விரும்பியிருந்தால் றுவாண்டா இனப் படுகொலையை நிறுத்தியிருக்கலாம்!
பிரான்ஸ் செய்யவில்லை அதிபர் மக்ரோன் ஒப்புதல்"சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வழிவகை இருந்தது.. "
Kumarathasan Karthigesu-பாரிஸ்
றுவாண்டா இனப்படுகொலையைப் பிரான்ஸ் அதன் மேற்கத்திய மற்றும் ஆபிரிக்க நட்பு நாடுகளுடன் சேர்ந்து தடுத்து நிறுத்தியிருக்கலாம். ஆனால் அச்சமயம் அவ்வாறு செய்வதற்கான விருப்பம் இருக்கவில்லை.
-இவ்வாறு அரசுத் தலைவர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார். றுவாண்டாவில் துட்சி இனத்தவர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க முயன்ற ஹுட்டுக்கள் உட்பட சுமார் எட்டு லட்சம் பேர் மிகக் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தின் முப்பாதாவது ஆண்டு நிறைவை ஒட்டியே அவரது இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
“றுவாண்டாவில் இனப் படுகொலை ஆரம்பமாகிய சமயத்தில், அதற்கு முன் அர்மீனியப் படுகொலை, மற்றும் ஹோலோகாஸ்ட் (Holocaust) கொடுமைகளில் இருந்து தப்பியவர்களிடம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் சர்வதேச சமூகம் நிலைவரத்தை மதிப்பிடவும் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை இருந்தது” என்பதை மக்ரோன் இப்போது நினைவுபடுத்தியுள்ளார்.
பிரான்ஸ் றுவாண்டா மக்களின் பக்கம் நிற்கிறது என்பதை உறுதி செய்துள்ள அவர், துட்சி இனத்தில் பிறந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காகத் தியாக மரணத்தைத் தழுவிய பெண்கள், குழந்தைகள், ஆண்கள் உட்படப் பத்து லட்சம் பேரையும் நினைவுகூர்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இனப்படுகொலையின் நினைவேந்தலை முன்னிட்டு மக்ரோனின் இந்தச் செய்தி அடங்கிய வீடியோ ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சமூக வலை ஊடகங்களில் வெளியிடப்படும் என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது.
மக்ரோன் மத்திய ஆபிரிக்க நாடாகிய றுவாண்டாவுக்கு 2021 ஆம் ஆண்டில் விஜயம் செய்த சமயத்தில் துட்சிக்களது இனப்படுகொலையில் பிரான்ஸுக்கு இருக்கின்ற “பொறுப்பை” ஒப்புக் கொண்டிருந்தார். பிரான்ஸ் – றுவாண்டா இடையிலான உறவில் ஓர் புதிய அத்தியாயம் திறக்கப்படுவதாகக் கூறிய றுவாண்டா அதிபர் போல் கஹமே, அதனை அப்போது வரவேற்றிருந்தார்.
அதிபர் மக்ரோன் 2017 இல் முதல் முறை அதிபராகத் தெரிவாகிய சமயத்தில் றுவாண்டா இனப்படுகொலையில் பிரான்ஸின் பங்கினை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகக் குழு ஒன்றை நியமித்திருந்தார். அத்துடன் படுகொலை நிகழ்ந்த சமயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பரிமாறப்பட்ட ராஜீகத் தகவல்களை ரகசிய அரச ஆவணங்களைப் பேணிக் காக்கும் பெட்டகத்தில் இருந்து வெளியே எடுத்துப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்துவதற்கும் உத்தரவிட்டிருந்தார்.
றுவாண்டா தலைநகர் கிஹாலியில் (Kigali) நடைபெறவுள்ள முப்பாதவது ஆண்டு நினைவேந்தல் வைபவத்தில் மக்ரோனின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெபன் செஜோனி (Stéphane Séjourné) கலந்துகொள்கிறார்.
அண்மைக்கால வரலாற்றில் உலகம் வெட்கித் தலை குனிந்த மிக மோசமான இன அழிப்புகளில் ஒன்று 1994 றுவாண்டா படுகொலைகள்.
றுவாண்டாவின் பூர்வீக குடிகளான துட்சி இனத்தவர் (ethnic Tutsis) மீது ஹுட்டு(Hutus) இனத்தவர்கள் கத்திகள், வாள்கள் கொண்டு நடத்தி முடித்த மிக மிலேச்சத்தனமான படுகொலைகளில் நூறு நாட்களில் மொத்தம் எட்டு லட்சம் துட்சிக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.
ஈழத் தமிழர்களது முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைகள் போன்றே இன்றைய உலக அரசியல் ஒழுங்கினாலும் அது சார்ந்த நிறுவனக் கட்டமைப்புகளாலும் தடுக்க முடியாமற்போன மாபெரும் மனிதப் பேரவலம் அது.