முதற் சுற்றில் வெற்றி வாய்ப்பை இழந்தார் எர்டோகன்!

Kumarathasan Karthigesu

இரு போட்டியாளருக்கும் 50 வீதத்துக்கு கீழ் வாக்கு அதனால் அடுத்த சுற்று

துருக்கியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் நாடு அதன் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக அடுத்த இரண்டாவத சுற்று வாக்களிப்பைச் சந்திக்கவேண்டிய நிலைமையைக் காட்டுகின்றன.

97 வீதமான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் அதிபர் ரெசெப் ரய்யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) 49.39% வீத வாக்குகளுடன் முதனிலையிலும் எதிரணி வேட்பாளர் கெமால் கிளிசடரோக்லு (Kemal Kiliçdaroglu) 44.92% வீத வாக்குகளுடன் அவருக்கு அடுத்த நிலையிலும் உள்ளார். ஆனால் இருவரில் எவருமே 50 வீத வாக்குகளைப் பெறாத காரணத்தால் நாட்டின் தேர்தல் விதிப்படி இரண்டாவது சுற்று வாக்களிப்பைச் சந்திக்கவுள்ளனர்.

கடந்த இரண்டு தசாப்த காலமாகத் துருக்கியை ஆண்டு வருகின்ற சக்தி மிக்க தலைவர் எர்டோகன்(Recep Tayyip Erdogan). அவர் தேர்தல் ஒன்றில் முதல் சுற்றில் வெல்லமுடியாமற் போவது இதுவே முதல் முறையாகும்.

நேற்றிரவு முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும் தாங்களே வெற்றி பெற்றதாக இரண்டு தலைவர்களும் மாறி மாறி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். எனினும் எவர் ஒருவருமே 50 வீத வாக்கை எட்டவில்லை.

நேற்றைய வாக்களிப்பு நாட்டின் அடுத்த அதிபரை மட்டுமன்றி நாடாளுமன்றத்தின் அறுநூறு இடங்களுக்குப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காகவும் சேர்த்தே நடத்தப்பட்டது. அதில் எர்டோகனின் கட்சி 34 சதவீத வாக்குகளைப் பெற்று 267 ஆசனங்களை வெல்லும் நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் துருக்கியைத் தாக்கிய பாரிய நில நடுங்கங்களில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்கு அவசர உதவிகள் கிடைப்பது தாமதமானதால் எழுந்த கடும் விமர்சனங்கள் எர்டோகனின் அரசியல் செல்வாக்கில் தாக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையிலேயே தேர்தலின் முதற் சுற்றில் அவர் வெல்ல முடியாமற்போயிருக்கிறது.

எர்டோகனின் நீண்ட அதிகார ஆட்சி மீதான துருக்கி மக்களது கருத்துக் கணிப்பாகக் கருதப்பட்ட இத் தேர்தல் முடிவுகள் மத்திய கிழக்கில் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. நேட்டோ உறுப்பு நாடாகிய துருக்கியின் அதிபர் எர்டோகன், ரஷ்ய அதிபர் புடினின் மிக நெருங்கிய கூட்டாளி ஆவார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">