250 செய்தியாளர்கள் பங்கேற்ற பெரும் மாநாடு எலிஸேயில்! அரசின் திட்டங்களை மக்ரோன் அறிவிப்பு.

இரவு இரு மணிநேரம் கேள்விகளுக்கு பதில்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

அதிபர் மக்ரோன் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் பங்கேற்ற மாநாடு ஒன்றை நேற்றிரவு எலிஸே மாளிகையில் நடத்தியிருக்கிறார். தனது இரண்டாவது ஐந்தாண்டு பதவிக் காலத்தின் எஞ்சியுள்ள மூன்று ஆண்டுகளை எதிர்கொள்ளுகின்ற அவர், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உட்பட பல துறைகளில் செய்யப்படவுள்ள சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் அந்தச் செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்டிருக்கிறார்.

மாநாட்டில் சுமார் 250 செய்தியாளர்கள் பங்கேற்றனர் என்று அறிவிக்கப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரம் செய்தியாளர்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு முன்பாக அவர் ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அதில் புதிய பிரதமர் அட்டால் தலைமையிலான அரசின் பல்வேறு திட்டங்களைப் பிரஸ்தாபித்தார்.

பாடசாலைச் சீருடை, குடிமை தொடர்பான கட்டாய கல்விப்போதனை (civic education) ,நாடகமும் அரங்கியலும் வகுப்புகள் , டிஜிட்டல் திரைகளில் சிறுவர்களுக்கான கட்டுப்பாடுகள், போதைப் பொருளை ஒழிக்கப் பொலீஸ் சோதனை, மகப்பேற்றை அதிகரித்தல், மகப்பேற்று விடுமுறையில் மாற்றங்கள்… நடுத்தரக் குடும்பங்களுக்கு 2025 முதல் இரண்டு பில்லியன் ஈரோ வரிக் குறைப்பு… எனப் பல்வேறு திட்டங்களை அவர் தொடராகச் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

உக்ரைன் போர், இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் உட்படப் பூகோள அரசியல் நிலைவரம் தொடர்பான முக்கிய பல கேள்விகளுக்கும் மக்ரோன் பதிலளித்துள்ளார். உக்ரைனுக்குப் புதிதாக ஆயுதங்களை வழங்குவது பற்றியும், போரை விரிவுபடுத்தி விடும் என்ற காரணத்துக்காக யேமனியின் ஹூதி தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துள்ள வான் தாக்குதலில் பிரான்ஸ் பங்கேற்காது என்பதையும் அவர் அறிவித்தார்.

34 வயதான இளம் பிரதமர் கப்ரியேல் அட்டால் தலைமையில் நாட்டின் புதிய அமைச்சரவையை அறிவித்து ஒரு சில நாட்களுக்குள் இவ்வாறு ஒரு பிரமாண்டமான செய்தியாளர் மாநாட்டை மக்ரோன் நடத்தியிருக்கிறார். அவர் இதற்கு முன் இவ்வாறு செய்தியாளர்களை நேரெதிரே சந்தித்துக் கேள்விகளுக்குப் பதிலளித்ததில்லை.

அவர் இதுபோன்ற செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்துவது ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதல் தடவை ஆகும். பொதுவாக வெளிநாட்டுப் பயணங்களின் போது அங்கெல்லாம் செய்தியாளர்கள் சந்திப்புகளில் கலந்துகொள்கின்ற அவர், உள்நாட்டில் அவ்வாறு பத்திரிகையாளர்களையும் ஊடகவியலாலர்களையும் கூட்டாக அழைத்து நேர்முகமாகச் சந்திப்பதைத் தவிர்த்தே வந்திருக்கிறார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தொலைக்காட்சி வழியான நேர்காணல்களை மட்டுமே அவர் நாட்டுக்கு வழங்கி வருகின்றார்.

மக்ரோனின் நேறறைய செய்தியாளர் மாநாட்டை நாட்டின் முக்கிய சில தொலைக்காட்சிகள் நேரஞ்சல் செய்தன. பிரதமர் கப்ரியேல் அட்டால் உட்பட புதிய அமைச்சர்களும் மாநாட்டில் பார்வையாளர்களாகப் பங்கேற்றிருந்தனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">