கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்!
கர்நாடக சட்டப்பேரவையில் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதி பெரும்பான்மை இடங்களை வென்றது காங்கிரஸ். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பெரும்பான்மைக்கான 121 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, மேலும், 15 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயட்சைகள் ஆதரவின்றி கர்நாடகாவில் தனித்து ஆட்சியமைக்கிறது காங்கிரஸ். மறுபக்கம், பாஜக 56 இடங்களில் வெற்றி மேலும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதுபோன்று, மதசார்பற்ற ஜனதா தளம் 18 இடங்களில் வெற்றி பெற்று, மேலும், 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த மாபெரும் வெற்றியை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு அதிக வாக்குகளுடன் அதிக இடங்களையும் கைப்பற்றி காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 178 இடங்களில் (43.76%) வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றது.
1989-ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த கட்சியும் 132 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை. எனவே 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 136 இடங்களை (43.1%) கைப்பற்றி உள்ளது. 1994 ஆம் ஆண்டு தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் 115 இடங்களில் (33.54%) வெற்றி பெற்றது.
1999-இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 132 இடங்களில் (40.84%) வெற்றி பெற்றது ஆட்சி அமைத்தது. 2004-ம் ஆண்டு கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த பாஜக, 79 இடங்களை (28.33%) மட்டுமே கைப்பற்றியது. 2008-ஆம் ஆண்டிலும் 110 இடங்களில் (33.86%) பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
2013-ஆம் ஆண்டு 122 இடங்களை (36.6%) காங்கிரஸ் கட்சி கைப்பற்றி ஆட்சி அமைத்தது. 2018-ல் 104 இடங்களை பாஜக கைப்பற்றியது. இந்த நிலையில், 34 ஆண்டுகளில் இல்லாத வெற்றியை காங்கிரஸ் பெற்றுள்ளதால் நாடு முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.