உப்புச் சுரங்கங்கள் நிறைந்த உக்ரைனிய நகரத்தை ரஷ்யா கைப்பற்றியது!

Kumarathasan Karthigesu

வாக்னர் கூலிப்படைகளோடு நடந்த இரத்தம் தோய்ந்த சமர்.

உக்ரைனின் கிழக்கில் “உப்பின் கொடை” (“a gift of salt”) என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற உப்புச் சுரங்கங்கள் நிறைந்த சோலேடர் (Soledar) மற்றும் பாக்முட் (Bakhmut) நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிட்டன எனச் செய்திகள் வருகின்றன.

ரஷ்யாவின் சக்தி வாய்ந்த “வாக்னர்” (Wagner) என அழைக்கப்படும் தனியார் கூலிப்படைகளே இரத்தம் தோய்ந்த கடும் சண்டைக்குப பின்னர் இந்தப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன. ஆனால் கடந்த சில நாட்களாக அதனை மறுத்துவந்த உக்ரைன் அரசு அங்கே தொடர்ந்து மோதல்கள் நடக்கின்றன என்று தெரிவித்திருந்தது.

எனினும் உக்ரைன் இராணுவப் பேச்சாளர் ஒருவர் சோலேடர் (Soledar) நகரம் எதிரியிடம் வீழ்ந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த பல மாதகாலமாக கட்டாயத்தின் பேரிலும் சிறைகளில் இருந்தும் திரட்டி ஆட்சேர்ப்புச் செய்த ஆயிரக்கணக்கான தொண்டர் படைகள் சகிதம் வாக்னர் தனியார் இராணுவக் கூலிப் படைகள் பாக்முட் (Bakhmut) மற்றும் சோலேடர் (Soledar) நகரங்கள் மீது எண்ணுக்கணக்கற்ற பல தாக்குதல்களையும் ஷெல் வீச்சுகளையும் நடத்தி அவற்றைக் கைப்பற்ற முயன்று வந்தன. அதனால் உல்லாசப் பயணிகளைக் கவருகின்ற உப்புச் சுரங்கங்கள் மற்றும் கனிமக் குகைகள் நிறைந்த அந்தப் பிரதேசம் பேரழிவுகளைச் சந்தித்தது. இரண்டு தரப்புகளிலும் பலத்த உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. கடுமையானதும் சிக்கலானதுமான சண்டைகளுக்குப் பின்னர் அங்கிருந்து பின்வாங்க நேர்ந்துள்ளதாக உக்ரைன் தரப்பு இப்போது தெரிவித்துள்ளது.

சோலேடர் உப்புச் சுரங்கங்கள் உலகின் உப்புத் தேவையில் பெரும் பங்கை நிறைவு செய்பவை. சோவியத் ஒன்றிய காலத்தில் அதன் நாற்பது சதவீதமான உப்புத் தேவையைப் பூர்த்திசெய்து வந்தன.

போர் தொடங்குதற்கு முன்னர் உக்ரைனுக்குத் தேவையான 99 வீதமான உப்பை அந்தச் சுரங்கங்களே வழங்கி வந்தன.

சோலேடர் உப்புச் சுரங்கங்களின் இழப்பு பொருளாதார ரீதியில் அதிக முக்கியத்துவம் கொண்டது அல்ல. ஆனால் அங்குள்ள நிலத்தடி நகரங்கள் இராணுவ ரீதியில் ரஷ்யாவுக்குச் சாதகமான பல கள நிலைமைகளைக் கொண்டவை. நிலத்தடியில் படைகளையும் வாகனங்களையும் பாதுகாப்பாக நிலைகொள்ளச் செய்வதற்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட வலையமைப்புக் கொண்ட உப்புக் கனிமச் சுரங்கங்கள் புவியியல் ரீதியில் வாய்ப்பானவை.

இந்த உப்புக் கனிம மலைகள் அங்கு எவ்வாறு உருவெடுத்தன என்பது பற்றிய உறுதியான புவியியல் ஆதாரங்கள் ஏதும் இல்லை. ஆனால் மிகத் தொன்மையான காலத்தில் அங்கிருந்த உப்புக் கடல் உறைந்து மலையாகத் தோற்றம் பெற்று வளர்ந்தது என்று சொல்லப்படுகிறது.

உப்பு அள்ளுவதற்காக மலையில் தோண்டப்பட்ட குகைகளே சுமார் இரு நூறு கிலோ மீற்றர்கள் நீளமான வலையமைப்பாக விளங்குகின்றன.

போர் தொடங்குதற்கு முந்திய காலங்களில் உக்ரைனுக்கு வரும் உல்லாசப் பயணிகளைக் கவருகின்ற ஒரு மையமாக சோலேடர் நிலத்தடி நகரங்கள் விளங்கின. அங்கு உப்புக் குகைகளின் உள்ளே இன்னிசை அரங்குகள், உணவகங்கள், விளையாட்டுத் திடல்கள் என்று பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள்  நிறைந்திருந்தன. (படங்கள்).

குகைகளுக்குள் சென்று உப்புக் காற்றைச் சுவாசிப்பதன் மூலம் நீண்ட கால சுவாச மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்தலாம் என்று நம்பப்படுவதால் கடும் நோயாளிகளும் அங்கு பயணம் செய்வது வழக்கம்.

இப்போது இந்தப் பிரதேசம் அழிவுண்ட பூமியாகக் காட்சி கொடுக்கிறது. டொன்பாஸ் பிராந்தியத்தின் கிழக்கே அமைந்த சோலேடர் (Soledar) நகரத்தை எதிரியிடமிருந்து பாதுகாப்பதற்காக நடந்த கடும் இரத்தம் தோய்ந்த சண்டைகளில் பல நூற்றுக் கணக்கானஉக்ரைன் வீரர்கள் உயிரிழந்தனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">