நினைவுகளைக் கொலை செய்த பின் ஒரு இனம் குறித்து அழிப்பதற்கு வேறொன்றும் இருந்துவிடப்போவதில்லை என்பது மிகப் பெரியதொரு அரசியல்!

- மரணத்தை விடக் கொடியது - நாடகம் பார்த்த அனுபவம் -

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் மற்றும் உலகத் தமிழர் வரலாற்று மையம் இணைந்து நடத்திய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50ஆவது ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வில் 30 June 2024 மேடையேற்றப்பட்ட மெய்வெளி அரங்க இயக்கத்தின் மரணத்தை விட கொடியது என்ற நாடகத்தைப் பார்த்தேன்.
மண் சுமந்த மேனியர், பொங்கு தமிழுக்குப் பிறகு மக்களை எழுச்சி கொள்ள வைத்த ஒரு நாடக முயற்சியை அன்று தான் நான் பார்த்தேன். உறைந்து போய் வியந்து உட்கார்ந்திருந்த என்னையும் மற்றவர்களையும் எழுந்து நின்று கைகளைத் தட்ட வைத்திருந்தது மரணத்தை விடக் கொடியது என்ற அந்த நாடகம். ஆரம்பம் முதல் முடிவு வரை கண்வெட்டாமல் மேடையோடு ஒட்டவைக்க நாடகங்களாலும் முடியுமா என்ற கேள்விக்கு மெய்வெளி அரங்க இயக்கம் சொற்களால் அல்ல தமது நாடக மேடையேற்றத்தால் பதில் சொல்லியிருந்தது.
மனித உயிர்களைக் கொலை செய்யும் காலன்கள் அல்லது எமதர்மன் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் மனித நினைவுகளைக் கொலை செய்யும் காலன்கள் என்ற பாத்திர அறிமுத்தோடு ஆரம்மாகியிருந்த இந்த நாடகம் எல்லோரையும் கட்டி இழுத்துக்கொண்டு போன வரலாற்றுப் பக்கங்கள் ஏராளம். ஞாபகங்களை கொல்லும் காலன்கள் என்ற ஒரு சிந்தனை தமிழ் நாடகப் பரப்புக்கு புதிய சிந்தனை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மிக அற்புதமான ஒரு சிந்தனையாக எனக்குப் பட்டது. நினைவுகளைக் கொலை செய்த பின் ஒரு இனம் குறித்து அழிப்பதற்கு வேறொன்றும் இருந்துவிடப்போவதில்லை என்பது மிகப் பெரியதொரு அரசியல். அந்த அரசியலை சரியான வகையில் நாடகம் எடுத்துவந்திருந்தது என்று சொல்வதில் மிகைப்பாடு இல்லை எனத் தோன்றுகிறது. உலகத் தமிழாராய்ச்சிப் படுகொலையின் ஐம்பதாவது நினைவுகள் குறித்த விடயத்தை மையக்கருவாக கொண்டிருப்பதாக வெளிப்படையாகப் பட்டாலும் தமிழ் இனம் குறிப்பாக ஈழத்துச் சனங்களின் மேல் இப்போதுவரைக்கும் எழுதப்பட்டிருக்கும் அரசியலை சூசகமாக நாடகம் சொல்லிருப்பதாக எனக்குப் பட்டது.
இரண்டு முக்கியமான விடயங்களை காட்சிகளுக்கு ஊடாக இந்த நாடகத்தினை இயக்கிய மெய்வெளி வெளிப்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். ஒன்று நினைவுகளை கொலை செய்யும் காலன்கள். மற்றையது கற்கள் சொல்லும் கதை. நினைவுக் கொலை செய்யும் காலன்கள் நினைவுகளைத் தோண்டிக் கதை சொல்லும் கற்கள் என்ற அற்புதமான இந்த இரண்டு வகையான உருவகங்களோடு நகர்த்தப்பட்ட இந்த நாடகம் போதுமானதாக இருந்தது நாடக முடிவில் எழுப்பப்பட்ட எழுச்சிக்கு அங்கிருந்த மக்களை தயார்ப்படுத்துவதற்கு. ஐந்து தாசாப்தங்களின் முன்னர் இருந்த நாங்கள் யார்? இப்போதிருக்கும் நாங்கள் யார்? இன்னும் கொஞ்சக் காலம் கழித்து இருக்கப்போகும் நாங்கள் யார் என்பதை ஒரு காட்டமான விமர்சனமாக எள்ளல் கலந்த நையாண்டித் தனமாக, யாருக்கும் பயப்பிடாமல் சொன்ன மெய்வெளியின் துணிச்சலும் சீற்றமும் வெளிப்படையாகவே நாடகத்தில் வெளிப்பட்டது. இயக்குனர் எங்களை நையப்புடைக்கிறாரா அல்லது நல்லாய்ச் சொல்கிறாரா என்பதை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் சொல்லப்பட்ட சங்கதிக்குள் இருந்த பலமான உண்மை என்னை உடைத்து உடைத்துப் போட்டபடியிருந்தது. காலன்களின் வார்த்தைகளில் இருந்து கல்லுகளின் பரிதாபம் கடைசிக் கவிதை விடுத்த சவால் வரை ஒரு விதமான சமகால சமூக அரசியல் விமர்சனத்தை பார்வையாளர்களுக்கு எறிந்தது நாடகம்.
ஒருவிதமான கவிதைத்தனமான உரையாடல்கள், கருத்துள்ள பாடல்கள், பொருத்தமான உடலசைவுகள், மிகச் சிறந்த ஆடை அணிகலன்களின் நேர்த்தியான தயாரிப்பு, நெஞ்சை ஊடறுக்கும் இசை, நடிகர்களின் கூரிய பார்வைகள், எல்லாமும் சேர்ந்து ஒரு பரவச நிலையில் தான் மக்களை கட்டி வைத்திருந்தது அன்று.
எங்கே எப்படி காட்சிகள் தொடங்கும் எங்கே எப்படிப் போய் அவைகள் முடியும் என்று தெரியாமல் அந்த இடத்தின் எல்லா வெளிகளையும் அவதானத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பார்வையாளருக்குள் நடிகர்கள் புகுந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் இருந்து வெளியே வந்தார்கள், பூக்களை காவி வந்தார்கள், புனிதத்தனமான கூடு ஒன்றை புகையடித்தபடி தூக்கி வந்தார்கள். குமுழிகளை பறக்கவிட்டார்கள், வெடி கொளுத்தினார்கள் அப்பப்பா என்னவகையான திட்டமிடல் இவை என என் போல பலரையும் ஆச்சரியப்படுத்தினார்கள். கத்தை கத்தையாக வசனங்களை ஒப்புவிக்கும் நாடகங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு உடல் அசைவுக்கு காத்திரமான பங்கு கொடுத்து அரங்கேற்றப்பட்ட இந்த நாடகம் ஒரு புதிய அனுபவத்தை தந்திருந்தது. ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழ் சமூகமும் ஒரு தடவை இந்த நாடகத்தைப் பார்ப்பது எங்கள் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்பது எனது நம்பிக்கை.
இப்படி ஒரு நாடகத்தை இந்த நிகழ்வுக்காக தயாரிப்பதற்கு ஒழுங்குபடுத்திய உலகத் தமிழர் வரலாற்று மையத்திற்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை. தொடர்ந்தும் இப்படியான எமது தரமான கலைகளை மக்கள் கவனத்துக்கு கொண்டு வந்து தர வேண்டும் என ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.