வான்பரப்பு எங்கும் சஹாரா புளுதி மேகம்

சுகாதாரப் பாதிப்பு என்ன?

Kumarathasan Karthigesu-பாரிஸ்
ஆபிரிக்காவின் சஹாராவில் இருந்து வருகின்ற மணல் புளுதித் துகள்கள் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வான்பரப்பை மூடிப்பரந்துள்ளன. இன்று வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த வானிலைப் பாதிப்பு இந்த வார இறுதி நாட்களில் தொடரும் என்று மெத்தியோ பிரான்ஸ் (Météo-France) அறிவித்திருக்கிறது.
பாரிஸ் இல்-து-பிரான்ஸ் பிராந்தியம் அடங்கலாகப் பெரும்பாலான பகுதிகளில் வானம் இள மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில் காட்சியளிப்பதை வெற்றுக் கண்களால் காணமுடிகிறது. நகரங்களில் இந்த வானியல் காட்சியைப் பலரும் படங்களுடன் சமூகவலைத்தள ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஆண்டு தோறும் பெப்ரவரி முதல் மே வரையான காலப்பகுதியில் சஹாரா பாலைவனப் புளுதியைத் தென்பருவக் காற்று ஐரோப்பா நோக்கி அள்ளிவருவது வழக்கம். ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் வான் பரப்புகளில் இந்த வாரம் புளுதி மேகம் பரந்துகாணப்படுகிறது. வார இறுதியில் – சனி-ஞாயிறு தினங்களில் அது பிரான்ஸைக் கடந்து செல்லவுள்ளது.
“பாலைவனப் புளுதியோடு வருகின்ற மாசுத் துகள்கள் பத்து மைக்ரோமீற்றருக்கும் (micrometers) குறைவான விட்டம் கொண்டவைதான் என்றாலும் , குறிப்பாக மூக்கின் மட்டத்தில் உள்ள இயற்கையான தடைகளைத் தாண்டி, நுரையீரலுக்குள் நுழையும் திறன் கொண்டவை”-என்று இல்-து-பிரான்ஸின் வளி மாசடைதலைக் கண்காணிக்கின்ற அமைப்பின் (Airparif) அறிவியலாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டோர் புளுதித் துகள்கள் கலந்த மாசடைந்த காற்றைச் சுவாசிப்பது சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தகையோர் வெளிப்புறச் செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
⚫கதிரியக்க ஆபத்து உண்டா?
அண்மைய ஆண்டுகளில் மணல் மேகமாக வந்து பிரான்ஸின் வானம் எங்கும் பரவிய சஹாராப் புளுதியில் வலுக்குறைந்த அணுக் கதிரியக்கத் துகள்கள் கலந்திருப்பதை அணு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.
“சீஸியம் 137” (Cesium 137)எனப்படும் ஆபத்து விளைவிக்காத – வலுக்குறைந்த- கதிரியக்கத் துகள்களே சஹாரா மணலில் காணப்படுவதாக அணுக் கதிரியக்கப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிபுணர்கள் உறுதி செய்திருந்தனர்.
பிரான்ஸ் தனது கட்டுப்பாட்டில் இருந்த அல்ஜீரியாவின் தெற்கு சஹாரா பாலைவனப் பகுதியில் தனது முதலாவது அணு குண்டுப் பரிசோதனையை பெப்ரவரி 13,1960 இல் நடத்தியது.சுமார் எழுபது தொன் கிலோ கொண்ட அந்த அணுகுண்டு 1945 இல் அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய அணுகுண்டுகளை விட மூன்று நான்கு மடங்கு பெரியது.
பின்னர் 1960-1966 காலப்பகுதிக்கு இடையில் தொடர்ந்து மொத்தம் 17 அணுச் சோதனைகளை பிரான்ஸ் அங்கு மேற்கொண்டதாகத் தகவல் உண்டு. அல்ஜீரிய யுத்தத்தைத் தொடர்ந்து செய்யப்பட்ட உடன்படிக்கை ஒன்றின் படி 1967 இலேயே பிரான்ஸ் சஹாராவில் தனது அணுச் சோதனைகளை நிறுத்தியது. பின்னர் அதனுடைய சோதனைக்களம் பசுபிக் தீவுகளான பொலினேசியாவுக்கு (Polynesia) இடம்மாற்றப்பட்டது.
தொடர்ச்சியான அணு சோதனைகளின் விளைவாக சஹாராவில் கதிரியக்கம் கலந்து சூழலுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. சுமார் 60 ஆண்டுகள் கடந்து இப்போதும் பாலைவன மணலில் மிகக் குறைந்த அளவில் கதிரியக்கம் கலந்தே உள்ளது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">