அமெரிக்க’பேட்ரியாட்’ வான் பாதுகாப்புக் கவசம் ரஷ்யாவின் தாக்குதலில் சேதம்!
Kumarathasan Karthigesu
உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை வீச்சு தீவிரம்!!
ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் தலைநகரான கீவ் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரமாக்கியுள்ளது.
இவ்வாறான தாக்குதல்களில் இருந்து நகரைப் பாதுகாத்துவருகின்ற அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ஏவுகணைக் கவசம் (Patriot defence missile system) ஒன்று ரஷ்யாவின் தாக்குதலினால் சேதமடைந்துள்ளது. அமெரிக்க மற்றும் உக்ரைன் பாதுகாப்பு அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். அதேசமயம் வான் பாதுகாப்புக் கவசத்தை முற்றாக அழித்து விட்டதாக மொஸ்கோ உரிமை கோரியுள்ளது.
“பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணைக் கவசம்” (Patriot defence missile system) அமெரிக்காவிடம் உள்ள ஆகப் பிந்திய நவீன வான் பாதுகாப்பு ஆயுதம் ஆகும். அது ஜெனரேட்டர்கள் (generators) , ஒரு ரடார் (radar) பிரிவு , கட்டுப்பாட்டு மையம் (control station) , அன்டெனாக்கள் (antennas) , ஒரு லோஞ்சர் நிலையம் (a launcher station) மற்றும் இடைமறிக்கும் ஏவுகணைகள் (interceptor missiles) ஆகிய பல தொகுதிகளை உள்ளடக்கியது. பேட்ரியாட் ஏவுகணையை ஏவுவதற்கும் அதன் இலக்கை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கும் இந்தத் தொகுதிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து செயற்படுகின்றன.
கீவ் நகரின் முக்கிய இடங்களைத் தாக்குவதற்காக ரஷ்யா செலுத்துகின்ற ஏவுகணைகளில் கிட்டத்தட்ட முழுவதையும் இந்த நவீன வான் பாதுகாப்புக் கவசமே தடுத்து அழித்து வருகின்றது. தினமும் நகரில் கேட்கின்ற பெரும் வெடி ஓசைகள் எதிரி ஏவுகணைகளை வானத்தில் வைத்தே அழிக்கின்ற பேட்ரியாட் ஏவுகணைகளது வெடிப்புச் சத்தங்களே ஆகும்.
ரஷ்யப் படையினரின் அதி நவீன ஹைப்பர்சோனிக் கின்சல் ஏவுகணைத் (hypersonic Kinzhal missile) தாக்குதல் காரணமாகவே அமெரிக்க வான் கவச அமைப்பு சேதமடைந்துள்ளது என்று கூறப்படுகிறது . உக்ரைனில் வைத்தே அதனைத் திருத்துவதற்கு அந்நாட்டுப் படையினருக்கு அமெரிக்க நிபுணர்கள் உதவுவர் என்று தெரியவருகிறது.
“கருவிகளுக்குச் சிறிய சேதங்களே ஏற்பட்டுள்ளன. அது முற்றாக அழிக்கப்படவில்லை. இன்னமும் இயங்கும் நிலையிலேயே இருக்கிறது” என்று வோஷிங்டனில் பென்டகன் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.