வெள்ளப் பெருக்கில் காருடன் சிக்குண்ட சிறுவர்கள் உட்பட 6 பேரைக் காணோம்!

"மொனிக்கா" தாழமுக்கம் Gard மாவட்டம் கடும் சேதம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
“மொனிக்கா” எனப் பெயரிடப்பட்ட தாழமுக்கத்தினால் (depression Monica) உருவாகிய பலத்த மழை வெள்ளம் பிரான்ஸின் தெற்கு அத்திலாந்திக் கரையோர மாவட்டங்களைப் பெரிதும்
பாதித்துள்ளது. குறிப்பாக Gard என்ற மாவட்டத்தில் குறைந்தது ஆறு பேர் வெள்ளத்தில் காணாமற் போயிருக்கின்றனர்.
Gard பொலீஸ் தலைமையகம் விடுத்த பிந்திய சேத விவர அறிக்கையின்படி – Dions என்ற இடத்தில் ஒரு தந்தையும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர்கள் பயணம் செய்த காருடன் காணாமற்போயிருக்கின்றனர். அதே காரில் இருந்த நான்காவது பயணியான பெண் ஒருவர் தீயணைப்பு வீரர்களால் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டிருக்கின்றார்.
Gagnières என்ற கிராமத்தில் ஆற்றுப் பாலம் ஒன்றைக் கடக்க முற்பட்ட கார் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதிலிருந்த இரு ஆண்களில் ஒருவர் ஆற்றங்கரையோர மரம் ஒன்றில் தாவி ஏறித் தப்பியுள்ளார். சாரதி காருடன் காணாமற் போயுள்ளார்.
இவர்களை விட பெல்ஜியம் நாட்டு உல்லாசப் பயணிகள் என நம்பப்படும் இருவர் Goudargues என்ற பகுதியில் காணாமற்போயுள்ளனர். இவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
வெள்ளப் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடும் மழை ஓரளவு தணிந்து வருகிறது.