தன்னிலையிழந்த தமிழரசும் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையும்!

- வி.எஸ்.சிவகரன் -

மிகவும் பரிதாபகரமான கட்டத்திக் தமிழர் அரசியல் நிலையிழந்து தறிகெட்டுப்போன தற்குறிகளில் சிக்கித் தவிக்கிறது. யாரை, யார் நொந்து கொள்வது? காலக் கணக்கின் தவறா? இல்லையேல் கருப்பொருள் அற்ற ஆதாய சூதாடிகளின் தீர்க்கதரிசனமற்ற செயலா? காலத்தால் கரைந்து போகின்ற நிலையே ஏற்படுகிறது. தொலைதூர நோக்கு நிலையின்றி, இன விடுதலை பற்றிய எவ்விதமான புரிதலுமின்றி, வழிப்போக்கர்களாய் தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சகதிக்குள் தமிழர் அரசியல் சதிராட்டம் போடுகிறது. குறைந்தபட்சம் சன சமூக நிலையத்தின் பொறுப்பு கூட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இல்லை. தமிழர் அரசியலை வழிநடத்துகின்றோம் என ஊர் எல்லாம் ஊளையிடும் கட்சிகளிடம் எந்தப் பொறுப்புக் கூறலும் இருப்பதில்லை.

இழப்பதற்கு எதுவும் இல்லாத அளவுக்கு இழந்து ஏதிலியாய் வாழ்க்கை நடத்தும் இனத்தை சமூகப் பொறுப்போடும் மக்கள் நலன் அக்கறையோடும் அப்பழுக்கற்ற தூய நோக்கில் மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுக்கக்கூடிய வல்லாளுமையுள்ள தலைமையின் இடைவெளி இந்தத் தேர்தலின் மூலம் சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படுகிறது. முன்னாள் ஆயுதக் குழுக்கள் இடமும் சமூகப் பொறுப்பை காணவில்லை. தமிழரசு கட்சியில் மூன்று அணிகளாக பிரிந்து நிற்கின்றபோதும் கூட, மக்களினுடைய உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடிய தீர்மானத்தைத் திடமாக, எந்த நியாயாதிக்க கோட்பாட்டை மேற்கொள்ளக்கூடிய வகையில் ஆளுமை செலுத்தி நகர்த்திருக்க வேண்டிய விடயத்தை, பொறுப்பற்ற விதத்திலே தனி மனிதர்களாக எடுக்கப்பட்ட தீர்மானம் இந்த இனத்தின் எதிர்காலத்தை கேள்விக்கு உட்படுத்தப் போகிறது.

2010 ,2015, 2019 மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் எதிர்பார்த்த எதுவும் நிறைவேறாவிட்டாலும் கூட, நிதானமான அணுகு முறையைப் பின்பற்றி, ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை விமர்சனங்களைக் கடந்தும் நிர்ணய நிலையை உருவாக்கி நகர்த்தினர். அதில் சரி, தவறு இருக்கலாம். ஒரு கட்சியாக தேர்தல்களிலே மக்களுக்கு அந்த மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தீர்மானத்தை மேற்கொண்டு, வழிகாட்ட வேண்டியது அரசியல் கட்சிகளினுடைய தலையாய பொறுப்பு. அதை நிறைவேற்றாவிட்டால் கட்சிகளாக இருப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது. ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகளின் வகிபாகம் அதிமுக்கியத்துவமானது.

ஆனால் விடுதலை அரசியலில் எவ்வாறான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், அதனுடைய ஒழுங்கு முறைகள், அந்தந்தக் காலத்துக்கு ஏற்றது போல் நின்று, நிலைத்து, நிதானித்து செயல்படக்கூடிய விடயங்கள் ஏதாவது பின்பற்றப்பட்டுள்ளதா என்பது பற்றி எவருக்கும் பதில் தெரியவில்லை.
சுமந்திரன் என்ன பேசினார், ஏது பேசினார் என்று கட்சித் தலைமை உட்பட எவருக்கும் தெரியாது. உண்மையிலும் பேசினாரா என்பது கூட புரியவில்லை என்கிறார் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. ஆனால் முதிர்ந்த நிலையில் உள்ள தமிழரசுக் கட்சி தான்தோன்றித்தனமாக, குழு தீர்மானம் இன்றி, சஜித் பிரேமதாசாவை ஆதரிக்க முன் வந்தது என்பது இலகுவாக கடந்து போய்விடக் கூடிய விடயம் அல்ல. கட்சியினுடைய மூத்த உறுப்பினர்கள் ஒரு குழுவாக இணைந்து தீர்க்கப்படக்கூடிய அத்தியாவசிய பிரச்சனைகளையாவது உரையாடி இணக்கம் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதிகார பகிர்வு என்பது ஒரு தேர்தல் கால வாக்குறுதியாகவே போய் விடுகிறது. கூட்டத்திற்கு போன 26 பேரும் – அமாவாசையில் பிறந்த அரிஸ்டோட்டில்களும் – இந்த இனத்தை எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இன்றி அனாதைகள் போல் விலையின்றி விற்று விட்டார்கள். இந்தப் பரிதாபகரமான நிலை கடந்த எந்த தேர்தல்களிலும் ஏற்பட்டதில்லை. அது ஒரு கட்சியின் ஒட்டுமொத்த முடிவாகவும் வெளிப்படுத்தப்படவில்லை என்றால் எங்கோ ஓரிடத்தில் தவறு இருக்கிறது என்பதனை ஏனையவர்கள் உணர்ந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் சில அடிப்பொடிகளை (செம்புகள்) வைத்து சுமந்திரன் அவர்கள் இவ்விதமான ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கிறார் என்பது இனத்தின் மிக மோசமான நிலையாகும். ஒரு கட்சியாக அவர்கள் தீர்மானிப்பது தவறல்ல. ஆனால் ஏன், எதற்கு, எப்படி, என்ன காரணம், அந்தக் காரணத்தை அடையக்கூடிய வழி என்ன, அந்த வழியில் தடையாக உள்ளதை நீக்கக்கூடிய வல்லமை கிடைக்குமா என்கின்ற வாதப்பிரதிவாதங்களை ஆதரிப்பதற்கு முன்பதாக ஒரு குழுவாகஒ பேசி குறைந்தபட்சமேனும் அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன என்பதனை முடிவுறுத்தியிருக்க வேண்டும். வெளிப்படையாக அதிகாரப் பகிர்வு பற்றி பேசினால் தெற்கின் வாக்குகளை பெற முடியாது என்கின்ற காரணத்தினால் எதுவுமே பேசாமல் பெறுமதியின்றி தமிழினத்தை பொறுப்பின்றி விற்பதற்கு இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

தமிழ் மக்கள் இன்னும் இவர்களை நம்பி இருக்கிறார்களா எனப் பலர் கேள்வி எழுப்புகிறார்கள். சுமந்திரனைச் சூழ உள்ளவர்கள் அறிவு பூர்வமாக செயல்படக்கூடியவர்களாக தெரியவில்லை எனப் பலரது விமர்சனம் உண்டு. அவ்விதமான சூழலில் எப்படி சுமந்திரனால் நிதானமான முடிவை எடுக்க முடியும்? தமிழரசுக் கட்சி பல பிரிவுகளாக உடைந்து போய் உள்ள நிலையில் இவர்களிடம் திரட்சியான வாக்கு வங்கி இல்லை என தென்னிலங்கை கட்சிகள் புரிந்து கொண்டதால்தான் இவர்களை ஒரு பொருட்டாக மதித்து உத்தியோகபூர்வ உரையாடலை மேற்கொள்ளவில்லை என்றே புலப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக சுமந்திரனால் எடுக்கப்பட்ட எந்தத் தீர்மானமாவது இலக்கு நோக்கி நகர்ந்ததாக தெரியவில்லை. விதைத்தவை அதிகம். அறுவடை செய்தவை என்ன என்னும் கேள்வி உண்டு.
மாகாண சபைச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் யாரை ஆதரிக்கலாம் என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கலாம். அரசியலுக்கு அறிவு மட்டுமல்ல. தந்திரமும், விளைவை முன்கூட்டியே உணர்தல் திறனும் மிக அவசியம். கடந்த கால முடிவுகளால் விளைந்த பயன் என்ன என்பதை சுமந்திரன் மறு வாசிப்புச் செய்ய வேண்டும். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாமல் எந்த தலைமையும் தம்மை தகவமைத்துக் கொள்ள முடியாது. நிலை நிறுத்தவும் இயலாது. ‘நா காப்பது அவசியம்’.பொது வாழ்வுக்கு சகிப்புத்தன்மை அதைவிட அவசியம். சம்பந்தரின் நிழலாக இருந்தும் கூட பல விடயங்களை அவர் கற்றுக் கொள்ளவில்லை என்பதே ஆச்சரியமாக உள்ளது.

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சுமந்திரனும் அவரது அடிப்பொடிகளும் ஆர்வமாக இருந்தனர், இருக்கின்றனர். கட்சிக்குள் மற்றொரு பிரிவு தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க கூடிய நிலை காணப்பட்டது. அதில் பலர் வெளிப்படையாக தற்பொழுதும் ஆதரித்தும் வருகின்றார்கள். பொது வேட்பாளர் ஆக முடியவில்லை என மூன்றாவது அணி இப்பொழுது வேறு விதமான நிகழ்ச்சி நிரலில் நிழலாடுகின்றது. மத்திய குழு தீர்மானத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு தமிழரசுக் கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் பொது வேட்பாளருக்கு பகிரங்கமாக ஆதரவு வழங்கி கூட்டங்களை நடத்துகின்றனர். அப்படியானால் கட்சியினுடைய கட்டுக்கோப்பு, அதனுடைய எதிர்கால நடவடிக்கை என்பன கேலிக்கூத்தானதாகவே காணப்படுகிறது.

தற்போதைய நிலையில் தமிழரசு கட்சியை வைத்திருப்பது யார் என்கின்ற கேள்விதான் எழுகிறது. ஏனெனில் தற்போதைய தலைவராக இருக்கக்கூடிய மாவை சேனாதிராஜா அவர்கள் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் விடயத்தை குறைந்தபட்சம் தொலைபேசி வாயிலாகக் கூடத் தமக்குத் தெரிவிக்கவில்லை என ஆதங்கப்படுகிறார். அவர் வைத்திய சாலையில் இருந்த போது இந்திய தரப்பு அவரை அணுகியதாகவும் தகவலுக்குண்டு – சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் நிலைப்பாடு தொடர்பாக. ஆனாலும் அவர் ஒரு முடிவுக்கு வரவில்லை.

அவசர அவசரமாக ஒரு மாதத்துக்குள் மூன்று தடவை மத்திய குழுவைக் கூட்டித் தனி மனித தீர்மானத்தை கட்சித் தீர்மானம் ஆக்கிவிட்டனர். வரும் 14 ஆம் திகதி மீண்டும் மத்திய குழு கூடுகின்றது.
மாவைக்கு இது ஒன்றும் புதிய ஏமாற்றம் அல்ல. இதே வேலையைத்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியின் போதும் தேசிய பட்டியல் விவகாரத்தில் இதே அணி அன்றைய பொதுச் செயலாளர் நாசகாரத்தனத்தில் ஈடுபட்டார் என விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு பதவியை துறந்தார். மாவையால் பதில் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டவரும், ஒரு காலத்தில் அவரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராக இருந்த சுமந்திரன் அவர்களும் தனது முதுகில் குத்தி விட்டார்கள் என்று ஆதங்கப்படுகிறார் மாவை.

இன விடுதலை அரசியலிலே தன் வாழ்நாளை முழுக்க தமிழர் அரசியலுக்காக செலவழித்த ஒரு மூத்த தலைவருக்கு – அதுவும் கட்சியின் தலைவராக இருக்கின்ற போதே இவ்விதமான அவமானத்தை ஏற்படுத்தியது என்பது கட்சி ஒழுங்கு விதிகளுக்குள்ளாலும், சமூக நீதியின் இயற்கை நியதியின் அடிப்படையிலும் ஏற்புடையது அல்ல.

ஆனாலும் பைபிள் கூறுவது போல் எதனால் அளந்தீர்களோ அதனாலே அளக்கப்படுவீர்கள் என்பதைப் போல் அவரவருடைய செயல்களும் எண்ணங்களுக்கும் அடிப்படையில் தீர்ப்புக்களும் தீர்வுகளும் இடம்பெறுகின்றன. கணக்குகள் எப்பொழுதும் கூட்டல் மட்டுமல்ல கழித்தலும் இடம்பெறும். அறம் எப்போதும் நின்று கொல்வதுண்டு .கடந்த காலத்தில் இவர்கள் மற்றவர்களுக்கு எதை விதைத்தார்களோ அதனுடைய அறுவடையை இப்பொழுது அனுபவிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் திருந்தி விடப் போவதில்லை.

Tamil National Alliance to boycott 75th Independence Day celebrations - Sri Lanka

சந்தர்ப்பவாதத்தில் தனது இருப்பை வலுப்படுத்த விரும்பும் இந்திய தரப்பு ஒரு வல்லாளுமையற்றவரை ஜனாதிபதி ஆகிவிட்டால் கொழும்போடு இணக்கமான உறவை பேணக்கூடிய வழி ஏற்படுமென இரண்டகமாக சிந்திக்கிறது. அதன் வெளிப்பாடுதான் தமிழரசு கட்சியை வற்புறுத்தி, தமக்கு அடிமை சேவகர்களாய் எப்பொழுதும் இருப்பார்கள் என எதிர்பார்த்தது, அவர்கள் விசுவாசத்தில் விஞ்சி விட்டார்கள். மேற்கு சார்புள்ள சுமந்திரன் அவர்களும் டெல்லியின் ஆசுவாச விசுவாசத்துக்குள் அகப்பட்டு விட்டாரோ, எல்லாம் கடந்த உட்கட்சி தேர்தலின் புறச்சூழலின் விளைவுதான் என எண்ணத் தோன்றுகிறது.
ஆனாலும் இந்தியாவால் தமிழினத்திற்கு எதுவும் நன்மை நிகழ்ந்து விடக்கூடிய நிலைமை ஏற்படுமா என்பது சந்தேகமே. தங்கள் நாட்டில் உள்ள மாநிலங்களின் பிணக்குகளையே தீர்க்க முடியாமல் மொழிவழி பிணக்குகளும் மதவாத மேலாளுமையும் வன்மமாக புகுத்தும் இந்திய மத்திய அரசு, ஈழத் தமிழர்களுக்கு இதயசுத்தியாக ஒரு துரும்பை கூட தூக்கிப் போட மாட்டாது என்பது தமிழின உணர்வாளர்களின் முடிந்த முடிவு.

ஆனாலும் இவர்களின் ஏகபோக விசுவாசிகளான முன்னாள் ஆயுதக் குழுக்கள் தமிழ் வேட்பாளர் கோசத்தோடு தங்கள் எஜமானர்களுக்கு பகைமை காட்டுவது போல் மேலிடையிடுகிறார்கள். ‘உள்ளிருப்பது என்னவென்று உரியவருக்கன்று எவருக்கும் புரியாது’. சிவில் பிரமுகர்களின் நிலையும் இதுவே.

தமிழ் பொது வேட்பாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனம் செயற்பாட்டு அறிக்கையின்றி பத்தி எழுத்து போல் உள்ளதாக பலரும் விமர்சனம் செய்கின்றனர். ‘அறப்படித்த பல்லி கூழ்பானைக்குள் விழுந்த கதை தான்’ இவர்களின் நிலை. பொது வாக்கெடுப்பும் இல்லை, சமஷ்டியையும் காணவில்லை. ஒற்றையாட்சி நிராகரப்பு தொடர்பாக தெளிவான நிலையை வெளிப்படுத்தவில்லை. பல விடயங்களை வெளிப்படையாகவும் நேரடியாகவும் கூறாமல் மறைப்பொருளில் சுற்றி வளைத்து சூழ்ச்சிகரமான எழுத்துக்களை புகுத்தி உள்ளனர். புதிதாக வியத்தகு விடயமாக எதனையும் இவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கவில்லை. வழமையாக யாவரும் அறிந்த அத்தியாவசிய பிரச்சுனைகளையே முன்வைத்துள்ளனர். அதிகாரப் பகிர்வை அடையக்கூடிய வழி வரைபடம் எதனையும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை. தேர்தல் பரப்புரையில் யாவரும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய அளவில் முன்னெடுப்பதாக தெரியவில்லை. இதயத்தால் இணையாத அணிகள் ஒன்று சேர்ந்தால் ஒத்துறவு கூட்டுச் செயற்பாட்டில் இடைவெளியே ஏற்படும். முயற்சி எவர்களாலோ எடுக்கப்பட்டு, விடயம் யாரிடமோ கைமாறி, இப்பொழுது புலம்பெயர் தேசத்தில் உள்ள சிலர் வழிநடத்துகின்ற நிலைதான் காணப்படுகிறது. தற்போது அரியநேத்திரனை வழிப்படுத்துவது யார் எனும் கேள்வியும் உண்டு.

தமிழரசுக் கட்சியின் நிலைதான் இவர்களுக்குள்ளும். ஆயுதக் குழுக்கள் ஒருபுறமும், சிவில் பிரமுகர்கள் மற்றொரு புறமும், புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ளவர்கள் தாங்கள்தான் பணம் வழங்கி, பொது வேட்பாளருக்குரிய செலவுகள் அத்தனையும் வழங்கி, ஏனையவர்களை இணைத்து, எட்டு மாவட்டத்திலும் பரப்புரையில் ஈடுபடுகிறோம் என கூறுகிறார்கள். அப்படியானால் பொதுக் கட்டமைப்பின் பணி என்ன? அதில் உள்ள கட்சிகளின் முடிவு என்ன? வெறுமனே வாக்களிப்பதற்கு நோட்டீஸ் வழங்கி விட்டால் போதுமா? லீசிங் கம்பனிபோல் கலர் கலராய் உடை அணிந்து வீதி வீதியாய் விளம்பர துண்டு பிரசுரம் வழங்குவது போல் காணப்படுகிறது. இது வாக்காக மாறுமா?
இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு இலட்சம் வாக்கை தாண்டி விட்டால் வெற்றிகரமான தோல்வி அல்லது அதற்கு கீழே போனால் தோல்விகரமான வெற்றியென புது வியாக்கியானத்தை பத்தி எழுத்தாளர்கள் புகட்ட முற்படுவார்கள்.

மும்முனை போட்டியிலே யார் வெல்வார் என இதுவரையில் தெளிவான கோடிகாட்டல்கள் ஒன்றும் வெளிப்படவில்லை. அவரவர் விருப்புக்கு ஏற்றபோல் பேசிக் கொள்கிறார்கள். யார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்பதே அரசியலில் முக்கியம். அதனை எதிர்க்கின்ற – விரும்புகின்ற – தரப்புக்கள் எவ்வாறு தந்திரோபாய காய் நகர்த்தலை மேற்கொள்ளப் போகின்றன என்பதற்கு காலம்தான் கட்டியம் கூற வேண்டும். யார் வந்தாலும் தமிழ் மக்களின் நிலை பரிதாபகரமானதே!