மக்ரோன் விடாப்பிடி! தனது செல்வாக்கை இழக்கவும் தயார் என்கிறார்!!

Kumarathasan Karthigesu

“எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை ஆனாலும் அது நாட்டுக்கு மிக அவசியம்”

தொலைக்காட்சிக்குப் பேட்டி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.
சர்ச்சைக்குரிய ஓய்வூதியச் சட்டம் தொடர்பாக அதிபர் மக்ரோன் இன்று பிரான்ஸின் TF1 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியில், நாட்டு நலனுக்கு அது மிக அவசியமானது என்றும் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கின்ற புதிய சட்டத்தை இந்த ஆண்டு இறுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

“சட்டரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்வோம். வன்முறையை ஒருபோதும் சகித்துக்கொள்ளப்போவதில்லை” சீர்திருத்தச் சட்டம் “சொகுசானது அல்ல, மகிழ்ச்சிக்குரியதும் அல்ல. ஆயினும் நாட்டுக்கு அது மிகவும் அவசியமானது” என்று கூறியுள்ள மக்ரோன், குறுகிய காலத்துக் கணிப்புகள் மற்றும் எதிர்ப்புகளின் மத்தியிலும் தான் நாட்டின் நலனையே  முதன்மைப்படுத்தி இந்த முடிவைத் தெரிவுசெய்துள்ளதாகவும் அதற்காகத் தனது” செல்வாக்கை இழக்கவும்” தயாராய் இருக்கிறார் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.

“இந்த சீர்திருத்தம் அவசியம், அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அதைச் செய்யாமல் இருப்பதையே நான் விரும்பினேன்”-என்றும் அவர் பதிலளித்தார்.

ஓய்வூதியத் திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடுவதைத் தவிர்த்து அரசமைப்பின்  49.3 பிரிவின் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமாக நிறைவேற்றிய பின்னர் – நாடு அதற்கு எதிரான உணர்வலைகளால் எரிந்துகொண்டிருக்கின்ற சூழ்நிலையில் – முதல் முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்து அது குறித்துப் பேசியுள்ளார் மக்ரோன்.

தொலைக்காட்சிச் செய்தியாளரது கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், பிரதமர் எலிசபெத் போர்ன் பதவியில் தொடர்வார் என்பதையும் எதிர்க்கட்சிகள் கோருவது போன்று புதிய அரசாங்கத்தை அமைக்கப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார்.

இடைக்காலத் தேர்தலையோ அல்லது மக்கள் கருத்தறியும் பொதுசன வாக்கெடுப்பையோ அரசு நடத்தாது என்பதை அவர் கோடிகாட்டியுள்ளார்.

பெரிய கம்பனிகள் தங்கள் லாபத்தை தொழிலாளர்களுக்குப் பங்கிடுகின்ற விதமான புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக மக்ரோன் கூறியிருக்கிறார்.புதிய குடியேற்றச் சட்டம் உட்படச் சில சீர்திருத்தச் சட்டமூலங்கள் வரும்  நாட்களில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியச் சீர்திருத்தத்தை முன்வைத்த பின்னர் மக்கள் மத்தியில் அதிபர் மக்ரோனின் செல்வாக்கு என்றும் இருந்திராதவாறு முப்பது வீதத்துக்குக் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.2027இல் நடைபெறவுள்ள அடுத்த அதிபர்  தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார் என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறார்

இதேவேளை, மக்ரோனின் தொலைக்காட்சிப் பேட்டி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்திருப்பதாக எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் சீறிப்பாய்ந்துள்ளனர்.

கடந்த பல நாட்களாக வீதிகளில் இறங்கி எதிர்ப்புத் தெரிவித்துவருகின்ற லட்சக் கணக்கான மக்களுக்குப் பதில் எதனையும் தெரிவிப்பதைத் தவிர்த்து அவர்களை முட்டாள்களாக்கும் விதமாகப் பேட்டியில் அரசுத் தலைவர் கருத்து வெளியிட்டிருக்கிறார் என்று அவர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">