தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் முதல் ஆரம்பம்.

7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் முதற்கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில் மார்ச் 20ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர்.

மார்ச் 27ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்படவுள்ளது. மார்ச் 30ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது ஒரு மக்களவைத் தொகுதியைக் கொண்ட புதுச்சேரிக்கும் இந்த அட்டவணை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தேர்தலில் போட்டியிட விரும்புவோர் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுலர்களிடம் தங்களது வேட்பு மனுக்களை அளிக்கலாம். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் வரை 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்புமனு அலுவலகத்திற்குள், வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் பகுதியில் 360 டிகிரி கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.