இளவரசி கேற் சத்திரசிகிச்சையின் பின்பு வெளியிட்ட முதலாவது படத்தால் பெரும் குழப்பம்!

Kumarathasan Karthigesu-பாரிஸ்

எடிட் செய்த அடையாளங்கள் செய்தி நிறுவனங்கள் நீக்கின

உத்தியோகபூர்வ படத்தை உருமாற்றியதை அவரே பின்பு ஒப்புக்கொண்டார்

வேல்ஸ் இளவரசி கேற் அவரது சத்திர சிகிச்சைக்குப் பின்னர் எடுத்துக் கொண்டது எனத் தெரிவித்து வெளியிட்ட முதலாவது உத்தியோகபூர்வ புகைப்படம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து கென்சிங்டன் அரண்மனை அதனை நீக்கியிருக்கிறது.
42 வயதான இளவரசி ஜனவரியில் வயிற்றில் அறுவைச் சிகிச்சைசெய்து கொண்ட பின்னர் அவரது உடல் நிலை தொடர்பாக ஒன் லைன் ஊடகங்களில் வதந்திகள் பரவிவருகின்றன. இளவரசி கடைசியாக நத்தார் ஆராதனையில் நேரடியாகப் பங்குகொண்ட பின்னர் இதுவரை அவர் பொது வெளியில் தோன்றவில்லை.
இந்த நிலையில் – அவரது நோய் குறித்த ஊகங்களுக்கு மத்தியில்- அன்னையர் தினத்தை ஒட்டி இளவரசி குழந்தைகளுடன் ஒன்றாகத் தோன்றும் புகைப்படம் ஒன்று முதல்தடவையாக உத்தியோகபூர்வ படம் எனத் தெரிவித்து வெளியிடப்பட்டிருந்தது.
கணவர் இளவரசர் வில்லியத்தினால் எடுக்கப்பட்ட குடும்பப் படம் அது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கேற் தனது அன்னையர் தின வாழ்த்தையும் பதிவுசெய்திருந்தார்.
இளவரசி மூன்று குழந்தைகள் சகிதம் சிரித்தவாறு கதிரையில் அமர்ந்து அவர்களை அணைத்துக் கொண்டிருப்பதைக் காட்டும் அந்தப் படம் வெளியான சிறிது நேரத்தில் அது தொடர்பாக பல்வேறு ஐயங்களும் கேள்விகளும் எழுந்தன.
இளவரசியின் படம் எடிட் செய்யப்பட்டு உருமாற்றப்பட்டது என்பதைக் காட்டும் அடையாளங்களை அதில் குறித்துக் காட்டிச் செய்தி நிறுவனங்கள் அதனை மீள வெளியிடத் தொடங்கின. அதனால் குழப்பங்கள் வலுத்தன.
கென்சிங்டன் அரண்மனையால் (Kensington Palace) வெளியிடப்பட்ட அந்தப்படத்தை ஏஎப்பி, ரொய்ட்டர், ஏபி உட்பட ஐந்து முக்கிய சர்வதேச செய்தி நிறுவனங்கள் பிரசுரித்துச் சிறிது நேரத்திலேயே நீக்கிவிட்டன. படம் எடிட் செய்யப்பட்டு உருமாற்றப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்தும் அது தொடர்பில் அரண்மனை விளக்கம் எதனையும் அளிக்கத் தவறியதாலும் படத்தை நீக்கிவிட்டதாக செய்தி நிறுவனங்கள் அறிவித்தன. அதனால் இளவரசி தொடர்பான சர்ச்சைகளும் குழப்பங்களும் இணையத்தில் மேலும் பரவி வைரலாகின.
இந்தக் குழப்பங்கள் நீடித்துவந்த நிலையில் இளவரசியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் புதிய பதிவு ஒன்று வெளியானது.
தனிப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் போலவே எனது படங்களை அவ்வப்போது எடிட் செய்து பார்க்கும் பழக்கம் என்னிடமும் உள்ளது. நேற்று நாங்கள் பகிர்ந்த அது போன்ற குடும்பப் படத்தினால் ஏற்பட்ட குழப்பங்களுக்காக மன்னிப்புக் கோருகின்றேன் – என்று இளவரசி கேற் அந்தப் பதிவில் எழுதியுள்ளார்.
புகைப்படம் போட்டோ ஷொப்பில் எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியான நிலையில் அதன் மூலப் படத்தை வெளியிடுமாறு அரண்மனை மீது அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">