தம் மிக மும்முரமாக நடைபெற்றுவரும் காலங்களில், யாழ் குடாநாடு முழுக்க முழுக்க பொருளாதார தடைகளுக்குள் மூடப்பட்டிருக்கும் ஒரு காலத்தில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமான தரைப் பயணமே சாத்தியமற்ற பயங்கர கெடுபிடி நிறைந்த நாட்களில்,
புலிகளுக்காக வேலை செய்யும் 10 பேர் அவர்களால் லண்டனுக்கு அனுப்பப்படுவதென்பது மிகச் சாதாரணமாக கடந்து போகக்கூடிய சம்பவம் அல்ல.
இதற்கான கடவுச்சீட்டு, பயணச் சீட்டு என பலவிடையங்களுக்கும் அடுத்தடுத்த மாதங்களில் உரியவர்கள் எம்மை தொடர்பு கொள்வார்கள் எனவும் எமக்கு கூறப்பட்டிருந்தது. தொடர்புகொள்ளவிருந்த அந்த மனிதர்கள் யார் என்பது இதுவரை எனக்கு தெரியாது. லண்டனில் இருந்து எமது பல்கலைக் கழக அனுமதி எடுப்பது முதல், மூன்று வருடங்களுக்கான எமது உணவு,உடை,தங்குமிட வசதிகளை கவனிக்க யாரை நியமிக்க இருந்தார்கள் அல்லது ஏற்கனவே நியமித்திருந்தார்கள் என்பதும் இதுவரை எனக்கு தெரியாது. லண்டனில் பிரபல ஆங்கில ஊடகமொன்றில் பணியாற்றும் ஒருவரே இதற்கு பொறுப்பாக செயற்படுவார் என்று மாத்திரமே எமக்கு தெரியப்படுத்தப்பட்டது. அது தமிழரா இல்லை ஆங்கிலேயரா என்பது பற்றியெல்லாம் அறிந்து கொள்ளும் ஆர்வம் அப்போது என்னிடம் இருந்திருக்கவில்லை. டைனமோ சுற்றியபடி அந்த வானொலியில் கேட்ட அந்த குரலுக்குரிய ஆனந்தி அக்காவை சந்திக்க முடிந்தால் நிறைய விடயங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதிலேயே எனது எண்ணங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது அப்போது.
1995 ஒக்டோபர் மாதம் 30ம் திகதி நிகழக்கூடாமல் நிகழ்ந்து முடிந்திருந்த யாழ். மாபெரும் அவல இடம்பெயர்வு நிகழாமல் இருந்திருந்தால், பத்து மிகச் சாதாரண மனிதர்கள் உலக ஊடகங்கள் பற்றி கற்றுத் தேர்ந்தபடி மண்ணுக்கு இன்னமும் வளம் சேர்த்திருக்கக்கூடிய சூழல் உருவாகியிருக்கும்.
உலகின் பல பாகங்களில் இருந்தும் அத்தனை இரும்புக் காவல்களின் கண்களிலும் மண் தூவி ஆயுதம் கடத்திவரும் விற்வன்னர்கள் என அறியப்பட்ட விடுதலைப் புலிகள்,
கொரில்லாத் தாக்குதல்களோடும் ஆயுதங்களால் பேசும் மொழிகளோடும் மட்டுமே அதிகம் பழக்கப்பட்டவர்கள் என விமர்சிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்,
ஈழம் என்ற ஒரு நிலப்பரப்புக்காக 30 வருடகால யுத்தம் புரிபவர்கள் என்று விரல் நீட்டிக் காட்டப்பட்ட விடுதலைப் புலிகள்,
ஆயுத மொழிகளுக்கும் நிலம் அடைதல் என்பதற்கான வழிகளுக்கும் அப்பால் “வாழ்வு” என்பதனை தேசத்துக்கு அமைத்துக் கொடுப்பதற்கான சகல துறைகளிலும் அதீத பிரயத்தனத்துடன் முனைப்பெடுத்தார்கள் என்பது இப்போதும் என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டிருக்கும் ஒரு விடயம்தான்.
95இன் இடம்பெயர்வு ஊடகக் கல்வியை லண்டனில் கற்கும் சாத்தியத்தைப் புரட்டிப் போட்டாலும் அந்த திட்டம் எனக்குள் ஏற்படுத்திய பொறி தொடர்ந்தும் உள்ளே இயக்கத்தை நிறுத்தாது இயங்கிக்கொண்டேயிருந்தது.
மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் என்பது மக்களின் கைகளில் ஆயுதங்களை கொடுப்பதோ அல்லது எல்லைக் காவல் அரண்களில் கண்விழிப்பதோ மாத்திரம் அல்ல என்பதை புலிகள் மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.
“பொருண்மியம், ஊடகம், அரசியல், சமுகவியல், கலை, பண்பாடு, ஆன்மீகம் என்ற சகல வளங்களின் ஊடாகவும் மக்களை இணைத்தல், மக்களை ஈடுபடுத்துதல் என்பது கூட ஆயுதங்களுக்கு அப்பாலான தேசிய மீட்பு”
என்பதில் எப்போதும் புலிகளின் தலைமை மிகக் கவனமாக இருந்தது.
சாட்சியங்கள் தொடரும் …