முலான் றூஷ் இரவுக் களியாட்ட விடுதிக் கோபுரத்தின் சிவப்புக் காற்றாடி வீழ்ந்தது!
எவருக்கும் காயமில்லை
பாரிஸ் 18 ஆவது நிர்வாகப் பிரிவில் இரவு பகலாக உல்லாசப் பயணிகளால் நிறைந்து காணப்படும் பிஹால் (Pigalle) பகுதியில் இந்த விடுதி அமைந்திருக்கிறது. அதன் சிவப்பு வர்ணக் காற்றாடி தரையில் கிடப்பதைக் காலையில் கண்ட அப்பகுதி வாசிகளும், உல்லாசப் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பெயரைக் குறிக்கின்ற மூன்று முதல் எழுத்துக்கள் கொண்ட பலகையும் உடைந்து வீழ்ந்துள்ளது..
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முலான் றூஷ் களியாட்ட விடுதிக் கட்டடம் கிரமமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் காற்றாடி திடீரென வீழ்ந்ததற்கு நாச வேலை எதுவும் காரணமாக இ.ருக்காது என்று முலான் றூஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இயன்ற விரைவில் அதனை மீண்டும் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.