வெடுக்குநாறி விவகாரம்: ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

வவுனியா – வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கேஸ்வரரை வழிப்படுவதற்காக சிவராத்திரி தினத்தன்று குழுமியிருந்த மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்கள் மேற்கொண்ட நிலையில், அதனை விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்றை அமைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த கோரிக்கையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் இடம்பெறக்கூடாது எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது வழக்கானது வரும் 19 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.