பொது வேட்பாளர் காலத்தின் தேவை ஆனால் நிறுத்தப்படுவாரா என்பது தான் புரியாத புதிர்!

- தியாகன் -

இன்றுள்ள பிராந்திய, சர்வதேச அரசியல் நிலவரங்களைப் பொறுத்தவரை இலங்கை போன்ற சிறிய நாடொன்றிற்குள் நடைபெறும் உள்நாட்டு பிரச்சனைகளை சனநாயகவழி உரிமைப்போராட்டங்களை உளவியல் போரால் சிதைத்து அழிப்பதைப்பற்றியே சிந்திப்பார்கள் அதிலும் உட் குழப்பங்களை ஏற்படுத்தி ஒரு செய்தியை மறைப்பதற்கு இன்னொரு பெரிய செய்தியை உருவாக்குவது போன்ற வழிமுறைகளைத்தான் கையாள் வார்கள் அதுதான் இலங்கையிலும் நடக்கிறது. அதனால்தான் எனது முந்திய கட்டுரையில் மருத்துவர் அர்ச்சுணாவை ஒரு பம்பரம் என்ற நிலையில் நிறுத்தியிருந்தேன்.

 

ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் அனைத்து வகையிலும் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்ததோர் விடையமாகும்.

 

இன்றைய நிலையில் சனநாயகத்தை விடுதலைக் கான அல்லது உரிமைகளை பெறுவதற்கான காத்திரமான ஆயுதமாக மக்கள் கையில் எடுக்கவேண்டும்.
இது தியாகி திலீபன் சொன்ன மக்களின் காலம்”

எல்லாம் நாடக மேடை இதில் எங்கும் நடிகர் கூட்டம் உருவம் தெரிவது போலே அவர் உள்ளம் தெரிவது இல்லை என்றொரு சினிமாப் பாடலை நினைவு படுத்த வேண்டியுள்ளது.

அரசியலை நாம் தவிர்ப் போமானால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்.
என்ற ப்ளாட்டோவின் வாசகத்தை இலங்கை ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் தமிழ் மக்கள் தீர்க்கமாக புரிந்துணர்ந்து கொள்ள வேண்டும் என அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துவது கட்டுரையாளனக எனது கடமை என நினைக்கிறேன்.

 

தேர்தலைப் பகிஷ்கரிக்கிறோம் என்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்கட்சியின் கோரிக்கையும் பயனற்றது. பொது வேட்பாளரை நிறுத்துகிறோம் தமிழ் மக்களே பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறும் தரப்பினரின் கோரிக்கை இக்காலத்தில் சிறந்த போராட்ட அரசியலாகும். ஏற்கனவே பல அரசியல் விமர்சகர்களும் அவதானிகளும் பகிஸ்கரிப்பு பயனற்றது என்பதைவலியுறுத்தி
விட்டனர்.

 

சனநாயகத்தில் பகிஷ்கரிப்பை விட பொது வேட்பாளரை நிறுத்துவது இரட்டிப்பான பலன்களை பேரம் பேசும் தளத்தில் உருவாக்கித்தரும் என்பதில் ஐயமில்லை.

 

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இனிமேலும் தமிழர்களாகிய நாம் தேர்ந்தெடுப்போமானால் எங்களைவிட அஃதினையான வேறெந்த உயிரினமும் உலகில் இருக்க முடியாது என்பதை வரலாறு கன்னத்தில் அறைந்து ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

சில அரசியல் வாதிகள் சிங்கள வேட்பாளர்களோடு பேரம்பேசி அவர்களுக்கு வாக்களிப்பதே சிறந்தது என்று சத்தமாக கத்திப் பேசுகிறார்கள் அவர்களுக்கு நன்றாகத்தெரியும் தாம் சிங்கள, சர்வதேச சக்திகளின் தேவைக்காக பேசுகிறோம் என்பது. எழுதிக்கிழிக்கப்பட்ட எத்தனையோ உடன்படிக்கைகளும் இதயத்தால் இணைந்து உடைந்து நொருங்கிய நம்பிக்கைகளோடு அண்மையில் உயிரை விட்ட தமிழ் அரசியல் வாதிவரை ஏறி இழைத்த குதிரைமேல் இம்முறையும் ஏறவேண்டும் என்று கத்திப் பேசும் அரசியல் வாதிகளை தமிழ் மக்கள் தமது பிரதி நிதிகள் இவர்களில்லை என்பதை உறுதி செய்வதற்கு குறித்த நபர்களை அங்கத்துவர்களாகக் கொண்ட அரசியல் கட்சியை அடியோடு எதிர்வரும் தேர்தல்களில் நிராகரிப்பதன் மூலம் தமிழினம் தமக்கான புதிய தலைமை ஒன்று பொதுக்கொள்கை ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் நிலை நிறுத்த வேண்டும்.

 

விடுதலைப்புலிகள் இயக்கம் இரத்தம் சிந்திய அரசியலில் ஈடு பட்ட போதிலும் பேச்சுவார்த்தை களை எதிர்கொண்டு இரத்தம் சிந்தாத யுத்தத்தை நடத்திய போது.

திட்டமிட்டு நீதியான தீர்வொன்றை தமிழினத்திற்கு வழங்குவதற்கு மறுத்து அனீதிக்கு உள்ளாக்கப்பட்ட காலத்தில் 2005 ம் ஆண்டு இலங்கை ஜனாதிபதித்தேர்தலின் போது இனிமேல் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ஒரு சிங்களவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்கத்தேவையில்லை என்று அறிவித்ததன் தொலை நோக்கான பார்வையின் தரிசன முகத்தை
கடந்த பதினைந்து ஆண்டு காலம் தமிழ் மக்கள் கண்டு வந்துள்ளனர்.

 

மகிந்தராஜ பக்சாவை தோற்கடிக்கவேண்டும் என்று அறைகூவலிட்ட தமிழரசுக்கட்சியும் அவர்கள் உள்ளடங்கியிருந்த கூட்டமைப்பும் 2010 ஆண்டு தேர்தலின் போது இலங்கையின் முன்னாள் முப்படைத்தளபதியாக செயற்பட்டு புலிகளையும் தமிழினத்தையும் அழித்தொழித்த சரத் பொன்சேக்காவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோரியவர்கள்.

 

உண்மையும் அறமும் கொண்டு நீதியாக பேசி வந்து அண்மையில் காலம் சென்ற நவசமாசக் கட்சித்தலைவர் விக்கிரமபாகு அப்போது ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட போது தமிழர் அரசியல் கட்சிகள் விக்கிரமபாகுவின் முகத்தில் அறைந்திருக்கிறார்கள்.

 

புலிகளை அழித்ததற்கு கை மாறாக பொன்சேக்காவிற்கு வாக்கு வாங்கி கொடுத்த தமிழரசுக்கட்சியினர் இம்முறை சஜித்திற்கு அல்லது ரணிலுக்கே தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என கோரவுள்ளனர் இந்த நிலையில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிராக வெளிப்படையாக களத்தில் குதித்துள்ள சுமந்திரன், சாணக்கியன் அவர்களது ஆதரவாளர்கள் எதிரில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு பாடு படும் தமிழர் சிவில் அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் எதை சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி மலைபோல் உயர்ந்துதான் நிற்கிறது.

 

இது மக்களுக்கான களம் நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் தேர்தலை தமிழினத்தின் எதிர்காலத்தை நிர்ணையிக்கும் வகையில் எதிர்கொள்வதற்கு கண்முன் இருக்கும் மேற் சொன்ன இரு தெரிவுகளில் ஒன்றை மட்டும் மக்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் அதிலும் தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப் பட்டால் தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கே வாக்களிக்க வேண்டு மறாக யாரது கோரிக்கைக்காகவும் சிங்களவர் ஒருவருக்கு வாக்களிப்பார்களாக இருந்தால் தேர்தல் நடைபெறும் நாளுடன் உரிமை பற்றிப் பேசுவதை தமிழினம் முற்றாக கைவிட வேண்டும்.

 

புலிகளை அடியோடு அழிப்பதற்கான யுத்தத்தை திட்டமிட்ட தரப்புக்கள் தமிழர்களுக்கு வழங்குவதற்கு எந்த ஒரு தீர்வு தேவைப்படாது அவர்கள் இப்போது இலங்கையின் சிறுபாண்மைகள் பெரும்பாண்மை இனச் சிங்களவர்கள் தமிழர்களை விரும்பினால் உயிர்வாழ்வதற்கு அனுமதிக்கலாம் அல்லது மெல்ல மெல்ல சிங்களத்திற்குள் கரைப்பதையும் நாட்டை விட்டு விரட்டுவதையும் அழிப்பதையும் நடைமுறைப்படுத்தலாம் என்ற அடிப்படையில் செயற்பட்டனர்.

 

இந்திய சர்வதேச நாடுகளின் அந்த நிலைப்பாட்டை ஏற்றவர்கள்தான் தமிழரசுக்கட்சியினர் இவர்களை தமிழர்கள் நம்பும்வரை தமிழர்களை தம்மை தற்காத்துக்
கொள்ள முடியாது.

 

பல விடையங்களை பேசிவந்த மருத்துவர் அருச்சுணா தனது பெயர் பொது வேட்பாளராக எதிர்பார்க்கப்படுபவர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை அறிந்துகொண்ட நிலையில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்குஎதிராக தனது கருந்தை சமூகம் இணைய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார் அந்தளவில் அர்சுணாவின் ஆட்டமும் முடிவை நோக்கி நகர்கிறது.

 

ஆக பொது வேட்பாளரை ஓரிரு நாட்களில் தமிழர் தரப்பு நிறுத்தவில்லை என்றால் கானல் நீரில் இரைக்காக காவல் நின்ற கொக்கின் கதையாகி விடும் தமிழர் கதை என்பதே இக்கட்டுரையின் சுருக்கமான ஆணித்தனமான கருத்தாகும்.

 

தமிழர் ஊடகங்கள், கருத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், புலம் பெயர்ந்த அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் மக்களுக்கு சரியான வழியை காட்ட வேண்டும் அந்த வழி தேர்தலை பகிஸ்கரியுங்கள் நாமே சிங்கள அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தேர்ந்தெடுத்து விட்டு பின்னர் புத்த விகாரைகள் கட்டுகிறார்கள், நிலங்களை அபகரிக்கிறார்கள், இராணுவச்சிப்பாய்கள் தமிழ் பெண்களை திருமணம் செய்யுமாறு வற்புறுத்துகிறார்கள், சிங்களத்தை வட கிழக்கில் கட்டாய பாடமாக்கி விட்டார்கள் என்பதுட்பட பல்வேறு விடையங்களை காரணம் காட்டி போராடுவதில் அற்தமில்லை.

 

தமிழர் அரசியல் விலைபோன சரக்காகிவிட்ட நிலையில் தமிழ் மக்கள்தான் தமது நிலைப்பாட்டை தாமே தேர்ந்தெடுத்து இன வாழ்வையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும்.