கருங்கடலுக்கு மேலே ரஷ்யப்போர் விமானம் அமெரிக்காவின் ட்ரோனுடன் மோதியது!

Kumarathasan Karthigesu

ஆபத்தான விளையாட்டு என்கிறது வோஷிங்டன்

அமெரிக்கா அதன் நவீன அதி உயர் பறப்புச் சக்தி கொண்ட வேவு ட்ரோன் (drone) விமானம் ஒன்றைக் கருங்கடல் பிரதேசத்தில் இழந்துள்ளது. ரஷ்யாவின் சுகோய் ரகப் போர் விமானங்கள் கருங்கடலுக்கு மேலே

சர்வதேச வான் பரப்பில் வைத்து அமெரிக்காவின் ஆட்களின்றிப் பறக்கும் அந்த ட்ரோன் விமானத்தை மோதியுள்ளன என்று அமெரிக்கப் படைகளது ஐரோப்பியக் கட்டளைப் பீடம் தெரிவித்துள்ளது.

கருங்கடலுக்கு மேலே வழக்கமான வான் பறப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எம்கியூ – 9 ரீப்பர் (MQ-9 Reaper) ரக ட்ரோன் விமானத்தையே ரஷ்யாவின் சுக்கோய் சு – 27 (Sukhoi su-27) ரகப் போர் விமானங்கள் இரண்டு இன்று காலை வழிமறித்து அதன் இறக்கைப் பகுதிகளை மோதிச் சேதப்படுத்தின என்றும் அதனால் அது கடலில் வீழ்ந்து மூழ்கியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தச் செயலை“ஆபத்தானது”, “தொழில் முறை சாராதது”, “தவறான எடைபோடல்களையும் எதிர்பாராத யுத்த விரிவாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடியது” – என்று அமெரிக்கப் படைகளின் கட்டளைப் பீடம் எச்சரித்துள்ளது.

கருங்கடல் வான் பரப்பில் உக்ரைனுக்கு அருகே உள்ளூர் நேரப்படி இன்று காலை இடம்பெற்ற இந்த வான் வெளிச் சம்பவம் தொடர்பாக மொஸ்கோ தரப்பில் இருந்து எந்தத் தகவல்களும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

ரஷ்ய விமானங்கள் தமது ட்ரோனை மோதுவதற்கு முன்பாக அதன் மீது பல தடவைகள் எரிபொருளை விசிறிச் செயலிழக்கச் செய்ய முயன்றன என்று அமெரிக்கா குற்றம் சுமத்தி உள்ளது. கருங்கடல் உட்பட சர்வதேச வான் பரப்பில் அமெரிக்கா மற்றும் அதன் நேச அணியின் விமானங்களைச் சந்திக்கின்ற சமயத்தில் ரஷ்ய விமானிகள் புரிகின்ற புதிய பாணியிலான ஒரு செயலை இந்தச் சம்பவம் காட்டுவதாகவும் அமெரிக்கப் படைகளின் ஐரோப்பியக் கட்டளைப் பீடம் (EUCOM) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வோஷிங்டனில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதரை அழைத்து ட்ரோன் மோதி வீழ்த்தப்பட்ட சம்பவத்துக்காகக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் யுத்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா வேவுப் பணிகளுக்காக அதன் நவீன ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தி வருகிறது. ஆட்களின்றிப் பறக்கின்ற “எம்கியூ – 9 ரீப்பர்” ட்ரோன்கள் 20 மீற்றர்கள் நீள இறக்கை கொண்ட மிகப் பெரிய அளவுள்ள வான் ஊர்திகள் ஆகும். வானில் அதி உயரத்தில் பறந்தவாறு வேவு பார்ப்பதற்கென விசேடமாக வடிவமைக்கப்பட்டவை.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">