கடற்கன்னி சிலையின் அடியில் ரஷ்யக் கொடி பொறிப்பு!
Kumarathasan Karthigesu
விசமிகளைத் தேடும் டெனிஷ் பொலீஸார்.
டென்மார்க் தலைநகரில் உல்லாசப் பயணிகளைக் கவர்கின்ற கடற்கரைக் கன்னியின் சிலை (Little Mermaid statue) அமர்ந்துள்ள கற்பாறையில் ரஷ்யக் கொடியின் மூவர்ணங்கள் பூசப்பட்டிருப்பதையே படத்தில் காண்கிறீர்கள். சிலையின் பீடம் இவ்வாறு பெயின்ட் பூசி அலங்கோலப்படுத்தப்பட்டிருப்பது இன்று விடிகாலை தெரிய வந்தது.
டெனிஷ் பொலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். போரில் டென்மார்க் உக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்கிவருகின்ற நிலையில் கொப்பனேஹன் நகரத்தின் முக்கிய அடையாளச் சின்னம் மீது ரஷ்யாவின் கொடியை வரைந்தவர்கள் யார் என்பது கண்டறியப்படவில்லை.
தலைநகர் கொப்பனேஹனில் லாங்கலினி பியர் (Langelinie Pier) கடற்கரையை அண்டி அமைந்துள்ள இந்த லிட்டில் மெர்மெய்ட் சிலை இவ்வாறு மாசுபடுத்தப்படுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அது அலங்கோலப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டு தடவைகள் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது.
வெண்கலம் மற்றும் கிரனைட் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்தச் சிலையை எட்வர்ட் எரிக்சன் (Edvard Eriksen) என்ற சிற்பியே எலின் (Eline) என்ற தனது மனைவியின் சாயலில் வடிவமைத்தார் என்று கூறப்படுகிறது.சிலையின் உருவம் ஹான்ஸ் கிறிஸ்டியன் அன்டர்சனின்(Hans Christian Andersen) விசித்திரக் கதையாகிய “த லிட்டில் மெர்மெய்ட்” டில் (The Little Mermaid”) உள்ள தேவதையின் உருவகம் என்றும் சொல்லப்படுவதுண்டு.
23,ஓகஸ்ட் 1913 இல் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு வந்த இந்தச் சிலை டென்மார்க்கின் பிரபல மதுபானத் தயாரிப்பாளர்களான “கார்ல்ஸ்பெர்க்கின்” (Carlsberg) நிறுவுனர் ஜே.சி. ஜேக்கப்சனின் மகனான கார்ல்ஸ் ஜேக்கப்சனால் கொப்பனேஹன் நகரத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.