அமெரிக்காவைப் பின்பற்றுவதிலிருந்து ஐரோப்பா விடுபட வேண்டும்! – மக்ரோன்

சீன விஜயத்தின் பின்னர் சர்ச்சை கிளப்பும் கருத்து, தைவான் விவகாரத்தில் தள்ளி நிற்கும் கொள்கை அவசியம் என்கிறார் அவர்.

பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் சீனாவில் மேற்கொண்ட மூன்று நாள் விஜயத்தின் முடிவில் வெளியிட்டிருக்கின்ற கருத்துக்கள் மேற்குலக ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் சலசலப்பை உருவாக்கி உள்ளன. தைவான் நெருக்கடியில் ஐரோப்பா அமெரிக்காவையோ சீனாவையோ பின்தொடரக் கூடாது என்று அவர் எச்சரித்திருக்கிறார்.

ஐரோப்பா அதன் சுயாதிபத்தியத்தை-இறைமையைப்-பேணுவதன் ஊடாக உலக ஒழுங்கில் மூன்றாவது பெரும் சக்தியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கின்ற அவர், அமெரிக்காவில் பெரிதும் தங்கியிருப்பதை ஐரோப்பா குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற சாரப்படக் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

ஐரோப்பா தனக்குச் சொந்தமில்லாத-தன்னுடையதல்லாத – வெளி நெருக்கடிகளில் சிக்குகின்ற ஆபத்தை எதிர்கொள்கின்றது . அது பாதுகாப்பு விடயங்களில் அமெரிக்கா மீது தங்கியிருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அமெரிக்காவைப் பின்பற்றிச் செல்லுமாறு தன் மீது திணிக்கப்படும் அழுத்தங்களை எதிர்ப்பதற்கு ஐரோப்பா முன்வர வேண்டும். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா – சீன இடையிலான மோதலில் சிக்குவது ஐரோப்பாவுக்கு ஒரு பொறியாகவே இருக்கும். அந்த நெருக்கடியில் இரண்டு தரப்புகளில் இருந்தும் விலகி – பக்கம் சாராத கொள்கையையே ஐரோப்பா பின்பற்ற வேண்டும்.

-இவ்வாறு சீன விஜயத்தின் முடிவில் விமானத்தில் வைத்து வழங்கிய ஒரு முக்கிய செவ்வியில் மக்ரோன் கருத்து வெளியிட்டிருக்கிறார். அவரது இந்தக் கருத்துக்கள் மேற்குலகக் கூட்டணிக்குள் குறிப்பாக வோஷிங்டனில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. நேட்டோ கூட்டணி “மூளைச்சாவு” அடைந்து விட்டது என்று மக்ரோன் முன்னர் ஒருதடவை கூறியிருந்ததை ஒத்த பாரதூரமான கருத்துக்கள் இவை என்று அவதானிகள் கூறுகின்றனர்.

பிரான்ஸின் பொருளியல் தினசரியான “லேஸ் எக்கோ”(Les Echos) மற்றும் “பொலிரிக்கோ” (Politico) ஆகிய பத்திரிகைகளது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஐரோப்பாவின் மூலோபாய சுயாதிபத்தியம் (strategic autonomy) குறித்து மக்ரோன் ஆணித்தரமான கருத்துக்களை வெளியிட்டார். எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, சமூக வலைத் தளங்கள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, “முக்கிய விவகாரங்களில் நாங்கள் அடுத்தவரிடம் தங்கியிருப்பதை விரும்பவில்லை” என்றும் மக்ரோன் குறிப்பிட்டார்.

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா – சீனா இடையே புதிதாக முறுகல் நிலை தோன்றியுள்ளது. தைவானின் அதிபர் மத்திய அமெரிக்க நாடுகளில் பத்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருப்பதையும் கலிபோர்னியாவில் தங்கிச் செல்லும் வழியில் அவர் அமெரிக்க சபாநாயகர் ஒருவரைச் சந்திப்பதையும் கடுமையாக ஆட்சேபித்துள்ள பெய்ஜிங், அதற்கு எதிர்வினையாற்றும் விதமாகத் தைவானைச் சூழவுள்ள கடற்பிரதேசத்தில் புதிதாகப் பெரும் போர்ப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.

அதனால் தைவான் நீரிணையில் பதற்ற நிலைமை தோன்றியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே தைவான் நெருக்கடி தொடர்பான ஐரோப்பிய நிலைப்பாட்டை அதிபர் மக்ரோன் வெளியிட்டிருக்கிறார். மக்ரோனின் இந்தக் கருத்துக்களுக்கு மத்தியிலும் , பாரிஸுடனான உறவு மீது வெள்ளை மாளிகை தனது “நம்பிக்கையை ” வெளிப்படுத்ததும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">