பிரசவ விடுமுறை இனி பெற்றோருக்கு ஆறு மாதங்கள் மட்டுமே! புதிய திட்டம் விரைவில்!!
கருவுறுவதை ஊக்குவிக்க அரசு விருப்பம் - மக்ரோன்
Kumarathasan Karthigesu-பாரிஸ்
பிரசவத்துக்காக வழங்கப்படுகின்ற சம்பளத்துடன் கூடிய விடுமுறையில் மிகப் பெரிய மாற்றம் வரவிருக்கிறது. குழந்தை பிரசவித்த தம்பதிகள் தாய் – தந்தை இருவருக்கும் இனிமேல் ஆக ஆறு மாதங்கள் மட்டுமே முழுச் சம்பளத்துடன் லீவு கிடைக்கும். தற்போது உள்ளது போன்று தாய்மார் குறைந்த ஊதியத்துடனும் ஊதியம் இல்லாமலும் சில ஆண்டுகளுக்கு தொழிலுக்குச் செல்லாமல் விடுமுறையில் நிற்கின்ற வசதியைத் தொடர்ந்தும் ஊக்குவிப்பதில்லை என்று அரசு தீர்மானித்துள்ளது.
பிறப்பு வீதத்தை அதிகரிக்கவும் அதேசமயம் பிரசவ விடுமுறைக் காலத்தைக் குறைக்கவும் அரசு விரும்புகிறத அதிபர் மக்ரோன் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அறிவித்த புதிய திட்டங்களில் இதுவும் ஒன்று.
“Le congé parental” எனத் தற்சமயம் அழைக்கப்படுகின்ற பிரசவ வேலை விடுமுறை இனிமேல் “congé de naissance” என்ற புதிய பெயருக்கு மாற்றப்படவிருக்கிறது என்ற தகவலையும் அவர் அங்கு வெளியிட்டார்.
புதிதாகக் குழந்தை பெற்றவர்கள் அவர்கள் விரும்பினால் ஆறு மாதங்கள் நிறைவான ஊதியத்துடன் விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும் – என்று அரசுத் தலைவர் தெரிவித்தார்.
பெண் தொழிலாளர்கள் தங்கள் பிரசவ விடுமுறையை மிக நீண்டதாக-வருடக் கணக்கில்- பெற்றுக் கொள்வதால் அது தொழில் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் அரச செலவீனங்களும் அதிகரித்து வருகிறன என்று கூறப்படுகிறது.
அவ்வாறான இழப்புகளைத் தவிர்ப்பதற்காகவே அரசு பிரசவ விடுமுறைக் காலத்தைப் பெற்றோரது விருப்பத்துடன் குறைப்பதற்குத் திட்டமிடுகிறது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் –
நாட்டில் கருவுறாமை(infertility) வீதம் சமீப காலங்களாகக் உயர்வடைந்து செல்வதைக் குறிப்பிட்ட அதிபர், சனத்தொகை மறுசீரமைப்புத் திட்டம் குறித்துச் சந்திக்கவேண்டிய நிலை இருப்பதால் அதற்கு முன்பாகப் பிரசவ விடுமுறைத் திட்டத்தில் மாற்றம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தார்.
பிரான்ஸில் பிறப்பு வீதம் உலகப் போருக்குப் பின்னர் முதற் தடவையாகக் கடந்த ஆண்டில் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.