“சீனாவின் ஒருவித அடிமைப்படுத்தலில் சிக்குகின்றது ரஷ்யா”

Kumarathasan Karthigesu

உக்ரைனுடனான போரில் புவிசார் அரசியல் ரீதியில் மொஸ்கோ தோற்றுவிட்டது அதிபர் மக்ரோனின் மதிப்பீடு.

உக்ரைனில் இதுவரை நடைபெற்ற போரில் “ரஷ்யா பூகோள அரசியல் ரீதியாகத் தோற்றுப்போய் விட்டது” என்றும் “சீனாவைப் பொறுத்த வரையில் அது ஒருவிதமான அடிமைப்படுத்தல் வடிவத்தில் ரஷ்யாவினுள் நுழைகிறது” எனவும் அதிபர் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

பிரான்ஸில் வெளியாகின்ற வணிக சார்பு ‘L’Opinion’ (Opinion) பத்திரிகைக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் தனது இவ்வாறான மதிப்பீட்டை வெளியிட்டிருக்கிறார்.

ரஷ்யா அதன் பாரம்பரியக் கூட்டணி நாடுகளுடன் – சீனா போன்றவற்றுடன் – மீண்டும் நட்புறவுபாராட்டுவதையும், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளை இணைத்து நேட்டோ அமைப்பு விரிவு படுத்தப்படுவது போன்ற போருக்குப் பிந்திய மாற்றங்களையும் சுட்டிக் காட்டி, அவற்றின் அடிப்படையிலேயே பூகோள அரசியல் ரீதியாக மொஸ்கோ தோற்றுப் போய்விட்டது என்ற தனது கருத்தை மக்ரோன் அந்தச் செவ்வியில் முன்வைத்துள்ளார்.

“உக்ரைன் நாடு முழு அளவில் பாதுகாக்கப்படுவதிலேயே ஐரோப்பாவின் பாதுகாப்புக் கட்டமைப்பின் நீண்ட எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை எப்போதுமே வலியுறுத்தி வருகிறேன். அது ரஷ்யாவுடன் மோதாமல் நிலையான சமநிலையுடன் கட்டியமைக்கப்பட வேண்டியது ஆகும். ஆனால் அதற்கு இன்னும் பல படிகளைத் தாண்டவேண்டி இருக்கும் “-என்றும் மக்ரோன் மேலும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள அவரது செவ்வியில் நாட்டில் உருவாகியுள்ள ஓய்வூதியச் சட்ட எதிர்ப்பு, அது தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக் கோரிக்கை , விலைவாசி அதிகரிப்பு, நடுத்தர மக்களது வாழ்க்கைச் சுமை உக்ரைன் போர் உட்படப் பல்வேறு விடயங்கள் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">