இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து! அமைச்சர் பதவி விலகினார்!

Kumarathasan Karthigesu

“மனிதத் தவறே காரணம்” என்கிறார் கிறிஸ் பிரதமர் ,மூன்று நாள் தேசிய துக்கம்,குறைந்தது 40 பயணிகள் பலி!!

கிறிஸ் நாட்டின் மத்திய நகரமாகிய லாரிசாவுக்கு(Larissa) அருகே பயணிகள் ரயில் ஒன்று சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்து நேர்ந்திருக்கிறது.

தலைநகர் எதென்ஸில்(Athens) இருந்து தெசலோனிகி (Thessaloniki) என்ற நகருக்கு 350 பேருடன் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் அதே தண்டவாளத்தில் நேர் எதிராக வந்த சரக்கு ரயில் ஒன்றுடன் மோதித் தீப்பற்றியது என்று அறிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களது உடல்கள் அடையாளம் காண முடியாதவாறு கருகிக் காணப்பட்டன.பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகளுமே மோதிய வேகத்தில் வெடித்துச் சிதறித் தடம் புரண்டு தீப்பற்றி எரிந்தன என்று கூறப்படுகிறது.

பெரும் சத்தத்தை அடுத்துத் தீப் பிழம்பு தோன்றியதால் தாங்கள் “நில நடுக்கம்” ஏற்பட்டுவிட்டதாக எண்ணிப் பீதியடைந்தனர் என்று உயிர்பிழைத்த பயணிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சம்பவம் நடைபெற்ற இடத்தைச் சென்று பார்வையிட்ட கிறிஸ் நாட்டின் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis),” மனிதத் தவறே” இந்த அனர்த்தத்துக்குப் பொறுப்பு என்று பின்னர் நாட்டுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னராக நேர்ந்த இந்த மோசமான விபத்தில் குறைந்தது 40 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 85 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சுமார் 50 பேரைக் காணவில்லை என்று அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் சரியாகத் தெரியவரவில்லை. ஆயினும் லாரிசா(Larissa) ரயில் நிலையத்தின் அதிபர் உடனடியாகக் கைது செய்யப் பட்டிருக்கிறார். ரயில்வே துறைப் பணியாளர்கள் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கிறிஸ் நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ள இந்த விபத்துக்கான பொறுப்பை ஏற்று அந்த நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கோஸ்டாஸ் கரமன்லிஸ் (Kostas Karamanlis) உடனடியாகத் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார். பதவி விலகுவது தனது கடமை என்றும், குறைந்தபட்சம் பாதிக்கப்பட்டவர்களது நினைவுகளை மதித்துப் போற்றுவதற்குத் தன்னால் செய்யக் கூடியது அதுவே என்றும் அமைச்சர் ஓர் அறிக்கையில்தெரிவித்திருக்கிறார்.

நாட்டின் “பல வருடத் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்” என்று கரமன்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ் நாட்டின் ரயில்வே கட்டமைப்பு மிகப் பழையது. அது இன்னமும் தொழில்நுட்ப ரீதியாக நவீன தொடர்பு முறைகளுக்கு மாற்றியமைக்கப்படவில்லை என்று குறை கூறப்படுகிறது.

நாட்டின் ரயில்வே போக்குவரத்து வலைப் பின்னலையும் தனியார் மயமாக்கலையும் இந்த அனர்த்தம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

கிறிஸ் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்து என்று கூறப்படும் இந்த அனர்த்தத்தை அடுத்து நாட்டின் ஜனாதிபதி மூன்று நாள் தேசிய துக்கத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, அதிபர் மக்ரோன் விடுத்த செய்தியில் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை வெளியிட்டிருக்கிறார்.

“பிரான்ஸ், கிறிஸ் மக்களின் பக்கம் நிற்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஜேர்மனி, இத்தாலி உட்பட பல நாடுகள் கிறிஸ் மக்களுக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் வெளியிட்டிருக்கின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">