பெண் பிள்ளையும் சாமத்திய வீடும்
- திருமகள் -
அம்மாவுடைய இளநீல வண்ண பிளேன் சேலையை வெட்டி , கீழே தட்டுத் தட்டாய் வைத்து , மேலே பறவைக்கையுடன் , நெஞ்சுப் பகுதியில் நூலால் கைவேலைப்பாடு செய்து அக்கா தைத்துத் தந்த அழகிய சட்டையால் என்னை இப்படி குறுகுறு என்று பார்க்கிறார்களா ? அல்லது நேற்று நடந்த கொண்டாட்டத்தின் விளைவாகப் பாக்கிறார்களா ? என்று ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்த கண்மணியை “சூசையப்பு கிழவா எங்கட அச்சுவேலியை காப்பாத்து “ என்று பெரிய குரலில் கத்திய கிழவியின் குரல் நடைமுறைக்கு கொண்டுவந்தது .
புத்தம் புதிதாகப் பூத்த மலர் அவள் . இளமையின் செழுமை அவள் மாம்பழக் கன்னங்களில் தெரிந்தது . இன்று இந்த சூசையப்பர் தேவாலயத்தில் திருப்பலிப் பூசையில் நிற்கும் மக்களில் அரைவாசிக்கு மேல் , நேற்று எங்கள் வீட்டில் இருந்தார்கள் . எங்கள் வீடு நாட்சார் வீடு என்பதாலும் , முத்தத்தில் சின்ன அண்ணன் போட்ட பெரிய பந்தலாலும் எல்லோரையும் அங்கே அடக்கக் கூடியதாய் இருந்தது என்று பெருமையுடன் நினைத்துக் கொண்டாள் .
திருப்பலி முடிந்ததும் பக்கத்தில் நின்ற நண்பி “வடிவான சட்டைடி “ என்று சொல்ல அவளைப் பார்த்து ஒரு மென்மையான புன்னகையை புரிந்து விட்டு நகரப் போனவளை “இங்க எங்கட சின்னப் பொம்பிளை “என்று சில வயது போன பெண்கள் வளைத்துப் பிடித்து விட ,நேற்று காலில் விழுந்து விழுந்து எழும்பியது கண்மணிக்கு ஞாபகம் வந்து மிரட்டியது . இன்றும் குனிந்து குனிந்து எழவேண்டுமோ என்று யோசித்தவாறு நின்றாள் . அவர்கள் அருகில் வந்து நாவூறு கழிப்பது போல் கையை முகத்தில் தடவி சொடக்கு போட்டார்கள் , சிலர் நெற்றியில் சிலுவை அடையாளம் இட்டார்கள் , சிலர் கன்னத்தை கிள்ளி எங்கட மருமகள் நீ என்று பகிடி விட்டு சிரித்தார்கள் . விட்டாள் காணும் என்று நைசா நழுவ பாத்தாள் கண்மணி ஆனால் வில்லுப் பக்கம் இருந்து வந்த பாடசாலை அதிபரின் கண்ணில் பட்டுவிட்டால் என்ன கண்மணி எல்லாம் முடிஞ்சுதானே நாளைக்கு பாடசாலை வரவேணும் என்ன என்றார் . மிகவும் மரியாதையுடன் “ஓம் சிஸ்டர் “என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினாள் கண்மணி .
வீட்ட போக சைக்கில் எடுப்பம் எண்டு மாமரங்களுக்கு கீழே போய் பார்த்தாள் . வீட்ட வந்து விளையாடும் நண்பன் நித்தியன் நின்றிருந்தான் அவனை பார்த்து புன்னகை புரிய முற்பட்டாள் . ஏன் இவன் பார்வையில் ஏதோ வித்தியாசம் தெரிகிறது , நேராகப் பார்க்க அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான் அவன் சிறு வெக்கத்துடன் . பிறகு மென்மையாக எப்பிடி இருக்கிறீர் என்று கேட்டான் . நல்லாய் இருக்கிறன் வாருமன் வீட்ட விளையாட நாளைக்கு என்றாள் கண்மணி . அம்மா இனி உம்மோட விளையாடப் போகேலா என்று சொன்னவ என்றான் . ஏன் என்று குழப்பத்துடன் கேட்டாள் கண்மணி . கண்மணிக்கு திருமுழுக்கு முடிந்து விட்டது அவள் இனி சிறுமியில்லை என்றார்கள் என்று கூறியவன் தொடர்ந்து “கண்மணி உமக்கு என்ன நடந்தது ?”என்று கேட்டான் . என்னத்தை சொல்ல என்று சங்கடப்பட்டுக் கொண்டு திருமுழுக்குதான் ஐசே என்று சொல்லிக் கொண்டு திரும்பும் போது அவன் குழம்பிய முகம் தெரிய இன்னும் நின்றாள் ஏதாவது கேட்டுவிடுவான் என நினைத்து போய்டு வாரன் என்று சொல்லி சைக்கிலை உருட்டிக் கொண்டு அரைவீட்டை தாண்டும் போது பங்குத் தந்தையிடம் மாட்டிக் கொண்டாள் இவர் என்ன கேட்கப் போறாரோ தெரியேல என மனதுக்குள் நினைத்துக் கொண்டு நிமிர்நதவளை குறும்பாகப் பார்த்து கண்மணி ஆட்டுக்கறி நல்லா இருந்தது , சாப்பாடு குடுத்து விட்டதற்கு நன்றி என்று வீட்ட சொல்லிவிடும் என்றார் . கடவுளே பாதரையும் விடேல எங்கட வீட்ட . கொண்டாட்டம் முடிய முதல் முதல் திருப்பலி பூசைக்குத்தான் போகவேணும் என்று அம்மா அடம்பிடித்ததால் வந்த வினை
சனங்களை ஏன் நான் நோகவேணும் எல்லாம் எங்கட வீட்டுக்கார்ர் செய்த வேலைகள் .
நாச்சார் வீட்டுக்கு முன்னால் முத்தத்தில பெரிய பந்தலைப் போட்டு , கலியாணவீட்டுக்கு அலங்கரிக்கிற மாதிரி பூக்களால் அலங்கரித்து , ஊரே கேட்க ஸ்பீக்கர் பூட்டி பாட்டுப் போட்டு . விராந்தையில் பெரிய கோலம் போட்டு , 8 கிடாய் வெட்டி . ஊர் முழுக்க அழைச்சு . 1 கிழமையாக பலகாரம் சுடுவதென்ன , வெளியில் இருக்கிற சொந்தங்கள் வீட்ட வந்து தங்குவதென்ன , ஜெனரேட்டர் போட்டு இரவிரவா சினிமா படம் பார்ப்பதென்ன , வாரவே போரவேக்கு சாப்பாடு இலையில மத்தியானம் , பின்னேரம் பரிமாறுவதென்ன . இங்கால பாத்தா அக்காவின் நண்பிகள் குத்துவிலக்கு பிடிக்கோணும் என்ன சேலை கட்டுவதென்ற டிஸ்கஷன் , அண்ணாமாரின் நண்பர்கள் இப்பிடி பந்தல் போடோனும், இப்பிடி உபசரிக்கோனும் , கிடாய் வெட்னோனும் எண்டு அவே ஒரு பக்கம் . கரம் , காட்ஸ் விளையாட்டு வேற . அம்மாவைப் பார்க்க பாவமாய் இருந்தது சமையல் அறைக்கு ஓடி ஓடி வருபவர்களை வரவேற்று , கவனித்துக் கொண்டிருந்தார் ஆனால் இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் எனக்குதேவையானவைகளை செய்து கொண்டிருந்தா முகத்தில் மகிழ்ச்சியுடன்
இவற்றுக்கிடையில் சின்ன அண்ணன் வந்து பாத்தியா உனக்கு எப்பிடி கொண்டாட்டம் செய்யுறோம் என்று ஊரில ஒருதரும் செய்யாத அளவுக்கு உனக்கு செய்யுறன் பார் என்றார் . கண்மணி யோசித்தாள் நான் இப்ப என்ன சாதிச்சுப் போட்டன் என்று இவ்வளவு பெரிய கொண்டாட்டம் , தடல்புடல்
இத்தனைக்கும் நான் வெளியால போய் நண்பர்களோட விளையாடக் கூட முடியேல அறைக்கதான் இருக்கிறன் . நீங்களா எல்லோரையும் கூப்பிடுறீ்ங்கள் , நீங்களா கொண்டாடுறீங்கள் . உனக்கு இதில் விருப்பமா எண்டு கூட யாரும் என்னைக் கேட்கவில்லை . இனி நாளைக்கு பெரிய பெண்கள் போல் சேலை கட்டி கூட்டிப் போய் நிற்க வைத்து ஆலாத்தி சுற்றி , எல்லோர் காலிலும் விழுந்தெழும்பி ஜவுலிக்கடை பொம்மை போன்று மலர்களால் அமைந்த இருக்கையில் அமர வேண்டும் புகைப்படங்களுக்கு போஸ் குடுத்தபடி . இது எம்முடைய கலாச்சாரம்தான் பண்பாடுதான் , சில தேவையான சடங்குகளை செய்யவேணும் ஆனால் இவ்வளவு ஆடம்பரம் தேவையா ? எனக்கு ஒரு பெண்பிள்ளை பிறந்தால் இப்படி செய்யக் கூடாது என்று மனதுக்குள் உறுதியாக முடிவெடுத்துக் கொண்டாள் கண்மணி .
சடங்குகல் முடிந்த பிறகு சாதாரண வாழ்க்கை கண்மணிக்கு மறுக்கப்பட்டு விட்டதே அங்கு செல்லாதே , தனிய போகாதே, அவர்களுடன் விளையாடாதே , சத்தமாய் சிரிக்காதே, அடக்கமாய் இரு , அக்காவைப் பார்த்து கற்றுக்கொள் இப்படி எத்தனை விலங்குகள் அந்த 13 வயதுச் சிறுமிக்கு .
ஏன் இப்படி ஒரு நாளில் என் வாழ்க்கை மாறிப்போனது என்பது விளங்கவில்லை கண்மணிக்கு . இயற்க்கையாக உடலில் வரும் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதை எதிர்கொள்வதா ? அல்லது திடீரென சமூகம் தரும் அழுத்தங்களை சமாளிப்பதா என்றிருந்தது அவளுக்கு . ஏன் பெண்ணாய் பிறந்தேன் . ஏன் பூப்பெய்தினேன் என்றாகிவிட்டது அவளுக்கு . எங்கள் சமூகமும் அதன் சிந்தனைகளும் மாறவேண்டுமென மனதார வேண்டிக் கொண்டாள் தங்கள் அச்சுவேலியை காத்துவரும் புனித சூசையப்பரிடம்.