ராஜபக்ச குடும்பத்தில் இருந்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஸவாக இருக்கக்கூடும் என அந்த கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கின்றார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடவும் தகுதியான ஜனாதிபதி வேட்பாளர் ஸ்ரீலங்கா பொஜன பெரமுனவில் உள்ளார்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.அதற்கு பதிலளித்த சாகர காரியவசம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அவ்வாறான தகுதியானவர்கள் உள்ளார்கள் என குறிப்பிட்டார்.

பஷில் ராஜபக்ஸ இந்த நாட்டிற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்கு மிகுந்த தகுதி வாய்ந்தவர் எனவும் அவர் கூறுகின்றார்.இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் பஷில் ராஜபக்ஸவாக இருக்கக்கூடும் எனவும் அவர் பதிலளித்தார்.

அவ்வாறாயின், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்காது என்பதே உங்களின் நிலைப்பாடா எனவும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.ஜனாதிபதித் தேர்தல் ஒன்றுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் காலம் எஞ்சியுள்ள நிலையில், அது குறித்து தற்போது கருத்து வெளியிடுகின்றமை முறையற்றது என தான் எண்ணுவதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவிக்கின்றார்.