திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கீடு

 

திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கமல்ஹாசனும் கையெழுத்திட்டனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக, இந்திய முஸ்லிம் லீக், கொ.ம.தே.க. கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம், திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சு வார்த்தை எளிதில் முடிவடையாமல் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன். இதையடுத்து மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் 2024 மக்களவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்தார்.

இத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.