சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு தயார்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு.

கடன் பெற்றுள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதைப் போன்று, அதனை மீள செலுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும்.பெரும் எரிமலையின் கீழ் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். அந்த தீயை அணைந்து சிறந்த நாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தே சிந்திக்க வேண்டியுள்ளது என செய்தியாளைகளைச் சந்தித்த  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சியாளர்கள் தற்போதுள்ள நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புள்ளது.தற்போது நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்றார்.ஆனால், கடந்த இரு வருடங்களுக்கு முன்னரிலிருந்தே நாம் இதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு எம்மால் பல சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கை, பொதுஜன பெரமுனவினரின் செயல்பாடுகளால் இடை நிறுத்தப்பட்டன.எனினும் நாம் இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.எனவே, தற்போதேனும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.அதற்கமைய குடும்ப அரசியல் அற்ற- தூய்மையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.பதவிகள் குறித்த எண்ணங்களை முற்றாகத் துறந்து ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் பின்னர் யார் ஆட்சியமைத்தாலும் மீண்டும் நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.