தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.

தமிழகத்தில் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கடுமையான போக்கு நிலவி வருகிறது. ஆளுநரின் செயல்பாடுகள் அரசுக்கு எதிராக உள்ளது என்று அரசு குற்றச்சாட்டி வருகிறது. பொது நிகழ்ச்சியில் ஆளுநர் பேசும் கருத்து சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதனால், ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வழியுது வருகின்றனர்.

அதுவும் செந்தில் பாலாஜி விவகாரத்தில், ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே கடும் வார்த்தை போர் நிலவி வருகிறது.இதனால் ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆளுநர் ஆர்என் ரவி, வெளிப்படையாக அரசின் கொள்கைகளுக்கு முரணாக செயல்படுகிறார். ஆளுநர் என்பவர் நேர்மையான நபராக இருக்க வேண்டும். மாநிலம் அரசும், சட்டமன்றமும் செய்து வரும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.அரசியல் வாதியாக மாறும் ஒரு ஆளுநர் அப்பதவியில் தொடர கூடாது.

அரசின் முடிவுகளுக்கு சவால் விடும் வகையில் ஆளுநர் செயல்பட கூடாது. சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் தேவையின்றி காலதாமதம் செய்கிறார். சட்டமன்றத்தின் முடிவு மீது ஒரு ஆளுநர் மேல்முறையீட்டு அதிகாரியாக இருக்க முடியாது. அரசுடன் கருத்தியல் மற்றும் அரசியல் போரில் ஆளுநர் ரவி ஈடுபட்டு வருகிறார். ஊழல் புகாரில் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்காமல் இருப்பது விசித்திரம்.தனிப்பட்ட அரசியல். மதக்கருத்துகளை பொது வெளியில் தெரிவிப்பது ஆளுநர் பதவிக்கு பொருத்தமற்றது.

ஆளுநர் என்பவர் மக்களின் தலைவர் அல்லஇ நியமனம் செய்யப்பட்ட நிர்வாகி. அரசின் மீது அவமதிப்புஇ வெறுப்பு, அதிருப்தி, தவறான எண்ணத்தை தூண்ட முயல்கிறார். மலிவான அரசியலில் ஆர்வம் கொண்டவராக உள்ளார் ரவி. குழந்தை திருமண விவகாரத்தில் ஆளுநர் தெரிவித்த கருத்துக்கள் குற்றவாளிகளை ஆதரிக்கும் வகையில் இருந்தன.சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். மேலும், காவல்துறை விசாரணைக்கு இடையூறாகவும் ஆளுநர் ரவி செயல்பட்டார்.

வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தியபோது அவரது உட்சபட்ச சர்வாதிகாரம் வெளிப்பட்டது.இந்தியாவின் மகத்தான தலைவர்களின் பெயர்களை குறிப்பிட மறுத்தது அவமதிக்கும் செயலாகும். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ரவியின் செயல்பாடு கடுமையான அரசியலமைப்பு மீறலாகும். எனவே, ஆளுநர் போன்ற உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் ஆர்என் ரவி நீடிப்பது பொருத்தமானதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.