மாணவிகளிடையே கணித அறிவுத் தூண்டலுக்கான விசேட தூதராக இளம் அழகியின் பெயர் அறிவிப்பு

 கணித அறிவுத் திறன் பிரான்ஸ் பின்னடைவு

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரான்ஸின் இந்த ஆண்டுக்கான இளம் அழகி எவ் ஜீல் (Eve Gilles) கணித படத்துக்கான விசேட “தூதராக”ப் (“ambassador”) பிரதமர் கப்ரியேல் அட்டாலினால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மார்ச் 14 ஆம் திகதி உலக கணித அறிவியல் தினமாகும். அதனை ஒட்டி அழகி எவ் ஜில்லுடன் சேர்ந்து இன்ஸ்ரகிராம் சமூக ஊடகத் தளத்தில் வீடியோ செய்தி ஒன்றைப் பிரதமர் அட்டால் வெளியிட்டிருக்கிறார்.
கணித அறிவியலில் இளம் பெண்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்கு அதி உயர் முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர் அந்தச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாடசாலை மாணவர் மத்தியில் குறிப்பாகப் பெண் பிள்ளைகள் மத்தியில் கணித பாட ஆர்வத்தை- அறிவுத் திறனை- தூண்டுகின்ற ஒரு முயற்சியாகவே இளம் யுவதிகளால் பெரிதும் கவரப்படுகின்ற முக்கிய கணித அறிவியல் மாணவியான இளம் அழகியைச் சிறப்புத் தூதராக அறிவித்திருக்கிறார் அட்டால்.
2024 ஆம் ஆண்டின் அழகியாகத் (Miss France) தெரிவாகிய 21 வயதான எவ் ஜீல் கணிதம் மற்றும் கணனி அறிவியல் துறை இரண்டாம் வருட மாணவியாவார். அவர் ஒரு புள்ளிவிவரவியல் நிபுணராக வர விரும்புகிறார்.

எதிர்கால உலகை வடிவமைக்கப்போகின்ற கணிதம் மற்றும் அறிவியல் துறைகளில் பெண்கள் தயக்கம் இன்றிச் சாதனை புரியவேண்டும் என்ற விருப்பத்தைத் தொடர்ந்து வெளியிட்டுவருபவர்.

“நான் பல்கலைக் கழகம் சென்றபோது கணித அறிவியல் துறையில் அங்கு என்னோடு மேலும் சில பெண்கள் இருப்பதை அவதானித்தேன்.அதுமட்டுமல்ல, தோழிகளே, கணிதத்திலும், மற்ற எல்லாவற்றிலும், உங்களால் முடியாது என்று யாரும் உங்களிடம் சொல்வதற்கு அனுமதிக்காதீர்கள்”
“எங்கள் பலம், மலைகளை நகர்த்தும் திறன்கொண்டது என்பது எனக்குத் தெரியும். ஒர் இலக்கு இருந்தால், நாம் அதை அடைய முடியும். நாளைய உலகை வடிவமைக்கும் இந்தத் துறைகளில் ஈடுபட நம்மில் பலர் அப்போது அங்கு இருப்போம்..”
-இவ்வாறு அந்த இளம் அழகி தனது தோழிகளுக்கு நம்பிக்கையூட்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
சமீப காலமாகப் பிரான்ஸில் பாடசாலை மாணவர்களிடையே சகல மட்டங்களிலும் கணித அறிவு குன்றி வருகிறது. ஐரோப்பாவிலேயே கணிதத் திறனில் பிரான்ஸின் மாணவர்கள் அடிமட்டத்தில் உள்ளனர் என்ற கவலைதரும் நிலை தோன்றி உள்ளது. அதைவிடக் கடந்த ஆண்டு பாடசாலைகளில் நடத்தப்பட்ட ஒர் ஆய்வு அறிக்கை, பெண் பிள்ளைகள் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களைத் தாங்களாகவே நிராகரித்து விலகிப் போகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை உள்ளடக்கி இருந்தது.
பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வித் துறைகளில் மாணவிகளின் கணித பாட ஆர்வத்தைத் தூண்டுவதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கின்ற திட்டங்களை பிரதமர் கப்ரியேல் அட்டால் முன்னர் உயர் கல்வி அமைச்சராக இருந்த சமயத்தில் தொடக்கி இருந்தார்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">