அமெரிக்காவுக்கு மேலாகப் பறந்த சீன பலூனால் பதற்றம்!

Kumarathasan Karthigesu

“உளவு ஊர்தி” என்று பென்ரகன் அறிவிப்பு,பீஜிங் வருத்தம் தெரிவிப்பு,பிளிங்கன் விஜயம் தாமதம்.

அமெரிக்கா, கனடா நாடுகளின் வான்பரப்பில் தென்பட்ட மர்ம பலூன் தொடர்பாகப் பென்ரகன் விசாரணை நடத்தி வருகிறது. அதனைச் சுட்டு வீழ்த்துமாறு முதலில் அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார் என்றும் ஆனால் சிதைவுகள் தரையில் வீழ்ந்து சேதங்களை ஏற்படுத்தலாம் என்பதால் அதனைச் சுட்டு வீழ்த்தும் முடிவைப் பாதுகாப்பு அதிகாரிகள் பின்னர் தவிர்த்துள்ளனர் என்றும் அமெரிக்கச் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தெற்கு மொன்ரனா (Montana) மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஆட்களின்றி பறக்கும் அந்த பலூன் அவதானிக்கப்பட்டது. அது ஒரு சீன உளவு வானூர்தி என்று பென்ரகன் உடனடியாக அறிவித்தது. பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் அவசர கூட்டம் ஒன்றைக் கூட்டினர். தகவல் சீனாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இருநாடுகளிடையேயும் ராஜதந்திர மட்டத்திலும் வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையிலும் பதற்றமான ஒரு நிலைவரத்தை அந்த பலூன் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் தனது ஆய்வு பலூன் அமெரிக்க வான்பரப்பினுள் பிரவேசித்தமைக்காக பீஜிங் வருத்தம் தெரிவித்துள்ளது. அது ஒரு “சிவில் வானூர்தி” என்றும் வானிலை சம்மந்தமான ஆய்வுகளுக்காகவே அது விண்ணில் பறக்கவிடப்பட்டது எனவும் சீன வெளிவிவகார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. மேலதிக தகவல்களை வழங்குவதற்காக அமெரிக்கத் தரப்புடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் ஞாயிறு – திங்கள் இரு தினங்களிலும் பீஜிங் நகருக்கு மேற்கொள்ளவிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தை இந்த பலூன் விவகாரம் காரணமாக ஒத்திவைத்துள்ளார்.

மர்மமாகப் பறந்த அந்த பலூன் கனடாவின் சில பகுதிகள் மீதும் தென்பட்டதை அந்நாட்டின் அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். வளிமண்டலத்தின் அடர்த்தி மற்றும் காலநிலை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே இத்தகைய பலூன்கள் (stratospheric balloon) பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் சீனாவின் அதுபோன்ற ஒரு பலூன் அமெரிக்க வான்பரப்பினுள் எதற்காகப் பிரவேசித்தது என்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தைவான் விவகாரம் தொடர்பில் இரு நாடுகள் இடையேயும் அடிக்கடிப் அடிக்கடிப் பதற்றங்கள் ஏற்பட்டு வருவது வழக்கம். 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஒருவர் பீஜிங் செல்ல இருந்தது சமயத்தில் இந்த பலூன் அத்துமீறல் நிகழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">