தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள  ஜனாதிபதி ரணில் எடுக்கும் நடவடிக்கை.

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் நகர்வுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டுவருவதாக யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்தவிடாமல் பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை, தென்னிலங்கை வாக்குகளை பெற இனவாத தீயினை மூட்டுவதற்கான முன்னேற்பாடாக நோக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அடாவடித்தனத்துக்கு பின்னால் ஜனாதிபதி தேர்தலை இலக்காக வைத்து வாக்குகளை பெற தென்னிலங்கை முயற்சிக்கின்றதா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வர ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளை நடத்த விடாமல் பொலிஸார் அராஜகம் புரிந்தமைக்கு கண்டனம் தெரிவித்து நேற்று  இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டிடமான வவுனியா வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் விளங்குகின்ற நிலையில் அதனை முழுமையான பௌத்த பூமியாக மாற்றுவதற்கு அரச இயந்திரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கை அரசியலமைப்பில் மத வழிபாட்டுக்கான உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை பொலிஸார் சட்டத்தை மீறி காடைத்தனமாக செயற்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.