நாடகம் தான் பார்க்கிறேனா அல்லது திரையரங்கில் படம் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறேனா என்பதைப் புரிவதற்கு எனக்கு எந்த அவகாசத்தையும் தந்திருக்கவில்லை கனவுத் தேசம் என்ற அந்த நாடகம்.

- ஆசிரியர் சிறீரதி மோகன்றாஜ் -


நேற்று(19 ஏப்ரல் 2025) மேகலை 30 என்ற நைனாதீவு மக்களின் கலாச்சார இரவு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தேன். நைனாதீவு என்ற ஒரு   பிரதேசம் இருப்பதை அறிந்து வைத்திருந்ததைத் தவிர எனக்கும் நைனாதீவுக்கும் வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் நேற்றைய அந்த நிகழ்வில் சாம் அண்ணா மற்றும் றஜித்தா அக்கா என்று நான் ஏற்கனவே அறிந்திருந்த ஊடக ஆளுமைகளின் வழிகாட்டலில் இயங்கிவரும் மெய்வெளி பிரித்தானிய தமிழ் அரங்கக் கூட்டத்தினரின் நாடகம் ஒன்று அங்கு நடைபெற இருப்பதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிந்திருந்தேன். அது மட்டுமல்ல அண்மையில் இந்தக் கனவுத் தேசம் என்ற நாடகத்தின் சிறிய வீடியோக் காட்சி ஒன்றை தற்செயலாகப் பார்க்கக் கிடைத்ததால் எழுந்த ஒரு விருப்பமும்தான் மேகலை 30 இற்கு நான் செல்ல காரணமாக இருந்தது.

 

சரியான ஒரு காலப்பகுதியில் பொருத்தமான ஒரு கருப்பொருள் பற்றி மெய்வெளி இந்த நாடகத்துக்கூடாக கதைத்திருக்கிறது என்பதாகவே எனக்குப் படுகிறது. இனப்பிரச்சினை காரணமாக இலங்கையின் உயிர் அச்சுறுத்தல் நிறைந்திருந்த காலப்பகுதியில் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடிவந்த எண்ணிக்கையைக் காட்டிலும் போர் முடிந்த 2009 இற்குப் பிறகு உயிர்பயம் என்று சொல்லியும் பணம் உழைக்கும் ஆர்வத்தின் காரணமாகவும் வெளிநாடு வருபவர்கள் மிக அதிகம். வெளிநாடு என்பதை தாயகத்தில் உள்ளவர்கள் எப்படிப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி நாங்கள் பலரும் பல காலமாக கதைத்து வருகிறோம் தான். ஆனால் இந்த நாடகம் தாயகத்து மக்களுடைய புரிதலை மாத்திரமல்ல அவர்களது அந்தப் புரிதலுக்கு வெளிநாடுகளில் உள்ளவர்கள் எப்படிக் காரணமாகிறார்கள் என்பதையும் ஒரே நாடகத்தில் சொல்லி ஒரே கல்லில் இரு மாங்காய்களுக்கு கல் எறிந்து போயிருக்கிறது.
சிறுவர்களும் பெரியவர்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15 கலைஞர்கள் பங்கெடுத்துக்கொண்ட கனவுத் தேசம் எனக்குள் செய்த வேலை வார்த்தைகளால் விளங்கப்படுத்த முடியாத ஒரு தாக்கம். மங்கலான சிவப்பு வெளிச்சத்தில் மேடையின் தரையைத் தடவியபடி வந்த நடிகர்களை முதலில் நான் அங்கக் குறைபாடு உடையவர்கள் அல்லது பிச்சைக்காரர்கள் என்று தான் நினைத்தேன். பின்னர் படகோட்டிச் செல்லும்  மனிதர்கள் என்று பட்டது. பின்னர் தான் பாத்திரங்களும் அவர்கள் பேசிய வார்த்தைகளும் மெது மெதுவாய் கனவுத் தேசம் என்பதன் முடிச்சுகளை அவிழ்த்துப் போட்டு விட்டு என்னை மேடையோடு கட்டுப்போட்டு நகர்ந்தது.

 

ஏழு கடல்களைத் தாண்டி, கண்டம் கடந்து, சொர்க்கம் என்று தாம் நினைக்கும் ஒரு தேசத்தை வந்தடைய நாட்களைக் கரைத்தபடி தமக்கருகில் கிடக்கும் அத்தனை வனப்புகளையும் நிராகரிக்கும் தேசாந்திரிகள் கூட்டம் ஒன்றை மெய்வெளி கனகச்சிதமாக அங்கு காட்சிப்படுத்தியிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்ற எம் முன்னவர்கள் கூறிய பழமொழியின் ஒரு update version இந்த நாடகம் என்று சொல்லலாம்.  தாயக மக்களின் தற்போதைய மன நிலைகள் மற்றும் புலம்பெயர் சமூகத்தினராகிய எமது வெளிநாட்டு உளவியல் வியாதி போன்றவற்றைத் துல்லியமாகக் கணிக்கும் தீட்சண்யப் பார்வையில்லாதவர்களால் இத்தகையதொரு கருப்பொருளை இவ்வளவு துணிச்சலாக சரியாக சொல்லியிருக்க முடியாது என்பது எனது எண்ணம். புலம்பெயர் ஊடகங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி யாரும் சொல்லத் துணியாத பல சர்ச்சைக் கருத்துக்களை அச்சமில்லாது பேசிப் பார்த்த சாம் அண்ணாவினால் இந்தத்  து ணிச்சலான பிரதி எழுதப்பட்டது ஆச்சரியமானது அல்ல. அவருடைய ஒரு வித கவிதைத்தனமான சொற்களும் வரிகளும் உயரமாய்த் தெரியும் பேரலைபோல நாடகத்தைக் தூக்கித் தூக்கிக் காட்டியிருந்தது.
றஜித்தா அக்காவின் குரலில் நாடகப் பாடல் நெஞ்சைக் குடைந்து கல்லுக்குள் ஈரம் எடுத்தது. இசையும் உடைகளும் மேடையின் கரையில் வைக்கப்பட்டிருந்த கனவுத் தேசத்துக் குறியீட்டுக் காட்சியும் நடிகர்கள் கைகளில் இருந்து காட்சிகளுக்கு மெருகூட்டிய பொருட்களும் ஒவ்வொரு உடல் அசைவுகளும் நன்றாக பயிற்சி பெற்ற ஒரு கூட்டத்தினர் இவர்கள் என்பதைக் காட்டியது. காட்சிகளின் இடையிடையே தோன்றிக் பாடல்களுக்கான அபிநயங்களைத் தந்த அந்த றஜித்தா அக்கா உட்பட அந்த மூன்று நடிகைகளும் கருப்பொருளின் அழுத்தமான இடங்களை Highlight  செய்தபடியிருந்தமை ஒரு நல்ல நாடகப் போக்கு. அகதி, பக்கி, Asylam Seekar, refugee, பரதேசி போன்ற வார்த்தைகள் கொஞ்சம் நெருக்கடியை மனதுக்கு தந்திருந்தாலும் அவை சரியான இடத்தில் தேவைக்கேற்ப அளவாகப் பாவிக்கப்பட்டிருந்தமை மிக முக்கியமானது.

 

சிறுவர்கள் பெரியவர்கள் என்று நடிப்பில் வேறுபாடு காண முடியாதபடி அனைவரும் நாடகத்துக்காக செதுக்கப்பட்டிருந்தார்கள். நாடகங்களை வெறும் ஆர்வத்தை மாத்திரம் வைத்திருந்து மேடையேற்றுவதற்கும் நன்கு திட்டமிட்டு முறையான பயிற்சிகளுடன் மேடையேற்றுவதற்கும் பாரிய வேறுபாடு இருக்கின்றது என்பதை மெய்வெளி போட்ட நாடகம் எனக்கு சொல்லியிருந்தது. கர்நாடக இசை உட்பட நுண்கலைகளோடு குறிப்பாக கரோக்கி மற்றும் திரை இசைப் பாடல்களோடு மாத்திரம் நீண்ட நாட்களாய் சுருங்கிப்போய்க்கிடக்கும் லண்டன் ரசிகர்களுக்கு மெய்வெளி தமிழ் நாடகக் குழுவினர் நாடகம் என்ற ரசனையை அண்மைக்காலமாக மீண்டும் கிளறி விடுகிறார்கள் என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டால் மெய்வெளி நாடகக் குழுவினரின் நாடகங்கள் பார்க்கத் தவறக்கூடாத ஒரு கலைப்படைப்புகள் என்றே கூறுவேன். தொடர்ந்து நல்ல நாடகங்களைப் போடுங்கள். வந்து பார்ப்பதற்கு என்னைப் போல பலர் இங்கிருக்கிறார்கள்! அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.