கர்வத்தோடு அலைபவன் எனது நண்பன்!

- சாம் பிரதீபன் -

நடந்து தேய்ந்த தெருக்களையெல்லாம்
எனக்கு கை காட்டாதீர்கள்
யாரோவெல்லாம் நடந்த பாதைகளில்
என் பாதத்தை பதிப்பவனல்ல நான்.
ஒவ்வொரு தடவையும்
புதுப்பாதைகளை
அமைத்துக் கடக்கும்
தலைக்கனம் கொண்டவன்.
எனக்குத் தெரியும்
என் பயணம் கரடுமுரடானது
காட்டுவழியில் தனிமை நிறைந்தது
முதுகைக் கிழிக்கும் முட்களில்
எனது சதைகள் பிய்ந்து தொங்கும்
பாறைகள் உருண்டடித்து
முட்டிக் காலில் இரத்தம் வழியும்.
என் மரணத்துக்காய்
நரிகள் பின்தொடரும்.
ஆனாலும்
புதிய பாதைகளில் நடப்பது
எனக்கான மோட்சம் என்றான பிறகு
கைகாட்டும் பாதைகள் எல்லாம்
எனக்கு முன் நரகங்கள் தான் என்பதை
யாருக்கும் புரியத் தேவை என்ன.
ஒவ்வொரு தடவையும்
புதுப்பாதைகளை
அமைத்துக் கடக்கும்
தலைக்கனம் கொண்டவன் நான்.
எங்காவது என்னைப் போல்
கர்வத்தோடு அலைபவன்
உங்களில் இருந்தால்
அவனிடம் சொல்லுங்கள்
நான் அவன் நண்பன் என்று.