நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர் ஐவர் தப்பியோட்டம்!

Kumarathasan Karthigesu

ரியூனியன் விமான தளத்தில் காத்திருந்த வேளை சம்பவம்.

ரியூனியன் தீவின் ​​Gillot விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர்களில் ஐவர் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். பின்னர் அவர்கள் வெவ்வேறு இடங்களில் வைத்துப் பொலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

இலங்கையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி படகு மூலம் ரியூனியன் தீவுக்கு வந்தடைந்த குடியேறிகள் 53 பேர் அடங்கிய தொகுதியினரில் ஐவரே Gillot விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கடந்த திங்களன்று இவ்வாறு தப்பியோடி உள்ளனர். அவர்களோடு வேறு 16 பேரும் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர். வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் ஒன்றில் அவர்கள் அனைவரும் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்புக்கு அனுப்பிவைக்கப்படவிருந்தனர்.

35 – 40 வயதுகளுக்கு இடைப்பட்ட ஐந்து குடியேறிகளே தப்பியோடினர் என்றும் அவர்கள் ஐவரும் பின்னர் கடந்த புதனன்று தீவின் இரு இடங்களில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் எனவும் ரியூனியன் பொலீஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தப்பியோடுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் தங்கியிருந்த இடத்தில் அவர்களால் ஏற்படுத்தப்பட்டவை எனக் கூறப்படுகின்ற சேதங்களுக்காக அவர்கள் பொலீஸ் நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர் என்று ரியூனியன் செய்திச் சேவை ஒன்று தெரிவித்தது.

பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகப் பிராந்தியமாகிய ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து படகுகளில் குடியேறிகள் வருகை தருவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு முதல் இதுவரை சுமார் நானூறு பேர் இவ்வாறு படகுகளில் அங்கு வந்திருந்தனர். அவர்களில் சுமார் நாற்பது பேருக்கு மட்டுமே அங்கு புகலிடம் அனுமதிக்கப்பட்டது. ஏனையோர் கட்டம் கட்டமாக சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">