புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலரும் விசித்திரமானவர்கள்
- காவியா -
தமது பணிகளை தாமே நின்று செய்தாக வேண்டிய பணிகளை இன்னும் ஒருவர் செய்வர் என ஆழமாக நம்புபவர்கள்.கற்பனைவாதிகள்.
2009 முன்னர் மத்திய அரசில் ஆட்சியமைத்த காங்கிரஸ் கூட்டணிகளுடன் காலத்திற்கு காலம் இணைந்து ஆட்சியமைத்தவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு சாதிய கட்சிகளை மையமாக வைத்து அரசியல் செய்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அழைத்து வந்து புலம்பெயர்ந்த நாடுகளில் மேடையேற்றி அழகு பார்த்தனர்.
2009 பின்னர் தமிழீழ தேசிய தலைவரின் பெயரை சொன்னவரை தமிழீழ தேசியக் கொடிக்கும்,குறித்த கட்சிக் கொடிக்கும் வேறுபாடு தெரியாமல் அழகு பார்த்தனர்.
சம நேரத்தில் 2014 பின்னர் மத்திய அரசில் மாற்றம் வந்தவுடன் மத்திய அரசின் கட்சிகளில் இருந்தும் சிலரைக் கொண்டு வந்து அழகு பார்த்தனர்.
திருமதி வானதி சிறீனிவாசன் அவர்களை கனடிய ஈழத்தமிழர்கள் அழைத்து வந்து 2019 காலங்களில் எமக்காக குரல் கொடுப்பார்கள் என நம்பினர்.
பின்னர் கடந்த மாத இறுதியில் இந்திய தூதரகம் சார்ந்து வந்த திரு அண்ணாமலை அவர்களை ஈழத்தமிழர்களில் சிலர் தமது மேடையில் வந்தும் பேசும்படி அழைக்க அவரும் தனது நலனையும் கருத்தில் கொண்டு இவர்களின் மேடைகளில் பேசிவிட்டு சென்றார் …
ஈழத்தமிழர்களாகிய நாம் கடந்த காலங்களில் பலரை கொண்டு வந்து புலம்பெயர்ந்த மேடைகளில் பேச வைத்தாலும் இந்தியாவில் நாம் விரும்பிய மாற்றங்களை இந்த நிகழ்விற்கு அழைத்து வந்தவர்களால் ஏற்படுத்த முடியாத நிலை உள்ளதாக இருப்பதை அறிய முடிகிறது என்றால் ஈழத்தமிழர்களாகிய நாமே எமக்காக இலட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டிய தேவை உள்ளதை அறிய வேண்டும் …
அதனை விடுத்து மற்ற நாட்டு அரசியல்வாதிகள் எமக்காக போராடுவார்கள் என எண்ணுவது ஈழத்தமிழர்களாகிய எமது ஒவ்வொருவரதும் அறியாமைதான்.
இந்த அறியாமையில் இருந்து வெளிவந்து ஈழத்தமிழர்களாகிய எமது இலட்சிய கனவாக தமிழீழத்தை வென்று எடுக்க அரச அறிவியலூடாக சனநாயக முறையில் நின்று வேண்டியுள்ளது
ஈழத்தமிழர்களாகிய நாம்,
இந்திய மாநிலங்களில் உள்ள கட்சிகள் பலவும் சாதிய ,மத,கொமினிச சித்தாந்த கட்சிகளாக இருந்ததே உண்மையாக இருக்க சாதியமற்ற ,மதமற்ற தமிழ்த்தேசியவாதிகளாக அடையாளப்படுத்திக்கொண்டு..,
இந்தியாவில் சாதிய ,மத அரசியலைப் பேசி அரசியல் செய்பவர்களை நடைமுறையில் கொண்டு வந்து மேடையேற்றுவதும் அதனை தொடர்வதும் விசித்திரமானதுதான்
ஈழத்தமிழர்களாகிய நாம் ,மேலைத்தேய,முதலாளித்துவ நாடுகளில் நடைமுறை வாழ்வியலை வாழ்ந்துகொண்டு,கொமினிச சித்தாந்த அரசியல்வாதியாக உள்ளவர்களை அழைத்துவந்து ஒரு நாட்டை வென்று எடுக்க போராடும் இனம் தாம் வாழும் நாட்டின் அரசியல் சித்தாந்தத்தை ஆழமாக புரியாது தம்மைத் தமிழ்த்தேசியவாதிகள் என மார்பில் தட்டுவதும், நெஞ்சை நிமிர்த்தி 180000 மேற்பட்ட எமது ஈழத்தமிழ் மக்களையும் 50000 மேற்பட்ட மாவீரர்களையும் இழந்த பின்பும் அஞ்சா வீரரென அறைகூவல் ஆச்சரியமான விசித்திரம் தான்.
மத,சாதிய,கொமினிச அரசியல்வாதிகளை தமக்கு சார்பாக இருக்கின்ற ஈழத்தமிழரில் ஒருவர் அழைத்து வந்தால் அவர் சரியானவர் என நியாயப்படுத்த முனைவதும் தமக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத ஒருவர் மேற்குறித்த ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக குறித்த விடயத்தை தவறான முறையாக சித்தரிப்பதும் , பொங்கி எழுவதும் மாபெரும் அதிசயம் தான்.
ஈழத்தமிழர்களாகிய நாங்கள் முதலில் உண்மையான தமிழ்த்தேசியவாதியாக தம்மை முன்னிலைப்படுத்த முனைபவர்கள் எல்லோரும் , தனிப்பட்ட தமது தனிமனித விருப்புகளின் ஊடாக முடிவெடுக்காது, தமிழீழ மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி முடிவெடுக்க நாம் அனைவருமே முன்வர வேண்டும் .