பிறவிக் கலைஞன் ஒருவனை மேடையில் கண்டேன் – சுகந்தினி சிவகுமார் –

ஸ்கந்தவரோதயாக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கத்தினரால் 20-04-2024 அன்று ஸ்கந்தா நைற் என்ற நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்விற்கு, எனது கணவரும் அப் பாடசாலையின் பழைய மாணவன் என்ற வகையில் நானும் அந் நிகழ்விற்குச் சென்றிருந்தேன்.

அங்கு எமது இளம் பாடகர்களின் பாடல் நிகழ்வு, நடனம் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.கிட்டத்தட்ட நேரம் 8.10pm இருக்கும் என நினைக்கிறேன் சாம் பிரதீபனின் “எங்கட சனங்கள்” என்ற ஓராள் அரங்கம் மேடை ஏறியது. கிட்டத்தட்ட 40,45 நிமிடங்கள் தனது நடிப்பினால்அந்த அரங்கையே கட்டிப்போட்டிருந்தார் சாம் பரதீபன்.

ஒரு மனிதனால் எப்படி முடிகிறது? இலங்கையில் இருந்து லண்டன் வந்த ஒருவர் கடந்து வந்த அத்தனை விடயங்களையும் சிரிப்பு, அழுகை, காதல், பயம், கவலை, வெட்கம், நகைச்சுவை என நவரசத்தையுதம் புழிஞ்சிருந்தார். “அப்புச்சி அழக்கூடாது நீ பிரிட்டிஸ் போண் உனக்கென்ன கவலை எல்லாம் எனக்குத்தான்” என்ற வசனத்தை வந்தவர்கள் எல்லோராலும் என்றுமே மறக்க முடியாது. அபிமன்யு சுபத்திரையின் கர்ப்பத்தில் இருக்கும் போதே போர்ப் பயிற்சியையும், சக்கர வியூகம் பற்றியும் அறிந்திருந்தானாம் புராணம் சொல்கிறது. சாம் பரதீபனும் அவரது தாயின் கர்ப்பத்திலேயே நடிப்புக் கலையைக் கற்றிருப்பார் போல பிறவிக் கலைஞன்.

தீபம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிடக்கல பிடிக்கல நாடகத்தொடர் பார்த்த காலத்தில் அதனைத் தொடர்ந்து வரும் கவி வரிகளுக்குக் கீழ் எழுத்துருவாக்கம் இயக்கம் சாம் பரதீபன் என்று வரும். ஒரு ரசிகையாக யார் இந்த சாம் பிரதீபன்? எனது வாழ் நாளில் எப்படியாவது அந்த மனிதரைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்து. இப்பொழுது அம் மாபெரும் கலைஞனுடன் பழகி அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பை அந்த இயற்கை எனக்கு வழங்கியிருந்தது. இயற்கைக்கு நன்றி. அவருடைய இந்த நாடக்க் கலையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் பெரும் பணியை மெய் வெளியினூடாக செய்துகொண்டிருக்கிறார்.

 

அவருடைய பணி தொடர வேண்டும். இதே போன்ற படைப்புக்களை அவர் தொடர்ந்து தர வேண்டும்.இந்த மாபெரும் கலைஞனை வாழ்த்துவதற்கு வயதோ, அனுபவமோ எனக்கில்லை ஆனால் ஒருவரை வாழ்த்துவதற்கு வயது ஒரு தடையல்ல நல்ல மனதுடன் அவர் நீண்ட நீண்ட காலம் மகிழ்வுடனும், நிறைவுடனும் வாழ மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.