தமிழர்களுக்காக வாதிடுவதைக் கனடா நிறுத்தாது!

Kumarathasan Karthigesu

முள்ளிவாய்க்கால் நினைவு செய்தியில் ஜஸ்டின் ரூடோ.

தமிழர் உரிமைகளுக்காக பொது வாக்கெடுப்பு கோரி அமெ. காங்கிரஸில் மனு.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதைக் கனடா ஒருபோதும் நிறுத்தாது. கனடா தமிழர்கள் நாட்டுக்கு ஆற்றிவருகின்ற பங்களிப்பை அங்கீகரித்து ஏற்குமாறும் இலங்கை ஆயுதப் போரின் தாக்கங்களை மேலும் அறிந்து கொள்ளுமாறும் கனடா அரசு சார்பாகக் கனடிய மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

 

பிரதமர் ஜஸ்டின் ரூடோ (Justin Trudeau) முள்ளிவாய்க்கால் நினைவு நாளை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.

ஈழத் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்பட்டதைக் குறிக்கின்ற மே மாதம் 18 ஆம் திகதியைக் கனடாவில் தமிழர் இன அழிப்பு நினைவு நாளாகக் (Tamil Genocide Remembrance Day) கடந்த ஆண்டில் அந்நாடு பிரகடனம் செய்தது. அதன் பின்னர் பிரதமர் ரூடோ அந்த நாளை ஒட்டிய தனது முதலாவது செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறார்.

ஈழத் தமிழர்களது இன அழிப்பு நினைவு நாளில் நாட்டின் அரசுத் தலைவர் ஒருவரிடம் இருந்து வெளியாகின்ற முதலாவது உத்தியோகபூர்வ அறிக்கை இதுவே ஆகும்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

“இலங்கையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவடைந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயரமான உயிர் இழப்புகளைப் பற்றி இன்று நாம் சிந்திக்கிறோம். முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர், மேலும் பலர் காணாமல் போயினர், காயமடைந்தனர். அல்லது இடம்பெயர்ந்தனர். பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் உயிர் பிழைத்தவர்கள், அவர்களின் அன்புக்குரியவர்கள், இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் தொடர்ந்து வாழ்கிறார்கள்.அவர்களை இந்த நாளில் எண்ணிப் பார்க்கின்றோம்.
“போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்-கனடியர்களின் கதைகளை நான் பல ஆண்டுகளாக நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் சந்தித்த பலர் ஊடாக அறிந்திருக்கிறேன். மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை அந்தக் கதைகள் நினைவூட்டுகின்றன. அதனால்தான் மே 18 ஐ தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக ஆக்குவதற்கான பிரேரணையை நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் உரிமைகளுக்காகவும், அத்துடன் இலங்கையில் தொடர்ந்து கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவருக்காகவும் வாதிடுவதைக் கனடா ஒருபோதும் நிறுத்தாது.
“நாட்டில் மனித உரிமைகள், பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண இலங்கை அரசாங்கத்தை அழைக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைத் (UNHRC) தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் 2022 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் நாங்கள் எங்கள் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்தோம். இலங்கையில் வருங்காலங்களில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான பிரதான கூறுகளான மத சுதந்திரம் , நம்பிக்கை பன்மைத்துவ சுதந்திரம் – மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான

சர்வதேச தலைமைப் பாதுகாவலனாகக் கனடா விளங்கி வந்துள்ளது. அந்தப் பணி இனியும். தொடரும். மேலும் இலங்கைத் தீவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த ஜனவரியில் நான்கு இலங்கை அரசு அதிகாரிகளுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் தடைகளை விதித்தது.

“தமிழ்-கனடியர்கள் நம் நாட்டிற்கு ஆற்றி வரும் – மற்றும் தொடர்ந்து செய்து வரும் பல பங்களிப்புகளை அங்கீகரிக்குமாறு கனடியர்கள் அனைவரையும் கனடா அரசாங்கத்தின் சார்பாக அழைக்கிறேன். இலங்கையில் ஆயுதப் போரின் தாக்கம் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும், பாதிக்கப்பட்ட அல்லது இழப்புகளைச் சந்தித்த அன்புக்குரியவர்களுக்கு எங்கள் ஐக்கியத்தை வெளிப்படுத்தவும் அனைவரையும் ஊக்குவிக்கிறேன்.” -இவ்வாறு பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை,

பொது வாக்கெடுப்பு உட்பட சர்வதேச ஜனநாயக வழிமுறைகள் ஊடாக ஈழத் தமிழர்களது உரிமையும் சமத்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை உள்ளடக்கிய இரு கட்சித் தீர்மான முன்மொழிவு (bipartisan resolution) ஒன்று அமெரிக்கக் காங்கிரஸில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் காங்கிரஸ் (நாடாளுமன்றம்) உறுப்பினர்களான டெபோரா ரோஸ்(Deborah Ross)மற்றும் பில் ஜான்சன் (Bill Johnson) ஆகிய இருவருமே முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாளாகிய இன்றைய தினம் இந்த முன்மொழிவைச் சமர்ப்பித்தனர்.

ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கைத் தீவின் அனைத்து இன மக்களும் ஜனநாயக ரீதியாகவும் சமமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை சர்வஜன வாக்கெடுப்பை உள்ளடக்கிய வழி முறைகள் ஊடாக உறுதி செய்வதன் மூலம் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயகக் கோட்பாடுகளும் அமைப்புகளும் அங்கு மேம்படுத்தப்படுவதை இந்த முன் மொழிவு ஊக்குவிக்கிறது – என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">