69 இலட்சம் வாக்குகளை வாரி  தவறிழைத்தவர்கள் பொதுமக்களே:  கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு சந்திரிகா அழைப்பு,


நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தில் அனைவரையும் கட்சி, இன, மத பேதமின்றி ஒன்றிணையுமாறு அழைப்பு விடுகின்றோம்.அந்த பயணத்திற்கு வழிகாட்டவும், தலைமைத்துவத்தை வழங்கி ஆலோசனைகளை வழங்குவதற்கு தான் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், தனது ஆட்சி காலத்தில் ஆகக் கூடியது நூற்றுக்கு ஒரு சதவீத வட்டி அடிப்படையில் மாத்திரமே கடன் பெறப்பட்டது. ஆனால் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சீனாவிடமிருந்து 9 சதவீத வட்டிக்கு கடன் பெறப்பட்டது.மோசடி செய்வதற்காகவே அவர்கள் இவ்வாறு கடன் பெற்றனர். இவ்வாறு இவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாமல் இன்று  கடும் நெருக்கடிகளை மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.

நாட்டின் இன்றைய நிலைமைக்கு குறிப்பாக மக்கள் பொறுப்பு கூற வேண்டும். இதில் பிரதானமாக தவறிழைத்தவர்கள் பொது மக்களாவர். சரியாக ஆராய்ந்து பார்க்காமல் 69 இலட்சம் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர்.இந்த வீழ்ச்சியை முற்றாக சரி செய்வதற்கு 25 – 30 ஆண்டுகளாவது செல்லும். எனவே குறைந்தபட்சம் இப்போதிருந்தாவது நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும்.கட்சி, இன, மத பேதமின்றி அனைவரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

அதற்கு தலைமைத்துவம் வகிக்கவும;, வழிகாட்டவும், ஆலோசனைகளை வழங்கவும் தான் தயாராகவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார். எனவே தேர்தல் காலத்தில் தெரிவிக்கப்படும் பொய்களை நம்பி மக்கள் ஏமாந்து விடக் கூடாது. வாக்கு கேட்பவர்கள் கூறும் வாக்குறுதிகளை நன்று ஆராய்ந்து, அவர்களால் அவற்றை நிறைவேற்ற முடியுமா? அதற்கு அவர்கள் தகுதியானவர்களா என்பதை நன்கு அறிந்து சிந்தித்து வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தர்.