ஸ்ரீதரன் எம்பி  சிபாரிசில் 5 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கிய  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட பணிப்புரையின் கீழ், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு சிவஞானம் ஸ்ரீதரன்  சிபாரிசில் 5 கோடி ரூபாய் நிதிகளை ஜனாதிபதி செயலகம் ஒதுக்கியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களுக்கு 3200 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அபிவிருத்தி பணிகளுக்காக பரவலாக்கப்பட்ட முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டுக்கான பரவலாக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் பிராந்திய அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு மேலதிகமாகஇ நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வெளியிடுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட 85 திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபாவாகும். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி சமர்ப்பித்த 89 திட்டங்களுக்கு ஜனாதிபதியினால் விடுவிக்கப்பட்ட தொகை 08 கோடி ரூபாவாகும். அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் 708 திட்டங்களுக்கு 10 கோடி ரூபாவை விடுவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் 85 திட்டங்களுக்காக விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபா.ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட சபை உறுப்பினர் கலாநிதி காவிந்த ஹேஷான் ஜயவர்தனவின் 34 திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை 07 கோடி ரூபா.ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட சபை உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் 25 திட்டங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகை 05 கோடி ரூபா. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட  சுற்றறிக்கை விதிமுறைகளுக்கு இணங்க இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.