வடகிழக்கை இலக்கு வைத்து 200 மதுபான நிலையங்களை திறப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் திட்டம்.

இலங்கை முழுவதுமாக 200 மதுபான நிலையங்களை திறப்பதற்கான அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 15 அனுமதிப்பத்திரங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் சுமார் 18 கோடி பெறுமதியில் விற்கப்பட்ட மதுபானச்சாலைக்கான அனுமதிகளில் பெரும்பாலானவை வடகிழக்கை இலக்கு வைத்தே நிறுவப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.அதிலும் வடகிழக்கில் 82 புதிய மதுபானச்சாலைகளிற்கான அனுமதி அரசால் திட்டமிட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முதல் கட்டமாக பூநகரி மற்றும் பரந்தனில் மதுபான நிலையங்கள் இம்மாதத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 200 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா, அதில் 15 மதுக்கடைகளுக்கு ஏற்கனவே உரிமம் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அரசு வெளியிட வேண்டும் என்று சஜித் பிறேமதாசா கோரிக்கை விடுத்துள்ளார்.தேர்தலை இலக்காகக் கொண்டு ஏற்கனவே ஆறு மதுபான உற்பத்தி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கலால் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறியின் அனுமதியின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.அத்துடன் வருங்கால அரசாங்கம் இவ்வாறான அனைத்து சட்டவிரோத உரிமங்களையும் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.