வெளிநாடுகளில் வாழும் இலங்கையா்களுக்கு நிரந்தர விசா.

 

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாதவர்கள் விரைவில் இங்கு வசிக்கவும் வேலை செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிடவிசாவைப் பெற முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கான விதிமுறைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன, விரைவில் திட்டத்தை செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றார். வேறொரு நாட்டில் குடியுரிமை பெற்றதன் பின்னர் குடியுரிமை நிறுத்தப்பட்ட இலங்கையர்கள், இலங்கை அல்லாத அவர்களின் மனைவி மற்றும் அவர்களின் பிள்ளைகள் இங்கு வதிவிட விசாவிற்கு உரிமையுடையவர்கள்.

விண்ணப்பம் செய்பவர் விசாவிற்கு 1,000 அமெரிக்க டொலர் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் இலங்கை அல்லாத மனைவி மற்றும் ஒரு குழந்தைக்கு தலா 400 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்படும். அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாத, வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பல முறையீடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் வேண்டுகோள் விடுக்கும் தனது கொள்கைக்கு இணங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். தற்போதைய தேவையின்படி, முதல் வருடத்தில் 3,000 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 10,000 விண்ணப்பங்களை அவர்கள் எதிர்பார்ப்பதாக இலுக்பிட்டிய கூறினார்.

பிரதம குடிவரவு அதிகாரி (ஈ.டி.ஏ. மற்றும் விசா), எம்.டி. செய்னுல் ரிலா, ஒரு குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வதிவிட விசா வழங்குவது குறித்து முடிவு செய்யும் என்று கூறினார். வதிவிட விசாக்கள் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு அதன் பிறகு புதுப்பிக்கப்படும் என்றார். பெறுநர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும், பொதுச் சேவையில் சேரவும், வியாபாரத்தில் ஈடுபடவும், இலங்கையில் முதலீடு செய்யவும் முடியும். அதேநேரம் விசாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகளும் வர்த்தமானியில் வெளியிடப்படும்.