கண்டோம் …. கடலளவு கனவு – செட்டை கட்டிவந்த கனவுப் பட்டாம்பூச்சிகளில்  மிகச் சிறியவள் கவனத்தை ஈர்த்தாள்

- சி.குலசபாநாதன் -

தமிழ் அரங்கப் பரிச்சயத்தை  மீண்டும் மக்கள்மயப்படுத்தும்  தீவிர குறிக்கோளோடு லண்டனில் இயங்கிவரும்  “மெய்வெளி நாடகப் பயிலகம்”    மிகச் செம்மையான முறையிலேயே அடித்தளம் அமைத்துவருவதை தொடர்ச்சியாக அவதானித்து வருகிறேன். பாலப் பருவத்து, முன்பதின்மைப் பருவத்து சிறார்களை உள்ளீர்த்து அவர்களது உள்ளார்ந்த ஆற்றுகைத் திறன்களை வெளிக்கொணர ஆற்றுப்படுத்தி நிற்கும் பயிற்றுநர்களின் முத்திரை சிறார்களின் ஒவ்வொரு அசைவிலும் பரிணமிப்பதை பார்த்து வருகிறேன். ரஜித்தாவும் சாம் பிரதீபனும் அண்ணாவி மரபு முதல் ஐரோப்பிய ஆற்றுகை மரபுகள் ஊடே பல்வேறு பட்டறைகளில் பண்படுத்தப்பெற்ற கலைஞர்கள்ஆசான்கள்பயிற்றுநர்கள். தங்கள் கைவசம் உள்ளவற்றை ஆர்வமுள்ளவர்களிடம் கையளிக்கத் துடிப்பவர்கள்.

கடந்த ஞாயிறன்று லண்டனில் நிகழ்ந்த வேலணை ஒன்றியத்தின் பத்தாம் ஆண்டு நிகழ்வில்மெய்வெளி நாடகப்பயிலகத்தின்சிறார்கள் மற்றும் மெய்வெளி அரங்க இயக்கப் பெரியவர்கள் வழங்கியகடலளவு கனவுஅப்படியே கட்டிப் போட்டுவிட்டது. குழந்தைகள், சிறார்களுக்கே முழுவதுமாய் உரித்தான அவர்களது சொந்த சிந்தனை புலத்துக்குள்ளே வளர்ந்தோர் அத்துமீறிப் பிரவேசிப்பதுவும் ஆக்கிரமிப்பதுவும் எவ்வளவு அபத்தமானது; ஆபத்தானது ; பிஞ்சு மனசுகளின் கலப்படமற்ற இயல்பான பெரும் கனவுகளைச் சிதைப்பது எவ்வளவு கொடூரமானது என்பதை தனது துல்லியமான வெளிப்பாடுகளால் எல்லோர் மனதிலும் ஊன்றிவிடுவதில்வெண்பாவெற்றிபெற்றுவிட்டாள்

கணம் கணம் மாறும் உள்ளுணர்வுகளை கண்களினூடே, முறுவல் முறைப்புகளூடே கொட்டிவிடுகிறாள். பண்ணும் பரதமும்  அச்சொட்டான தமிழ் மொழி ஆளுமையும் அவ்வப்போதுபாலேநடனம் போன்ற ஒயிலான அசைவுகளும் கைவரப்பெற்றுகால்வரப்பெற்று முழுமையை நெருங்கி முகிழ்த்து வருகிறாள் இந்தவெண்பாவுள்நுழைந்திருந்த அந்தச் சிறுமி என்று துணிந்து கூறுவேன். செட்டை கட்டிவந்த கனவுப் பட்டாம்பூச்சிகளில்  மிகச் சிறியவள் கவனத்தை ஈர்த்தாள். பொருத்தமான இடத்தில் முகத்தில் கவலையைக் கொண்டுவந்து நிறுத்தினாள். சிறார்களில் எவருமே அசட்டையாக இருக்கவில்லை. அம்மா,அப்பா,மாமா இயல்பாகத் தோன்றினார்கள். பாட்டி போகப்போக நிமிர்ந்துவிடுவா என  நம்பலாம்.

மேடை அருகிருந்து ஒலி ஒட்டிய சிறுவன் நன்றாக ஈடுபட்டு செயல்பட்டதை அருகிருந்து கவனித்தேன். எனினும் மண்டபத்து ஒலியமைப்பாளர்கள் அரங்க ஆற்றுகை ஒலியமைப்பு ஒரு சிறப்புத்துறை என்பதை உணர்ந்து பயிலவேண்டும். மிகச் சிறிய மேடையாக இருந்தாலும் அரங்கமைப்பு நேர்த்தியையும் அதனை ஒழுங்கமைத்து முகம்காட்டாமல் நின்ற பின்பலவான்களையும் பாராட்டவேண்டும் .

இங்கே சாம் பிரதீபன் வழங்கிய , தொடர்ந்து வழங்கிவருகின்ற   இன்னொரு முக்கியமான பயிற்சியும் என்னைக் கவர்ந்தது. அரங்க விருந்துண்ண வந்திருந்தவர்களுக்கு  “சபைப்பழக்கம்சபை ஒழுக்கம் கண்டிப்புடன் சொல்லிக்கொடுத்த விடயம் தான் அது. ஆம்  எங்களுக்காக மெய்வருத்தி அர்ப்பணிக்கப்படுவதை ஒரு தியானம் போல சிந்தை குவித்து அனுபவிப்போம்

மெய்வெளி அரங்க இயக்கம்கிளை பரப்பி விழுதெறிந்து வியாபிக்க என்றும் எங்கள் வாழ்த்துகள்.