இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய கருத்து : பல்வேறு தரப்பினர் கண்டனம்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். ராஜஸ்தான் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி உரையாற்றிய போது ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  மக்களிடம் உள்ள தங்கம் மற்றும் சொத்துகள் எல்லாவற்றையும் பறித்து ஊடுருவல்காரர்களுக்கு கொடுத்துவிடும்’ என தெரிவித்திருந்தார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  ஒவ்வொருவரதும் சொத்துகள் கணக்கிடப்படும் என்று அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் என்ன சொன்னார் ‘நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முன்னுரிமை’ என்றார். அவ்வாறெனில் யாருடைய சொத்துகளைப் பறித்து யாரிடம் தருவீர்கள்.சொத்துகள் ஊடுருவல்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்பதே அதன் பொருள்’ என கூறியுள்ளார். இந்நிலையில் இந்திய பிரதமரின் இவ்வாறான கருத்து தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

மோடியின் கருத்துக்கு கண்டனம் வெளியிட்டுள்ள அமைச்சர் ராகுல் காந்தி ‘முதற்கட்ட வாக்குப்பதிவின் ஏமாற்றத்தால் தோல்வி பயத்தில் மக்களை திசை திருப்பும் செயற்பாடுகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு மக்கள் மத்தியில் பேராதரவு கிடைத்து வருகின்றது’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இது தொடர்பில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ‘தேர்தல் ஆணையத்துக்கு இரங்கல்’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ‘இவ்வாறு ஒரு நாட்டின் பிரதமர் கருத்து வெளியிடுவது இந்திய நாட்டையே உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ளது’ என மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா கண்டனம் வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கமைய மத வெறுப்பு பிரச்சாரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.பிரதமரொருவராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை’ என தெரிவித்துள்ளார்.இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தற்போது எழுந்துள்ள இந்த எதிர்ப்பு பாஜகவின் தோல்விக்கு இட்டுச் செல்லுமா என சந்தேகம் எழுப்பட்டுள்ளது.